சென்னை: இரட்டை இலை முடக்கப்பட்டது அதிமுக உட்கட்சி பிரச்னை. இதில் தி.முக., தலையிடாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.சட்டசபை வளாகத்தில் அவர் கூறியதாவது: சட்டசபையில் எந்த விதிகளும் கடைபிடிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். இதன் முடிவு தெரிந்து தான் தீர்மானம் கொண்டு வந்தோம். இரட்டை இலை முடக்கப்பட்டதற்கு திமுக காரணமல்ல. இரட்டை இலை முடக்கப்பட்டது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை. இதில், தி.மு.க., தலையிடாது. அதிமுக சின்னம் முடக்கப்பட்டது தி.மு.க.,விற்கு சாதகம் என தவறான தகவல் பரவுகிறது. அனைவரின் நம்பிக்கையை பெறும்படி பணியாற்றுவேன் என சபாநாயகர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Friday, 24 March 2017
100 தாமரை மொட்டுகளே...: தமிழிசை நம்பிக்கை
சென்னை: தற்போது வெற்றி பெறும் கங்கையால், தமிழகத்தில் 100 தாமரைகள் மலரும் என பா.ஜ., தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இவர் பா.ஜ., தலைவர் தமிழிசையுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது தமிழிசை கூறியதாவது:
தொகுதியில் பணப்பட்டுவாடா :
தற்போது வெற்றி பெறும் கங்கையால் தமிழகத்தில் 100 தாமரைகள் மலரும். தி.மு.க., வெற்றி பெற்றால் வெளிநடப்பு செய்வார்கள். அதிமுக வெற்றி பெற்றால், மேஜையை தட்டுவார்கள். தாமரை வளர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். தொகுதியில் பணப்பட்டுவாடா உள்ளது . ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்கள் இறக்கப்பட்டுள்ளனர். எல்லா சூழ்ச்சிகளையும் மீறி பா.ஜ., வெற்றி பெறும். தேசிய கட்சி கவனத்தில் தமிழகம் இருக்கும், இந்த தேர்தலில் மோடியின் ஆக்கம் தாக்கம் இருக்கும் . மக்கள் மாற்றத்தை கொடுக்க வேண்டும்.
பிரதமரின் தொகுதியாக மாறும் :
4 மாநில மக்கள் மாற்றம் கொடுத்தனர், ஏன் அந்த மாற்றம் தமிழகத்தில் இருக்கக்கூடாது. மோடியின் தாக்கம் ஆக்கம் தமிழகத்தில் பிரதிபலிக்கும். பா.ஜ., வெற்றி பெற்றால், தொகுதி மோடியின் நேரடி பார்வைக்கு சென்றுவிடும். இதன் மூலம் எந்தளவிற்கு பலன்பெறும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் தொகுதியாக இருந்தது பிரதமரின் தொகுதியாக மாறும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலாவை திட்டி குவிந்த கடிதங்கள்
பெங்களூரு:தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, திட்டமிட்டு கொலை செய்து விட்டதாக, சிறையில் உள்ள சசிகலாவுக்கு பலரும் கடிதங்கள் எழுதியுள்ளதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலாவுக்கு, தினமும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரிடம் இருந்தும் ஏராளமான கடிதங்கள் வருகின்றன. சிறை விதிகளின் படி, கைதிகளுக்கு வரும் எந்த கடிதங்களும் பிரித்து படிக்கப்பட்ட பிறகே, வழங்கப்படும். அதுபோல, குடும்பத்தினர், நண்பர்களுக்கு கைதிகள் கடிதம் எழுதினாலும், அதை அதிகாரிகள் படித்த பின்பே, அனுப்புவர்.
'சசிகலா, மத்திய சிறை, பரப்பன அக்ரஹாரா, பெங்களூரு - 560100' என்ற முகவரியிட்டு ஏராளமான கடிதங்கள் வருகின்றன. சசிகலாவுக்கு வரும் கடிதங்களை, தமிழ் தெரிந்த சிறை அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் படித்த பின்பே, சசிகலாவிடம் தருகின்றனர்.
இது குறித்து, சிறை துறை வட்டாரங்கள் கூறியதாவது:
சசிகலாவுக்கு வரும் பெரும்பாலான கடிதங்கள், தமிழக முதல்வராக இருந்த, ஜெயலலிதாவை, சசிகலா திட்டமிட்டு கொலை செய்து விட்டதாகவே குற்றம் சாட்டுகின்றன. அதே நேரத்தில், சசிகலாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், எந்த கடிதங்களும் வருவதில்லை.
சசிக்கு வரும் கடிதத்தை, முதலில் இளவரசி வாசித்து பார்க்கிறார். பின், அது சசியிடம் செல்கிறது. ஆரம்பத்தில், இந்த கடிதங்களை ஆர்வமுடன் வாசித்த சசிகலா, கடுமையாக திட்டப்படுவதை தொடர்ந்து, கடிதங்கள் வாசிப்பதையே நிறுத்தி விட்டார்.
