கறுப்பு பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்காக இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார், இந்திய பிரதமர் மோடி. நாடெங்கிலும் அதற்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்தது.
இன்னும் நாட்டில் நடுத்தர வர்க்க மற்றும் அதற்கு கீழ் உள்ள மக்கள் வங்கிகளிலும் ஏடி.ஏம்களிலும் வரிசையில் நிற்கிறார்கள். இந்த நிலையில் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவோம் என மோடி அறிவித்திருக்கிறார். ரொக்கப்பரிவர்த்தனை இல்லை என்றால் எப்படி பொருள்கள், வாங்குதல் விற்றல் என்றால், அனைத்து வங்கி வாயிலாக, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக அல்லது இன்டர்நெட் பேங்கிங் வாயிலாக நடைபெற வேண்டும். எந்த திட்டமும் அது நல்லது கெட்டது என்பதைத்தாண்டி அதன் அவசியமும் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தேவையையுமே கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவின்,
மக்கள் தொகை 127+ கோடி வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் 60+ கோடி கிரெடிட் கார்டு வாங்கியவர்கள் 2.45 கோடி டெபிட்டு கார்டடு வாங்கியவர்கள் 50+ கோடி என்று தோராயமாக கணக்கு சொல்கின்றன கூகுள் வழியாக பல இணைய தளங்கள். எத்தனை பேர் வாங்கினார்கள், எத்தனை பேர் வைத்திருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எத்தனைப் பேர், அதை பயன்படுத்துகிறார்கள். எத்தனை பேருக்கு அதை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்பதே முக்கியம்.
உதாரணத்திற்கு விவசாய வேலை செய்பவர்கள், கூலித் தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்ற உடையை அணிந்துகொள்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் ஜீன்ஸ், லெக்கிங்ஸ் அணிந்து கொள்கிறார்கள். அவரவர் வசதி, தேவை, மனநிலைக்கேற்ப உடை அணிந்து கொள்கிறார்கள். பெற்றோர்களையும் ஜீன்ஸ், லெக்கிங்ஸ் அணிய வேண்டும் என்பது மிகவும் நகைப்பான ஒன்று. அவர்கள் அணியக்கூடாது, அல்லது அணிய முடியாது என்பதில்லை. தேவைப்பட்டால், விரும்பினால் அவர்கள் அணிந்து கொள்கிறார்கள். அவர்களை கட்டாயப்படுத்துதல் என்பது தனி மனித உரிமையில் தலையிடுகிற சர்வாதிகாரம் என்று தான் எடுத்துக்கொள்ள முடியும்.
மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு இன்னும் வங்கிக் கணக்கு இல்லை, என்ற நிலையில் இருக்கும் இந்தியாவில் இவ்வளவு அதிவேகமாக ரொக்கப் பரிவர்த்தனைக்கு எதிரான தீவிர பிரச்சாரங்களும் முனைப்புகளும் எதற்காக? யாருக்காக?
தேவைப்படுபவர்கள் ஏற்கனவே டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் வசதியைப் பெற்றிருக்கிறார்கள், பெற்றுக் கொள்கிறார்கள். விஷயம் அதுவல்ல. 5 மரக்கா நெல் விதைப்பாடு நிலம் வைத்திருக்கும் ஒருவர், அதை உழுவதற்கும், நாத்து நடுவதற்கும், களை பறிப்பதற்கும் கொடுக்கும் சம்பளத்தை செக்காக கொடுக்கவேண்டும் என்றும், அல்லது வங்கிக் கணக்குக்கு வழியாக பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பதும் இப்போதைக்கு அபத்தம் அல்லவா.
நாத்து நடுவதற்காக, 100 ருவாயோ, 200 ருபாயோ கூலி/சம்பளம் பெறுகிற ஒருவர், அதை வங்கிவழியாகவே பெற்றுக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உள்ளுர் பெட்டிக்கடையில் அல்லது மளிகைக் கடையில் அரிசியும், மளிகை சாமான்களும் 60 ருபாய்க்கு அன்றைய தேவைக்கு வாங்குவார். எதிர்த்த வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் இருந்து 15 ருபாய்க்கு முருங்கைக்காய் வாங்குவார். தெருவில் மீன்காரரிடம் 30 ருபாய்க்கு மீன் வாங்குவார். பூக்காரரிடம் 10 ருவாய்க்கோ, 20 ருபாய்க்கோ பூ வாங்குவார். தள்ளுவண்டியில் வளையல், பொட்டு ஃபேன்சி பொருள்கள் கொண்டு வருபவரிடம் 30 ருபாய்க்கு ஸ்டிக்கர் பொட்டு, கம்மல் வாங்குவார்... இத்தனையையும் வாங்குபவர்களும் அதற்கு பணம் பெற்றுக் கொள்பவர்களும் ரொக்கமில்லாத பரிமாற்றம் செய்வதைப் பற்றி யோசித்து பாருங்கள்.
இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இப்படி 20 ருவாய்க்கும் முப்பது ருபாய்க்கும் டீ,காபி, வடை, முருக்கு, இட்லி, தோசை, பீடிக்கட்டு, டவுண் பஸ், மினி பஸ் டிக்கெட்... 50 ருபா டாக்டர் பீஸ்... என இன்னும் கற்பனை செய்தால் சிலருக்கு சிறப்பாக தோன்றலாம். ஆனால் நடைமுறையில் இது மிகப்பெரிய சிக்கலையும், தேவையற்ற மன உளைச்சலையுமே உருவாக்கும். பிக் பஜார், ஸ்பார், சரவணா ஸ்டோர்... போன்ற கடைகளில் பொருள்களை தேர்ந்தெடுப்பதற்கான நேரத்தை விட அதிகமான நேரம், பில்லிங் கவுண்டரில் செலவாகும் என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும். அதற்காகவே இந்தக்கடைகள் பக்கம் நான் அதிகமாக நடமாடுவதில்லை.
மீண்டும், மீண்டும் இந்த கட்டுரை வாயிலாக சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான். பல் இருப்பவர்கள் பக்கோடா சாப்பிடட்டும், யாரும் அதை தடுக்கவில்லை. ஆனால், அனைவரும் பக்கோடா சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அடம் பிடிப்பதும் சட்டம் இயற்றுவதும் சர்வாதிகாரம் மட்டுமல்ல, இந்தியா என்கிற மிகப்பெரிய நாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலனையும் கருத்தில் கொள்ளாத தன்மையும கூட.
வங்கிக்கணக்கு வைத்திருப்பதும், ஏடி.எம் பயன்படுத்துவதும், டெபிட், கிரேட்டி கார்டு வாங் கிக்கொள்வதும், அதை பயன்படுத்துவதும் அவரவர் வசதி, தேவை, விருப்பத்திற்கே தினமும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இவை அனைத்திற்கான தேவையும், வசதியும், விருப்பமும் இல்லாத இந்திய மக்கள் மீது அதை வலிந்து திணிக்காதீர்கள் என்பதே.
திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, என்றொரு பாடலின் வரிகள் சொல்லும். இந்திய மக்கள், தங்கள் தகுதிக்கேற்ற வகையில் அதிகாரம் செய்யவும் ஊழல் செய்யவும் பழகிக்கொண்டு விட்டார்கள். லைசென்ஸ் வாங்குதற்கும் லஞ்சம், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் ட்ராபிக் போலீசுக்கும் லஞ்சம், கொலை செய்தாலும், கொள்ளை அடித்தாலும் சுலபமாக அதில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்... என்ற நிலையில் இந்திய மக்கள் மிக மோசமான மனநிலையில் உள்ளனர்.
லஞ்சம் கொடுப்பதோ, வாங்குவதோ தவறில்லை... ஆனால் லஞ்சம் வாங்கிவிட்டு ஏமாற்றுவதுதான் தவறு என்கிற அளவுக்கு, ஊழலோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்திய மக்கள்.
தேசப்பற்று, நீதி, நேர்மை, நியாயம்...பேசுகிற ஒவ்வொருவரும் ஊழலின் ஒரு அங்கமாகவே இருக்கிறார்கள். உதாரணமாக, எத்தனை பேர் வீட்டில் பள்ளி / கல்லூரிகளில் சீட் வாங்க லஞ்சம் கொடுக்காதவர்கள் என்று பட்டியல் எடுத்தால் தெரிந்துவிடும் நமது, நேர்மையும் நியாயமும். எங்கள் ஊர்ப்பக்கம், ஒரு பழமொழி சொல்வார்கள், "காப்பான் பெரிதா, கள்ளன் பெரிதா என்றால் கள்ளன் தான் பெரிது" என்று. அதுதான் உண்மை நிலவரம். எத்தனை கடுமையான சட்டங்கள் இருந்தாலும், அதைச் சுலபமாக சந்தி சிரிக்க வைத்து விடுகிற ஜாம்பவான்கள் இருக்கவே செய்கிறார்கள். அவ்வளவு ஏன், மத்திய அரசிலும் மாநில அரசிலும் அங்கம் வகிக்கிற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களில் எத்தனை பேர் குற்றப் பின்னணியும் ரௌடியிச பின்னணியும் இல்லாதவர்கள் என்பது நாட்டுக்கே தெரியும்.
