சென்னை : மாணவர்கள் போர்வையில், மெரினாவில் கூடியிருந்த சமூக விரோத கும்பல், தேசிய கொடியை அகற்றி விட்டு, தனித்தமிழ்நாடு கோஷத்துடன், புதிய கொடியை, போர் நினைவு சின்னம் மற்றும் கோட்டையில் பறக்க விட, திட்டம் தீட்டியது அம்பலமாகிஉள்ளது.சென்னை, மெரினாவில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் வன்முறையின்றி, கட்டுக்கோப்பாக இருந்த மாணவர்களுடன், மாணவியரும் போராட்டத்தில் இறங்கினர். இதையெல்லாம், பார்த்த பொதுமக்கள், அறவழி போராட்டத்திற்கு, அவர்களாகவே முன்வந்து ஆதரவையும், போராட்ட களத்தில் பங்கேற்றும் வந்தனர்.ஜல்லிக்கட்டை நோக்கி சென்ற மாணவர்கள் போராட்டம், சில நாட்களில் திசை மாறியது. அவசர சட்டம் இயற்றிய பின்பும், அதில் உள்ள ஷரத்துக்களை, மாணவர்களுக்கு தெரியப்படுத்திய பின்பும், போராட்டம் கைவிடப்படவில்லை. தமிழக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், போராட்ட களத்தில் எதிர்ப்புகள் வலுத்தன.
மத்திய அரசு 'அலர்ட்':
போராட்டத்தில் மாணவர்களுடன், மதவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவியிருப்பதாக, மத்திய அரசு, தமிழக அரசுக்கு, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை தகவலை அனுப்பியது.
அவற்றின் விவரம்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, மெரினாவில் கூடிய, மாணவர்களின் போராட்டம், ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்தது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஒரு சில போலீசாரே கூட்டத்தில், 'மைக்' பிடித்து பேச ஆரம்பித்ததால், ஆயிரக்கணக்கில் இருந்த மாணவர்கள் கூட்டம், லட்சக்கணக்கில் கூட துவங்கியது. தமிழ் ஆதரவாளர்கள் என கூறிக் கொள்ளும், பல்வேறு அமைப்புகள், கூட்டத்தில் புகுந்தன. அந்த அமைப்புகள், சமீப காலமாக, போராட்டத்தை நடத்த போதிய களம் இல்லாமலும், அவற்றிற்கு நிதி திரட்ட முடியாமலும், தடுமாறி வந்தன. இந்த அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும், ஒரு சினிமா இயக்குனர், கடந்த சில மாதங்களாக, சென்னையில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் திண்டாடி வந்தார். அவரிடம், சில நாட்களாக லட்சக்கணக்கில் பணம் புழக்கத்தில் இருக்கிறது. இத்தகவலை, மத்திய உளவுத்துறை விசாரித்து, அதை உறுதி செய்துள்ளது. இதே பின்னணியில், மதுரையைச் சேர்ந்த, மதவாத சிந்தனை கொண்ட, சினிமா இயக்குனரும் இருக்கிறார். இவர்களை போலவே, சினிமா இயக்குனராக இருந்து, தற்போது, ஒரு கட்சியின் பெயரில் வலம் வரும் நபர், தன்னை புலி அமைப்பின் பிரதிநிதியாக பறைசாற்றிக் கொள்பவர், உண்மையிலேயே, கிறிஸ்தவ பின்புலத்தை கொண்டவர். அவருக்கு, தமிழகத்தில் ஒரு சில கிறிஸ்தவ கல்லுாரிகள் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள், பணத்தை வாரி இறைத்துள்ளன. இதை தவிர, மாற்று மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மீனவர்கள் அமைப்பிற்கும், சமூக விரோத கும்பல் லட்சங்களையும், கோடிகளையும் வாரி இறைத்துள்ளது. இவர்களுடன், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய, ஒரு கும்பலும் இணைந்து கொண்டது. இவர்களுக்கு, தென் மாவட்டத்தில் உள்ள, தாது மணல் மாபியா கும்பல் நிதியுதவி அளித்துள்ளது. இந்த கும்பலின் பின்னணியில், தமிழகத்தில் அதிகார மையமாக விளங்கும், ஒரு நபரும் இணைந்துள்ளார். அவர், பிரதமர் மற்றும் முதல்வர், பன்னீர்செல்வத்திற்கு எதிராக, மாணவர்களை திசை திருப்பி வருகிறார்.இந்த அமைப்புகளின் தலைவர்கள், களத்தில் இறங்காமல், அவர்களது இயக்கத்தில் உள்ள இளைஞர்களை களத்தில் இறக்கி, மாணவர்களுடன் இணைத்துள்ளனர். இவர்கள் தான், தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக, பல்வேறு பிரசாரங்களை செய்து வருகின்றனர். இந்த இயக்கங்களுடன் அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வரும் நக்சல் பாரி, மாவோயிஸ்ட், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புகளின் ஆதரவாளர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அல்லாது, மாணவர்களை மூளைச்சலவை செய்யும், பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களும், மாணவர்கள் போர்வையில், கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்துள்ளனர். இவர்களில் சிலர், 'தனித்தமிழ்நாடு வேண்டும்' என்ற கோஷத்தை எழுப்பியதோடு, தேசிய கொடியை அகற்றி விட்டு, தனித்தமிழ் நாட்டிற்கென, புதிய கொடியை உருவாக்கி, சென்னை போர் நினைவுச் சின்னம் மற்றும் கோட்டையில் ஏற்ற திட்டமிட்டுள்ளனர். உடனடியாக போராடும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்களின் போராட்டத்தை கைவிட செய்ய வேண்டும். அத்துடன், போராட்ட களத்தில் இருக்கிற சமூக விரோத கும்பலை, தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் எச்சரிக்கையை அப்படியே, போராட்ட களத்தில் இருக்கும் மாணவர்களிடம் தெரிவிக்க இயலாத நிலையில், சென்னை போலீசார் ஒலிபெருக்கியில், 'ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டம், சட்டசபையில் முழுமையான சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள் கலைந்து செல்ல வேண்டும்' என எச்சரித்தனர். அதை ஏற்றுக் கொண்ட, உண்மையான மாணவர்கள் சிலர் கலைந்து சென்றனர். மாணவர்கள் போர்வையில் இருந்த இளைஞர்கள், போலீசாரிடம் வம்பிழுத்தனர். அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்; போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இருந்தாலும், அந்த கும்பல், தயாராக வைத்திருந்த, பெட்ரோல் குண்டுகளை வீசி, ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையத்தை எரிக்க முயன்றனர். அங்கு துவங்கிய வன்முறை, ஏறக்குறைய, சென்னை முழுவதும் பரவியது. கண்ணீர் புகை குண்டு மற்றும் துப்பாக்கி சூடு நடத்தி, கலவரத்தை போலீசார் அடக்கினர்.