கடிதங்கள், சென்னை, திருச்சி, தர்மபுரி, மதுரை, சேலம், திண்டுக்கல், கரூர், விழுப்புரத்தில் இருந்தே அதிக அளவில் வருகின்றன.
கடிதத்தில், 'நாங்கள் பெரிதும் நேசித்த எங்கள் தலைவியை நீங்கள் கொன்று விட்டீர்கள். நீங்கள் நம்பிக்கையில்லாத நபர், நன்றியில்லாதவர், முதுகில் குத்தி விட்டீர்கள். உங்களுக்கு வாழ்க்கை அளித்தவரை ஏமாற்றி விட்டீர்கள்.
'நீங்கள் செய்த கெட்ட காரியத்திற்கான பலனை, அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கான விளைவை சந்தித்தே ஆக வேண்டும்' என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
சென்னை: சபாநாயகருக்கு எதிராக தி.மு.க., கொண்டு வந்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பில் தோல்வியடைந்துள்ளது.விவாதம்:
சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய தி.மு.க., சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் சபாநாயகரை நீக்கக் கோரும் கடிதத்தை, மு.க.ஸ்டாலின் கடந்த 9ம் தேதி சபாநாயகரிடம் அளித்தார். இதன் மீதான விவாதம் இன்று நடந்தது. சட்டசபையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்தினார்.
ஒரு தலைபட்சமாக:
தீர்மானத்தை முன்மொழிந்து ஸ்டாலின் பேசுகையில், சட்டசபை மரபுகளை காப்பாற்ற சநாநாயகர் தனபால் தவற விட்டார். 89 வயக்காட்டு பொம்மைகள் என தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பற்றி பேசியதை நீக்க மறுத்து விட்டார். அதிமுக உறுப்பினர்கள் எதை பேசினாலும் நீக்குவதில்லை. ஒருதலைபட்சமாக பேரவையை வழிநடத்துகிறார்.. முதல்வர் மீதானநம்பிக்கை ஓட்டெடுப்பின் போது மரபுகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்டார் . அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ஆதாரம் இல்லாமல் அவதூறு கூறும்போது அதை கட்டுப்படுத்த தவறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தீர்மானத்தை ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிக்கவில்லை . பின்னர் நடந்த குரல் ஓட்டெடுப்பில், தி.மு.க., கொண்டு வந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது. பின்னர் ஸ்டாலின் கோரிக்கைப்படி பிரிவு வாரியாக ஓட்டெடுப்பு நடந்ததுதீர்மானத்திற்கு ஆதரவாக 97 ஓட்டுகளும், எதிராக 122 ஓட்டுகளும் பதிவாகின..
ஓ.பி.எஸ்.,சை மீண்டும் முதல்வராக்குவோம்: மதுசூதனன் உறுதி
சென்னை: ஓ.பி.எஸ்.,சை மீண்டும் தமிழக முதல்வராக்குவோம் என ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் கூறினார்.ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தண்டையார்ப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில்தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மதுசூதனனுடன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை மா.பா., கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
குடும்ப ஆட்சி:
பின்னர் மதுசூதனன் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., ஆசி எனக்கு உள்ளது. அவரின் ரசிகனாக இருந்தவன். தொகுதியில் மக்கள் பணி தீவிரமாக செய்துள்ளேன். எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதிகாரிகள் சின்னத்தை அறிவிப்பார்கள். குடும்ப ஆட்சியை எதிர்த்து தான் எம்.ஜி.ஆர்., தர்மயுத்தம் நடத்தினார். ஆர்.கே. நகர் மக்கள் ஓ.பி.எஸ்.,சை நேசிக்கின்றனர்.
எம்ஜிஆர்., ஜெயலலிதா கட்டி காத் குடும்பம் அதிமுக. சசி குடும்பத்தினரை வெளியேற்றிவிட்டு அதிமுகவை கைப்பற்றற வேண்டும். சசி குடும்பத்திலிருந்து தொண்டர்கள் விலக வேண்டும். குடும்ப ஆட்சிக்கு எதிராகவே நாங்கள் போட்டியிடுகிறோம். சசிகலா வற்புறுத்தலின் காரணமாக தினகரனுக்கு, எம்.பி., பதவியை அளித்தார் ஜெயலலிதா. இடைத்தேர்தலுக்கு பின் கட்சி, ஆட்சி, சின்னத்தை கைப்பற்றுவோம். ஓ.பி.எஸ்.,சை மீண்டும் முதல்வராக்குவோம். கடந்த 1991க்கு முன்னர் சொத்துவிபரத்தை சசி வெளியிடதயாரா?இவ்வாறு அவர் கூறினார்.
மா.பா.., பாண்டியராஜன் கூறுகையில், தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என்றார்.