இன்னொன்று, வலுக்கட்டாயமாக இந்த டிஜிட்டல் புரட்சியை, செய்வதால் யாருக்கு லாபமும், லாப விகிதமும் அதிகமாக போய்ச்சேரும் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். அரசால் ஒரு திட்டத்தை, தன்னால் முழுமையாக செயல்படுத்த முடியாமல் பெட்ரொல் பங்க்-களுக்கு போங்க, பிக் பஜாருக்கு போங்க என்று சொல்லவேண்டிய நிலை தான் இருக்கிறது.
கோடிகளைக் கொட்டி வங்கி கிளைகளை அதிகப்படுத்தலாம், ஏடி.எம் கிளைகளை அதிகப்படுத்தலாம், டெபிட், கிரெடிட் கார்டுகளை மலைபோல் குவிக்கலாம். வாய்க்கால்களிலும் வரப்பு மேடுகளிலும், காயலான் கடைகளிலும் கம்ப்யூட்டர்களை வைத்து, அதற்கு ஆபரேட்டர்களும் வைக்கலாம்.
ஆனால் எதற்கு? ஏன்? என்பதைத் தாண்டி.. அதில் தனி மனித உரிமை மற்றும் தேவையை கவனத்தில் கொள்ள வேண்டும். தனி மனித உரிமையை கவனத்தில் கொள்ளாமல் சர்வாதிகார மனநிலையில் செய்யப்படும் எதுவும் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்பதற்கும் நடைமுறையில் சாத்தியப்படாது என்பதற்கும் எத்தனையோ வரலாறுகள் உள்ளன.
இந்த ஜீடிபி, தங்க இருப்பு, எக்ஸ்சேஞ்ச் ரேட், சென்செக்ஸ்... இதெல்லாம் இந்தியாவில் முக்கால்வாசி மக்களுக்கு இன்னும் என்ன ஏதுன்னே தெரியாது. எனக்கே கூட முழுசா தெரியாது.
கறுப்பு பணமும், கள்ள பணமும் வச்சிருக்கிறவங்களை பிடிக்கிறோம்னு பெயர் சொல்லிட்டு, இது இந்தியாவின் முதுகெலும்பு என்று காலம்காலமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கும் கிராமங்களுக்கும் கிராம மக்களக்கும் எதிரான செயல் தான்.
கருப்பு பணத்தையும் கள்ள பணத்தையும் பிடிக்க ஆயிரம் வழிகளும், சட்ட திட்டங்களும் அமைப்பும் இருக்கும்போது, இந்த வழி எதற்கு என்பது முற்றிலும் புரியாத ஒன்று தான்.
கடைசியாக ஒன்று, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு சமூகம், 'இல்லாத' சொர்க்கத்தில் கூட இருக்க முடியாது. கடவுள், பக்தன் என்பதே ஏற்றத்தாழ்வுதான். ஒன்று அனைவரும் கடவுளாக இருக்க வேண்டும், அல்லது அனைவரும் பக்தர்களாக இருக்க வேண்டும்... இரண்டும் இருப்பதே ஏற்றத்தாழ்வுதான்.
ஒரே நாளில் அல்லது ஒரு சில மாதங்களில் அதை மாற்றி விடும் புரட்சியெல்லாம் முடிவில் வேறெங்கோ கொண்டு விட்டுவிடும் அபாயமே, கண்முன் தெரிகிறது.
அதிகாரம், சாமானியர்களுக்கு எதிராக இருக்கும் வரை, எந்தப்புரட்சியும் சமத்துவத்தையும், சமூக நீதியையும் கொண்டு வந்துவிடாது. அதோடு, "நடைப்பயணம்" இல்லாத இந்தியா, அனைவரும் இனி டூவீலரிலோ, காரிலோ, கால் டாக்சியிலோ, இரயிலிலோ, கப்பலிலோ, முக்கியமாக விமானத்திலோதான் பயணிக்க வேண்டும், என்பது போன்ற மேலோட்டமான அரைவேக்காட்டுத்தனமான புரட்சிகளையும் வரவேற்க முடியாது.
அது மக்கள் மனதில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, எதிர்ப்பாகவும் மாற்றி விடும் என்பதும் நிச்சயம்.
English summary:
Is Cashless economy possible in India? Here is an analysis.