சென்னை: தமிழக அமைச்சரவை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கி வந்தாலும், மத்திய பா.ஜ., அரசு தனது ஆட்சி அதிகாரத்தை மறைமுகமாக தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது. இது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றெல்லாம், ஆளும் அ.தி.மு.க.,வின் துணை அமைப்புகள் போல செயல்பட்டுக் கொண்டிருக்கும், கூட்டணியாக இருந்து கொண்டிருக்கும் சிறு சிறு கட்சிகளின் தலைவர்கள் கருத்து சொல்லி வருகின்றனர். மத்திய அரசையும் கடுமையாக எதிர்க்கின்றனர்.
பின்னணியில் யார்?:
இவர்களுக்குப் பின்னணியில் யார் இருந்து செயல்படுகின்றனர் என்பதெல்லாம், மத்திய பா.ஜ., ஆட்சியில் அமைச்சர்களாக இருப்பவர்கள் பலருக்கும் தெரிந்தாலும், இந்த விஷயத்தில் அவர்கள் துளியும் கவனம் செலுத்தாமல், அடுத்தடுத்து நிறைவேற்ற வேண்டிய காரியங்களை வரிசையாக செய்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட நிகழ்வுகள்தான், பல நூறு கோடிகளை கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் பண முதலைகளான கரூர் அன்புநாதன், நத்தம் விசுவநாதன், வேலூர் சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில், வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு, தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், சேகர் ரெட்டி மற்றும் அவர் தொடர்புடைய ஆட்கள் வரிசையாக சி.பி.ஐ.,யால கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் கேட்டபோது, அவர், இது சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டிருப்பவர் மீது மத்திய அரசு எடுக்கும் வழக்கமான நடைமுறைதான் என்று கூறியுள்ளார். கூடவே, ஊழலை ஒழிக்கும் நடவடிக்கை முதல் கொண்டு, முதல்வர் பன்னீர்செல்வத்தின் தலைமையில் தமிழக அரசு, மிகச் சிறப்பாக செயல்பட, மத்திய பா.ஜ., அரசு, தேவையான எல்லா உதவிகளையும் செய்வதோடு, அவருக்கு பாதுகாப்பாகவும் இருக்கும். இதில் வேறு யாருடைய செயல்பாடுகளையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அதிரடியாக சொல்லியிருக்கிறார்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனநாயக முறைப்படி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பன்னீர்செல்வம் முழு வேகத்தில் செயல்பட, அ.தி.மு.க.,வினர் ஒத்துழைக்க வேண்டும்; பா.ஜ.,வின் முதல்வர் சாய்சும் பன்னீர்செல்வம்தான் என்றும் சொல்லியிருக்கிறார்.
இவர் இப்படி சொன்னதும், அ.தி.மு.க.,வின் ஆட்சி அதிகாரத்தில் நுழைந்து, இவர்தான் மத்திய பா.ஜ.,வின் முதல்வர் சாய்ஸ் என பன்னீர்செல்வத்தை அடையாளம் காட்டுவதன் மூலம், மாநில சுயாட்சியிலும்; நிர்வாகத்திலும் மத்திய அரசு தலையிடுகிறது என்பதை வெங்கய்ய நாயுடு ஒப்புக் கொண்டுள்ளார். இப்படியெல்லாம் சொல்ல வெங்கய்ய நாயுடுவுக்கு அதிகார்ம் கொடுத்தது யார்? என, அ.தி.மு.க., வட்டாரங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ் என, அ.தி.மு.க., தொடர்புடைய நபர்கள் தொடர்புடைய இடங்களில் அதிரடியாகவும்; வரிசையாகவும் வருமான வரித் துறை சோதனைகளை மேற்கொண்டு, கணக்கில் வராத பணத்தை அள்ளுவதன் மூலமும்; அவர்களை கைது செய்வதன் மூலமும் இரண்டு விஷயங்களை செய்ய மத்திய பா.ஜ., அரசு முயற்சிக்கிறது.
ஒன்று - ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும், ஊழல் அமைச்சரவை என, மக்கள் மத்தியில் வெளிச்சம் போடுவது; இரண்டாவது - நாங்கள் எதிர்பார்ப்பதை, பன்னீர்செல்வம் அமைச்சரவை செய்யவில்லை என்றால், இப்படியெல்லாம் ரெய்டுகள் தொடரும் என்பதை சொல்லி, மறைமுகமாக மிரட்டல் விடுப்பதும்தான்.
இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். இதற்காக, மத்திய உளவுத் துறையினர் முழுவேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அவர்கள், தமிழக அமைச்சர்களை முழுமையாக கண்காணிக்கின்றனர். போயஸ் தோட்டத்தில் இருந்து செயல்படும் சசிகலா மற்றும் அவரது உறவுகள்; நண்பர்கள் என அனைத்து தரப்பினரையும் உளவு பார்க்கின்றனர். படுவேகத்தில், மேலிடத்துக்கு தகவல் அனுப்பப்படுகின்றன.
ராம் மோகன் ராவ், இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில், வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்திய போது, துணை ராணுவப் படை வீரர்களை பாதுகாப்புக்கு பயன்படுத்தினர். இதெல்லாம் கூட, ஒருவிதத்தில், அ.தி.மு.க.,வினருக்கு விடப்பட்டிருக்கும் மிரட்டல்கள்தான். நாங்கள் எதிர்பார்ப்பது போல நடந்து கொள்ளுங்கள்; இல்லையென்றால், உங்களுக்கு சிக்கல் வரும் என்பதை சொல்லாமல் சொல்வது தான் இதெல்லாம்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, சிறப்பு செயலராக இருந்த ராம் மோகன் ராவ், பின், சீனியாரிட்டியையெல்லாம் கடந்து, தலைமைச் செயலர் ஆக்கப்பட்டார். அப்படிப்பட்டவரையெல்லாம் குறிவைத்து, வருமான வரித் துறை ரெய்டு நடத்தி, கணக்கில் வராத பல நூறுகோடி ரூபாய்களை அள்ளுவதன் மூலம், ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டு வந்த ஒட்டுமொத்த அமைச்சரவையும் கூட, ஊழலுக்கு துணை போனவைதான் என்கிற இமேஜை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது பா.ஜ., அரசு.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையை, தன் ஆசிர்வாதத்தில் கொண்டு வந்துள்ளதை, பா.ஜ., சொல்லாமல் இருந்து வந்தது. பன்னீர்செல்வம் அமைச்சரவைக்கு, மத்திய பா.ஜ., அரசு முழுமையான ஆதரவளித்து செயல்படும்; எங்கள் சாய்ஸ், பன்னீர்செல்வம்தான் என, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சொல்லி இருப்பதன் மூலம், இந்த விஷயம் முழுமையாக வெளிச்சத்துக்கு வந்து விட்டது.
பா.ஜ., யார்?
தமிழக மக்களின் பெரும்பான்மையான ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க., அமைச்சரவையை தீர்மானிக்க, வெங்கய்ய நாயுடுவோ; பா.ஜ.,வோ யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக விரும்பும் சசிகலா, ஆட்சியில் அதிகாரம் செலுத்திவிடக் கூடாது என, பா.ஜ., எண்ணம் கொண்டு, அதை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது.
அ.தி.மு.க., உட்கட்சி விவகாத்தில் பா.ஜ., எப்படி செயல்படலாம்?
கட்சியின் பொதுச் செயலராகவும் சசிகலா வந்து விடக் கூடாது என்பதிலும் தீவிர கவனம் செலுத்துகின்றனர். இதற்காகத்தான், தீபா, சசிகலா புஷ்பா போன்றவர்களை பா.ஜ., தர்ப்பு தூண்டி விட்டுள்ளது. இதே நிலையை மத்திய அரசும், பா.ஜ.,வும் செயல்படுமானால், விரைவில், மத்திய அரசையும்; பா.ஜ.வையும் எதிர்த்து போராட வேண்டியது வரும். அதற்கான ஆலோசனையில், சசிகலாவும் அவரது உறவுகளும் ஈடுபட்டுள்ளனர். தங்கள் எதிர்ப்பை அவர்கள், அவைத் தலைவர் மதுசூதனன் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அடுத்தடுத்து, அ.தி.மு.க., தலைவர்கள் பலரும், பா.ஜ.,வை எதிர்த்து களமிறங்குவர்.
இவ்வாறு, அந்த நிர்வாகி கூறினார்.
English Summary:
Chennai: Tamil Nadu Chief Minister Panneerselvam led cabinet, despite the BJP government in the state is implementing its power indirectly. This would violate the sovereignty of India, the ruling AIADMK, which has acted as the sub-systems, which has been a coalition of smaller parties, opinion leaders are saying. Strongly opposed to the federal state.