சுதாரிக்காத மாணவர்கள் தடியடியில் சிக்கி காயம்:
மாணவர்களுடன் இணைந்து போராடிய நடிகர் லாரன்ஸ், காங்கேயம் காளைகளை அழிவில் இருந்து காத்து வரும், ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதி, ஜல்லிக்கட்டு நடத்த பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வரும், மதுரையைச் சேர்ந்த ராஜசேகர், ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகியோர், டில்லிக்கு சென்று, உள்துறை செயலரை சந்தித்தனர்.அவர்களிடம், மாணவர்களுடன், மதவாதிகள், பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கும் தகவல் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பயங்கரவாத குழுக்கள் ஊடுருவியிருக்கிறது என்பதை, இவர்களால் வெளிப்படையாக தெரிவிக்க இயலாத அளவுக்கு, அச்சுறுத்தல் இருந்தது. அதனால், பொத்தாம் பொதுவாக, 'மாணவர்களுடன், சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கின்றனர்; மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்' என்ற கருத்தை மட்டும் தெரிவித்து விட்டு, போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டனர். அதை நம்ப மறுத்த அப்பாவி இளைஞர்கள் பலர், போலீசாரின் தடியடியில் சிக்கி காயமடைந்திருக்கின்றனர். தென் மாவட்டத்திற்கு 'டிரான்ஸ்பர்'சென்னை கலவரத்திற்கு காரணமான, ரவுடிகள் லிஸ்டில் உள்ள மீனவர்கள் மற்றும் அரசியல் பின்னணியில் இருப்பவர்களை கைது செய்யவில்லை. சென்னை கலவரத்திற்கு கைது எண்ணிக்கை, 200 தாண்டவில்லை. இது, 500ஐ தாண்ட வேண்டும். சென்னையில் குற்ற பின்னணி உடையவர்களுடன், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், கலவர கைது எண்ணிக்கை மிகவும் குறைவு. சில மாதங்களுக்கு முன், வேலுார், ஆம்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் ஒரே நாளில், 120 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில், சசிகுமார் கொலை செய்யப்பட்டதில் நடந்த இறுதி ஊர்வலத்தில், பயங்கர கலவரம் வெடித்தது. அதில் ஏறக்குறைய, 700க்கும் மேற்பட்டவர்களை, போலீசார் கைது செய்தனர். அந்த கலவரத்தை ஒப்பிடுகையில் சென்னையில் அதிகம். ஆனால், கைது எண்ணிக்கை குறைவு. சென்னையில், ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய, சமூக விரோத கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கும் அதிகாரிகளை, நகரை விட்டு, தென் மாவட்டத்திற்கு துாக்கி அடிக்க வேண்டும். தென் மாவட்டத்தைச் சேர்ந்த எத்தனையோ அதிகாரிகள், நகரில் பணியாற்ற காத்துக் கிடக்கின்றனர். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும். இந்த விஷயத்தில், முதல்வர் பன்னீர்செல்வம், உறுதியான நடவடிக்கை எடுத்தால், சென்னை காவல் துறையைச் சீரமைக்கலாம். ஜாம்பவான் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தென் மாவட்டத்தில், 1980ல் நடந்த கலவரத்தை ஒடுக்கியதில் முக்கிய பங்காற்றியவர், ஐ.பி.எஸ்., தேவாரம். 90களில் நடந்த ஜாதிக்கலவரத்தில், விஜயகுமார், ஜாங்கிட் போன்ற ஜம்பவான்கள் இருந்தனர். 'எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., போன்ற அதிகாரிகள், இன ரீதியாக பிரிந்து கிடப்பதால், கலவரம் கட்டுக்குள் வரவில்லை' என அரசுக்கு, 'ரிப்போர்ட்' அனுப்பினர். கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டலத்தில் பணியாற்றிய இளம் போலீஸ் அதிகாரிகள், தென் மாவட்டத்திற்கும், அங்கிருந்தவர்கள் மேற்கு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டு, கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை, முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று, சென்னை போலீசையும் சீரமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
English Summary:
Chennai: In the guise of students, anti-social gang gathered in Marina, out of the national flag, separate tamil nadu slogan, a new flag, war memorial and the castle to fly, planned published chennai, Marina insisted on the gravel, the students held a protest.