சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றி பெற்ற சந்தோஷத்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரம், தோல்வியைத் தழுவி இருக்கும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதி பக்கம் சென்று விட்டனர்.
அந்த வகையில், சென்னை, ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜன், நேற்று வழக்கம் போல ஆவடி தொகுதிக்குச் சென்று, மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, அவரை பெரும் திரளாக கூடி நின்று வரவேர்ற பொதுமக்கள், பணத்துக்கும்; சொகுசுக்கும் மயங்கி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, சட்டசபையில் ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில், ஒரு நாளும் விலை போக மாட்டேன் என்று சொல்லி, கம்பீரமாக உயர்ந்து நிற்கும் உங்களை, எங்கள் தொகுதியில் மக்கள் பிரதிநிதியாக பெற்றதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம் என்று சொல்லி, அவருக்கு வாழ்த்துக்களையும்; பாராட்டுக்களையும் சொல்லியிருக்கின்றனர். இதனால், பாண்டியராஜன் நெகிழ்ந்து போயிருக்கிறார்.
பின், தொகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பாண்டியராஜன் பேசியதாவது:
எப்பவுமே மக்கள் எண்ணத்தைப் பிரதிபலிப்பவன் நான். நாட்டுக்கு நல்லது எதுவோ அதைச் செய்து பழக்கப்பட்டவன். தற்போதைய தமிழக அரசியல் சூழல், ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது. இந்த சூழலில், நாம் எப்படி முடிவெடுப்பது என்பது குறித்து, ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் இருந்தது உண்மைதான். ஆனால், அடுத்தடுத்த நாட்களில், மக்கள் மனநிலையை நான் அறிந்ததும், நாம் யார் பக்கம் இருப்பது என்று முடிவெடுத்து, சசிகலாவுக்கான எதிர்ப்பு நிலையை எடுத்தேன்.
எம்.எல்.ஏ.,க்களை சிந்திக்க விடாமல், அவர்கள் மனநிலையை மயக்கி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் போக விடாமல், சிறையில் அடைப்பது போல, கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைத்து, கேட்டதையும்; கேட்காததையும் கொடுத்து, எம்.எல்.ஏ.,க்களை மயக்கி, அவர்களை கைதி போல, சட்டசபைக்கு கொண்டு வந்து ஓட்டுப் போட வைத்தனர்.
இது ஜனநாயகத்துக்கு எதிரானது, விரோதமானது என்பதால் ரகசிய ஓட்டெடுப்பு நடத்தக் கோரினோம். முன்னதாக, எம்.எல்.ஏ.,க்கள் சில நாட்கள் தொகுதிக்குள் சுதந்திரமாக சென்று, மக்கள் மனநிலை அறிந்து வந்து ஓட்டுப் போடட்டும் என்று கூறினோம். ஆனால், சபாநாயகர் தனபால் அதை ஏற்க மறுத்து விட்டார். அதன்பின் தான், சட்டசபையில் அமளி ஏற்பட்டது.
அதை காரணமாக வைத்து, தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான தி.மு.க.,வின் உறுப்பினர்கள் அவ்வளவு பேரையும் சபையில் இருந்து வெளியேற்றி விட்டு, சபையை நடத்தி, ஓட்டெடுப்புக்கு விட்டு, தாங்களை தாங்களே வெற்றி பெற்று விட்டதாக அறிவித்துக் கொண்டுள்ளனர். சட்டசபையில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டனர்.
இன்றைக்கல்ல, என்றைக்காவது ஒருநாள், தற்போதைய முதல்வர் பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மக்களை சந்தித்துத்தான் ஆக வேண்டும். அப்போது தெரியும், ஐயோ, தவறிழைத்து விட்டோமே என்று. அந்த நாள், வெகு தொலைவில் இல்லை. சட்டவிரோதமாக சபையில் நடந்து கொண்ட சபாநாயகர் மீது, விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
மற்றபடி, எனது பதவிக்காலம் உள்ள வரையில், தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தைரியமாகவும் தெம்பாகவும் மக்களை சந்திக்கலாம். மக்கள் பணி செய்யலாம். ஆனால், பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களால் முடியாது.
இவ்வாறு, அவர் பேசினார்.