பொள்ளாச்சி: எதுவும் எட்டிவிடும் துாரம் தான்... மனதில் நம்பிக்கையும், அயராத உழைப்பும் இருந்தால், தடைகளை கடந்து சாதனையாளராக வர முடியும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்தால், நாம் யார் என்ற அடையாளத்தினை ஏற்படுத்த முடியும். ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டு வெளியே வந்தால் தான் சாதனையாளராக முடியும்.
மாற்றுத்திறன் கொண்டவர்கள், நமக்கு இப்படி ஆகிவிட்டதே என எண்ணாமல், இது ஒரு குறையல்ல என்பதை மனதில் பதிந்து, சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி அதற்கான பாதையினை உருவாக்கி கொண்டால் நீங்களும் ஒரு வெற்றியாளர் தான்.
அந்த வகையில் பார்த்தால், தற்போது மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான பாதையை உருவாக்கி அதில் சாதனைகளை படைக்க துவங்கி விட்டனர். ஊக்கமும், ஆர்வமும் இருந்தால், எதையும் சாதிக்கும் வல்லமை அவர்களிடம் உள்ளது என்பதை உணர்த்தி வருகின்றனர். அதில், ஒருவர் தான் நாம் காணப்போகும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 62 வயது இளைஞரும் மாற்றுத்திறனாளியுமான ஜம்புலிங்கம்.
பார்வையற்றவரான இவர், அதனை வெளிப்படுத்தி, அனுதாபம் தேடாமல், உழைப்பாளி, சமூக ஆர்வலர் என தனக்குரிய அறிமுகமாக நினைக்கும் இவரை சுற்றுவட்டாரத்தில் தெரியாதவர்களே இல்லை எனலாம்.
பார்வையில்லை என முடங்கி விடாமல், தனக்கென ஒரு பாதையினை வகுத்துக்கொண்டு அசத்தி வருகிறார் ஜம்புலிங்கம். இவர், தான் வளர்க்கும் பசுவிடம் பால் கறந்து, காலையும், மாலையும் வீடுகளுக்கு பால் வினியோகிப்பதுதான் இவரது அன்றாட வேலை. இரவு, பகல் வேலை பார்ப்பதெல்லாம் மற்றவர்களுக்குத்தான்.
ஜம்புவிற்கு எப்போதுமே உலகம் இருட்டானதுதான். அதனாலேயே காலை எழுந்து பால் கறக்க துவங்கி விடுவார்; மாலை மூணே முக்கால் மணிக்கு இந்த வேலை நடைபெறும். வீட்டிலேயே தொழுவம் அமைத்து, மாடுகளை வளர்க்கிறார். தற்போது, கூடுதல் விசேஷம் என்னவென்றால், மாடு சினையாகி உள்ளது. அடுத்ததாக ஒரு ஜீவன் வெளி வரப்போகிறது என்ற சந்தோஷம் அவரது பேச்சில் வெளிபட்டது.
ஆடு, கோழி, புறாக்களையும் வளர்த்து மனதில் ஒரு நிம்மதியை தேடி வருகிறார். தனிமையாக இருப்பதாக நினைக்காமல், பறவைகளோடு ஒன்றாக கலந்து பேசி தனது நேரத்தை செலவழிக்கிறார்.
பால் கறந்து விற்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில், தையல் மிஷின்களை பழுது பார்த்து தருகிறார். எப்பேர்பட்ட தையல் மிஷினாக இருந்தாலும் அதை சரி செய்து அசர வைப்பது ஜம்புலிங்கத்திற்கு கைவந்த கலை. இதனாலேயே அவருக்கு தையல் மிஷின் பழுது பார்க்க வரும் வாடிக்கையாளர்களும் அதிகம். மேலும், மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவராக இருந்து பலருக்கு உதவிக்கரமும் நீட்டி வருகிறார்.
இதுவரை திருமணம் செய்து கொள்ளாத இவர், மற்றவரை சார்ந்து இருக்காமல் தனக்கான பணியை தானே செய்து அசத்தி வருகிறார்.
கண்பார்வை இல்லாத போதும், சமூக சேவையாற்றி வரும் இவருக்கு விருதுகள் குவிந்து வருகின்றன. தற்போது, சமூக சேவையாற்றி வரும் இவரை பாராட்டி இந்திய அமைதி பல்கலைக்கழகம், புதுச்சேரியில் நடத்திய விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.
அவர் தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டு பேசுகையில்,''எங்க வீட்டுல நான் தான் ஐந்தாவது பையன். பிறவியிலேயே கொஞ்சம் பார்வை இருந்துச்சு; 19 வயசுல ஒரு விபத்து நடந்தப்ப ரெண்டு கண்ணும் சுத்தமா தெரியாம போச்சு. அதுக்கு முன்னாலேயே பால் கறக்கிற வேலைன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். பார்வை போனப்ப கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
பின், பழகிக்கொண்டேன். துணியின் நிறம் தெரியாது; அளவெடுத்து அதை 'கட்' செய்வது, தையல் மிஷின் பாகங்களை தொட்டுப்பார்த்தே அதை சரி செய்து விடுவேன். மற்றவங்கள போல என்னால உலகத்தை பார்க்க முடியலைன்னு கவலை பட்டது எல்லாம் இல்லீங்க... இது கடவுளின் பார்வை என நினைத்து, குறையாக எண்ணாமல் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் விதைத்துக்கொண்டேன்.
முடங்கி கிடந்தால், நானும் ஒரு வேளை உணவிற்காக மற்றவரை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும். என்னால் முடியும் என்ற நம்பிக்கையினை வளர்த்துக்கொண்டதால் தான் நான் நிம்மதியாக இருக்க முடிகிறது. மகிழ்ச்சியாகவும், மன திருப்தியும் உள்ளது. கடவுள் அளித்த இந்த வாழ்க்கை இருளில் சென்றாலும், எனக்கான பாதை, என் மனம் வெளிச்சத்தை காட்டுகிறது. அதில் நடந்து, வாழ்க்கையினை நகர்த்துகிறேன்.
ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு பாடமாகத்தான் அமைகிறது. காலை முதல் இரவு துாங்கும் வரை நான் செய்யும் பணிகளை ரசித்தே செய்வேன். நான் தனியாக இருந்ததாக நினைத்தது கிடையாது நான் வளர்க்கும் ஆடும், மாடும் என் பேச்சிற்கு கட்டுப்பட்டுள்ளது. தற்போது, புறாக்களையும் வளர்க்க துவங்கி விட்டேன். இந்த வாழ்க்கை எனக்கு மன நிறைவை தந்துள்ளது.,'' என பெருமிதத்துடன் கூறுகிறார் ஜம்புலிங்கம்.
மாற்றுத்திறனை காரணம் காட்டி முடங்கி விடாமல், சாதிக்க வேண்டும் என நினைத்து சாதிக்க துடிப்பவர்களுக்கு இவர் ஒரு உதாரணமாக விளங்குகிறார். இவரை போன்று மற்றவர்களும் சாதனையாளர்களாக வலம் வர வேண்டும்.
English Summary:
Pollachi: Reaching far nothing ... hope, hard work, if the idea of being able to pass the obstacles to achievement keeping in mind, we are able to establish the identity. Everyone comes out itself develop the skills to be able to record.