Monday, 27 March 2017
நடிகர் கமல் மீது கர்நாடகாவில் புகார்
பெங்களூரு: மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நெல்லை கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவிலும் கமல் மீது புகார் அளிக்கப்பட்டது. பசவேஸ்வர மடத்தை சேர்ந்த பிரனவானந்தா என்பவர் பெங்களூரு போலீஸ் ஸ்டேசனில் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; 13 பேர் காயம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம், சின்சினாட்டி நகரில் இரவு விடுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்தனர். ஒருவர் பலியானார். தொடர்ந்து அந்த இரவு விடுதியை சுற்றி வளைத்துள்ள போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆர்.கே.நகரில் சிக்கிய அமைச்சர்கள்
சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் சேனியம்மன் கோவில் தெருவுக்கு, தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்ற அமைச்சர்கள் உதயக்குமார் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணனை அங்கிருக்கும் மக்கள் பிடித்து வைத்த சம்பவம், பிரசாரத்துக்குச் செல்லும் மற்ற அமைச்சர்களை கிலியில் ஆழ்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் மருது கணேஷ், அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரன், தீபா பேரவை சார்பில் தீபா உள்ளிட்ட பலரும் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தின், 33 அமைச்சர்களும், ஆர்.கே.நகரில் முகாமிட்டு, தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக, தி.மு.க., தொடர்ந்து புகார் சொல்லி வருகிறது. தெரு தெருவாக நிறுத்தப்பட்டிருக்கும் அமைச்சர்கள், தெருவில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நன் கொடை வழங்குவதாகக் கூறி வருகின்றனர்.
சர்வ சாதாரணமாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். சமீபத்தில், தொகுதிக்குள் உள்ள சேனியம்மன் கோவிலுக்கு வந்த அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணனும், உதயக்குமாரும், அங்கு இருந்த, 500க்கும் அதிகமான மக்களை வரவழைத்து, உங்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்க தீர்மானித்துள்ளோம். உங்கள் ரேஷன் கார்டு அல்லது ஆதார் கார்டை இணைத்து, எங்கள் பெயருக்கு, விண்ணப்ப மனு கொடுங்கள். அதை பரிசீலித்து, எல்லோருக்கும் வீடு வழங்குகிறோம். யாரும் ஓட்டுப் போடாமல் இருந்தால், அவர்கள் இந்த திட்டத்தில் இருந்து விலக்கப்படுவர் என்று சொல்லியிருக்கின்றனர்.
அதன்படி கோரிக்கை விண்ணப்ப மனுக்களோடு அமைச்சர்களை மக்கள் சந்தித்து பேசியுள்ளனர் பொதுமக்கள். அப்போது மக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, வேகமாக தகவல் பரவியது. இப்படி தகவல் பரவியதும், ஒரு பக்கம் பொதுமக்களும், இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்., அணியினரும், அந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். கொஞ்ச நேரத்தில், அங்கே பிரச்னை ஏற்பட்டுள்ளது. தள்ளுமுள்ளு, கலாட்டா நடக்க, வீடு கட்டிக் கொடுக்கக் கேட்டு, எழுதிக் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் பறித்து கிழித்தெறிந்தனர்.
அங்கே, இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானதும், பாதுகாப்பு போலீசாருடன், இரு அமைச்சர்களும் எஸ்கேப் ஆகி விட்டனர். இந்த விஷயத்தை கேள்விபட்ட வேட்பாளர் தினகரன், எல்லா அமைச்சர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் அழைத்துப் பேசியுள்ளார்; சாதுர்யம் இல்லாமல் காரியம் செய்வதாலேயே இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக வருத்தப்பட்டு, அமைச்சர்களை கடிந்து கொண்டாராம்.அடுத்தடுத்த நாட்களில், அ.தி.மு.க., அம்மா அணியினரோடு, பொதுமக்களும், மற்றக் கட்சியினரும் கடும் மல்லுக்கட்டுக்குத் தயாராகி வருவதாக, தினகரன் தரப்புக்கு தகவல் கிடைத்து, போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனராம். களத்தில் மற்ற வேட்பாளர்களைப் போல, தினகரனும் அமைதியாக ஓட்டு சேகரித்து சென்றால் பிரச்னை இல்லை. பரிசுப் பொருட்கள் விஷயத்தில், தீவிர ஆர்வம் காடினால், தினகரனுக்கு, தொகுதிக்குள் பிரச்னை ஏற்படும் என்றும், போலீஸ் தரப்பிலேயே எச்சரிக்கை மணி அடித்துள்ளனராம். இதனால், ஆர்.கே.நகர் தொகுதியில் நாளுக்கு நாள் டென்ஷன் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.இதனால், பிரசாரத்தில் நிதானித்துச் செல்கிறாராம் தினகரன்.
ஓ.பி.எஸ்., ஆதரவாளர் தற்கொலை
சென்னை : சசிகலா அணியினர் மிரட்டி அவமதித்ததால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கண்ணப்பன் (43). இவர் தற்கொலை செய்து கொண்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளருக்கு ஆதரவாக கண்ணப்பன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் அவரது மரணம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.டிரைவிங் லைசென்சுக்கு ஆதார் கட்டாயமாகிறது
புதுடில்லி : டிரைவிங் லைசென்ஸ் வழங்கும்போதும், புதுப்பிக்கும் போதும் ஆதார் எண்ணை கேட்டு வாங்க மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரே நபர் பல இடங்களில் லைசென்சு வாங்குவது, போக்குவரத்து குற்றங்களிலிருந்து தப்பிக்க போலி லைசென்ஸ் வாங்குவதை தடுக்க முடியும். இந்த நடைமுறை வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.டேட்டாபேஸ்:
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. டிரைவிங் லைசென்ஸ் வழங்குவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தாலும், வெவ்வேறு மாநிலங்களில்,வெவ்வேறு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மூலம் பல லைசென்ஸ் வாங்குவதை தடுக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் அடையாளத்தை கண்டுபிடிக்க ஆதார் மட்டுமே போதுமான அடையாளமாக இருக்கும். ஆதார் இல்லாதவர்கள் வேறு சில சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அளிக்கும் சான்றுகளை அதிகாரிகள் பதிவு செய்ய தேவையான மாற்றங்ளை மத்திய அரசு செய்து வருகிறது. இதற்கான தனியாக லைசென்ஸ் குறித்த டேட்டா பேஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் வேறு எங்காவது லைசென்ஸ் பெற்றுள்ளார்களா என்பது பற்றி அறிய அனைத்து ஆர்.டி.ஓ., அலுவலகங்களும் இந்த டேட்டாபேசை பார்க்கும் வசதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.தற்போது நாடு முழுவதும் 18 கோடி டிரைவிங் லைசென்சுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.







