சென்னை:''அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, அவரது உடலில் இருந்து, எந்த உறுப்பையும் அகற்றவில்லை,'' என, டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப் பட்டன. அதனால், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து, சென்னை, நுங்கம் பாக்கம், தனியார் ஓட்டலில்,
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே, நேற்று விளக்கம் அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
நோய் தொற்று காரணமாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, மூச்சுத் திணறல் இருந்தது. முதல் கட்டமாக, அவரின் உடலை சமநிலைப்படுத்தி, சகஜ நிலைக்கு கொண்டு வர தேவையான சிகிச்சைகள் தரப்பட்டன.
தொடர் பரிசோதனையில் அவருக்கு, 'செப்சிஸ்' என்ற, ரத்தத்தில் பாக்டீரியா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சிறுநீரகத்திலும் தொற்று பாதித்திருந்தது. அவை, உடலில் இருந்த மற்ற உறுப்புகளை பாதித்தன. அப்பல்லோ மருத்துவமனையில், சர்வதேச தர மருத்துவ வசதி உள்ளதால், ஜெயலலிதாவை, மேல் சிகிச்சைக்காக, வெளிநாட்டிற்கு அழைத்து செல்லவில்லை.
தொடர் சிகிச்சையால், ஜெ., உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தன்னை சுற்றி நடக் கும் நிகழ்வுகளை அறிந்தார். பிடித்த உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டார். அறையில், சிறிது துாரம் நடைபயிற்சி செய்தார். என்னிடம், உணவு, 'டிவி' நிகழ்ச்சிகள், குடும்பம் உள்ளிட் டவை குறித்து கலந்துரையாடினார்.
தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளி அறையில், கண்காணிப்பு கேமரா வைக்கக் கூடாது;
புகைப்படமும் எடுக்கக் கூடாது. எனவே, அவர் சிகிச்சை பெற்ற புகைப்படங் களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து, சசிகலா மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தேன்.
லண்டனில் இருந்தாலும், சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை தெரிவித்தேன். யாரும் எதிர்பாராத வகையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே, 'எம்கோ' கருவி பொருத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி, அவர் மரணமடைந்தார். ஜெ., உடலில் இருந்து, எந்த உறுப்புகளும்அகற்றப்பட வில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
சிகிச்சை செலவு ரூ.5.5 கோடி
'ஜெயலலிதாவுக்கான சிகிச்சை செலவு எவ்வளவு; யார் செலுத்தியது' என, நிருபர்கள் கேள்வி எழுப்பி னர். அதற்கு பதில் அளித்த, சென்னை மருத்துவக் கல்லுாரி டாக்டர் பாலாஜி, ''சிகிச்சைக்கு, 5.50 கோடி ரூபாய் செலவானதாக, அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.குடும்பத்தினரிடம், 'பில்' அளிக்கப் பட்டதாக டாக்டர்கள் கூறினர்,'' என்றார். எந்த குடும்பம் என, கேட்டதற்கு, பதில் கூற மறுத்து விட்டார்.
'உடல் பதப்படுத்தப்பட்டது'
சென்னை மருத்துவக் கல்லுாரி பேராசிரியை, சுதா சேஷய்யன் கூறியதாவது:முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு, அஞ்சலி செலுத்த மக்கள் வருவர். அவர்களின், உடல் பாதிக்கக் கூடாது என்பதற்காக, பதப்படுத்துவது வழக்கம். ஜெ., மறைவு குறித்த தகவலை, சுகாதாரத்துறை அமைச்சரும், செயலரும், என்னிடம் தெரிவித்தனர்.
உடனே, என் தலைமையிலான, அரசு பொது மருத் துவமனை டாக்டர்கள், அப்பல்லோ சென்றனர். ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தும் பணி, அன்றிரவு, 12:20 மணிக்கு துவங்கியது. அதற்காக, அவரின் உடலில், 5.50 லிட்டர் திரவம் செலுத்தப்பட்டது.
முதலில், இடது கால் வழியாக, திரவம் அனுப்பப் பட்டது; பின், மற்ற பகுதிகளின் மூலம் செலுத்தப் பட்டது. பணிகள், 20 நிமிடங்கள் நடந்தன. சிகிச்சைக் காக, நீண்ட நாட்கள் படுக்கையில் இருக்கும் போது,
உடலில் புள்ளிகள் ஏற்படும். அதன்படியே, ஜெயல லிதாவின் முகத்தில் புள்ளிகள் இருந்தன. அவரின் உடலில் எந்த ஓட்டைகளும் இல்லை. ஓட்டை இருந்தால், திரவம் வெளிவந்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
'அரசு வலியுறுத்தலால் விளக்கம்'
'ஜெயலலிதா மறைந்து, இரு மாதங்களுக்கு மேலாகிறது; இப்போது ஏன் விளக்கம் அளிக்கி றீர்கள்' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த டாக்டர் பாலாஜி, ''ரிச்சர்ட், வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க, சென்னை வந்துள்ளார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஜெ., மறைவு குறித்த வதந்தி களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவர் மூலம் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது,'' என்றார்.
அதை கவனிக்காத ரிச்சர்ட், ''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்கும்படி, என்னை அரசு வலியுறுத்தியது; அதற்காக விளக்கம் அளிக்கிறேன்,'' என்றார். இவ்வாறு, பல கேள்விகளுக்கு, டாக்டர்கள் முரண்பட்ட தகவலை அளித்தனர். புரியும்படி பேச முயன்ற டாக்டர்களை, ரிச்சர்ட் தடுத்த படியே இருந்தார்.
'கவர்னர் பார்த்தார்'
டாக்டர் பாலாஜி கூறுகையில், ''கவர்னர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவ மனைக்கு, முதலில் வந்த போது, அவரிடம், ஜெ.,க்கான சிகிச்சைகள் குறித்து விளக்கமாக கூறப்பட்டது. இரண்டாவது முறை வந்த போது, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயலலி தாவை, அந்த அறையின் கண்ணாடி வழியாக, கவர்னர் பார்த்தார்,'' என்றார்.
ஒரே முறை கைரேகை
''சிகிச்சையின் போது, சுயநினைவுடன் இருந்த ஜெயலலிதா, என் முன்னிலையில் தான், இடைத்தேர்தல் தொடர்பான படிவத்தில், கைரேகை வைத்தார்,'' என, டாக்டர் பாலாஜி கூறினார். பின், அவரிடம், 'வேறு ஏதேனும் ஆவணங்களில் ஜெயலலிதா, கைரேகை வைத்தாரா' என்ற, கேள்விக்கு, ''அந்த ரேகை மட்டும் என் முன்னிலையில் வைக்கப்பட்டது; மற்றவை பற்றி, அப்பல்லோ டாக்டர் பாபுவிடம் கேளுங்கள்,'' என்றார்.டாக்டர் பாபுவோ, ''அப்படி ஏதும் நடக்கவில்லை,'' என்றார்.