நியூயார்க் : அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் பொருளாதார ஆலோசனை குழுவில் பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இந்திரா நூயி இடம் பெற்றுள்ளார்.
ஆலோசனை குழுக்கள்
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த மாதம் அவர் பதவி ஏற்க உள்ளார். அவர் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு குழுக்களை அமைத்து வருகிறார். சமீபத்தில் பேசிய அவர், அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத்தில் வலுவான நாடாக மாற்றப்படும், அமெரிக்கா தான் உலகின் முன்னணி கண்டுபிடிப்பு நாடாக இருக்கிறது. அதற்கான தொழிற்கூடங்கள் நம்மிடம் இருக்கின்றன. இந்த நிலை தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்திரா நூயிக்கு இடம்
அதை உறுதிபடுத்தும் வகையில் பொருளாதார ஆலோசனை ஒன்றை அவர் உருவாக்கி உள்ளார். இதில், அமெரிக்காவின் சாதனைகளை செய்த முன்னணி தொழில் அதிபர்கள், நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவில் பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இந்திரா நூயியும் இடம் பெற்றுள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த தமிழ்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.