Tuesday, 28 March 2017
சுழல் இருக்கை ரயில் பெட்டிகள், நவீனத்தில் அசத்தும் ஐ.சி.எப்.,
ஆந்திரா, காஷ்மீர் மாநிலங்களில் உள்ள சுற்றுலா பகுதிகளில் இயக்க, சுழலும் இருக்கைகளுடன், நவீன ரயில் பெட்டிகளை, ஐ.சி.எப்., தயாரித்து வருகிறது.தமிழகத்தில், ஊட்டியில் இயக்கப்படும் மலை ரயிலை போல, ஆந்திர மாநிலம், அரக்வேலியில், சுற்றுலா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதை, ஐ.ஆர்.சி.டி.சி., என்ற, இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகம் இயக்கி வருகிறது.
ரயிலுக்காகவும், காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலங்களில் இயக்கவும், சுழலும் இருக்கைகள், கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய, நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்க, சென்னை, ஐ.சி.எப்.,க்கு, ஆர்டர் கிடைத்துள்ளது.
இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரயில் பெட்டிகள் தயாரிப்பில், உடனுக்குடன் தேவைக்கு ஏற்ப, நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்படுகின்றன. இதனால், நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்க, ஆர்டர்கள் தொடர்ந்து கிடைக்கிறது' என்றார்.
என்ன சிறப்பு?
நாட்டிலேயே முதல் முறையாக, மேற்கூரை முழுவதும் பிரத்யேக கண்ணாடி கூரையுடன் இந்த ரயில் வடிவமைக்கப்படுகிறது. அது, வெளிப்புற சூழலுக்கு ஏற்ப, பகல், இரவை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இதில், சுழலும் இருக்கைகள் பொருத்தப் படுவதால், இயற்கை காட்சிகளை, 360 டிகிரியில் சுழன்றபடி, பார்த்து ரசிக்கலாம். ரயில் முழுவதும் குளிசாதன வசதி செய்யப்படும்.
ஆர்.கே.நகரில் பண நடமாட்டத்தை கண்காணிக்கும் அதிகாரிகள்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் கடும் சூடாகி இருக்கிறது. தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ் மற்றும் அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் ஆகியோர், தீவிர பிரசாரத்தில் இருக்கின்றனர்.ஆனால், எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில், தொகுதியில் மற்றவர்களைக் காட்டிலும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார் அ.தி.மு.க., அம்மா கட்சி வேட்பாளர், டி.டி.வி.தினகரன். அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் கூட தீவிரமாக தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கேள்விக்குறி:
இருந்தும், தினகரனுக்கு வெற்றி கேள்விக்குறியாக இருப்பதால், ரொம்பவும் அச்சப்படுகிறார். அதனால், மொத்தமுள்ள 33 அமைச்சர்களையும் தொகுதிக்கு அனுப்பி தேர்தல் வேலை பார்த்து வருகிறார். இதனால், அங்கே பணம் தண்ணீராக செலவழிக்கப்படுகிறது. மக்களுக்கு கேட்டதெல்லாம் செய்து கொடுக்கும் நிலைக்கு நாம் வந்து விட்டால், மக்கள் நமக்குத்தான் ஓட்டளிப்பர் என, தினகரன் தரப்பு முடிவெடுத்து, அதற்கான காரியங்களில் இறங்கி தீவிரமாக வேலை செய்து வருகிறது.
பண விளையாட்டு:
ஆனால், இந்த விஷயம், தேர்தல் பார்வையாளருக்கு கட்டாயம் தெரிந்திருக்கிறது. அதனால், பண விளையாட்டு மூலம் ஜனநாயகத்தை முடக்கப் பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால், தேர்தல் பார்வையாளர்கள் மூலம், அறிக்கை பெற்று, ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்க விடமாட்டோம் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
புகார்:
இந்நிலையில், தேர்தல் கமிஷன் நடத்தை விதிகள் உட்பட, பல்வேறு விஷயங்களை தி.மு.க., தரப்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில், ஆர்.கே.நகரில் பணநடமாட்டம் அதிகமாக உள்ளது என்று புகார் கொடுக்க உள்ளனர். மற்ற கட்சிகளும், இதே கருத்தை வலியுறுத்தி, தேர்தல் கமிஷனில் புகார் கொடுப்பர்.
தேர்தல் நிறுத்தம்?
அதை வைத்து, தேர்தல் நெருக்கத்தில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் நிறுத்தும் யோசனையில் உள்ளது. இதற்கு, சமீபத்திய உதாரணங்களாக, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தேர்தல்கள் இருப்பதால், அதே பாணியில், ஆர்.கே.நகர் தொகுதியிலும் தேர்தல் நிறுத்தப்பட கூடுதல் வாய்ப்புள்ளது.
பின்னடைவு:
இதையறிந்துள்ள அ.தி.மு.க., அம்மா தரப்பினர், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டும் என தங்களுக்குள் கூறிக் கொண்டு, தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகத்திலும், சட்ட விரோதமாகவும் ஈடுபடுவது, தற்போதைய அரசைப் பாதிக்கிறது; அரசின் செயல்பாடுகளும் கடும் பாதிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என, வருவாய்த் துறை கீழ் நிலை அதிகாரமட்டங்கள் கூறுகின்றன. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, இத்தகைய செயல்பாடுகள், அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
இரட்டை இலை முடக்கத்துக்கு பா.ஜ.,வே காரணம்; அன்வர் ராஜாவை இழுத்து தெருவில் விடும் தினகரன்
அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்துக்கு, கட்சியின் சசிகலா அணியும், பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியாக தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்து மோதின. இதனால், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கமிஷன், ஆர்.கே.நகர் தேர்தலுக்காக மட்டும், இரட்டை இலையைத் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது.வரும் ஏப்., 17ம் தேதிக்குள், இரு தரப்பும் கூடுதல் விவரங்கள் ஏதும் அளிக்க விரும்பினால், தேர்தல் கமிஷனிடம் அளிக்கலாம். அதன்பின், இதன் மீது மீண்டும் விசாரணை நடத்தி, இறுதி முடிவெடுக்கப்படும் என அறிவித்தது. கூடவே, ஆர்.கே.நகர் தேர்தலுக்காக, இரண்டு கட்சிகளும் அ.தி.மு.க., என்னும் கட்சிப் பெயரையும் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவித்தது.
புதிய சின்னம்:
இதனால், சசிகலா அணி, அ.தி.மு.க., அம்மா என பெயர் சூட்டிக் கொண்டதோடு, தொப்பி சின்னத்தையும் கேட்டுப் பெற்றது. அதேபோல, அ.தி.மு.க., புரட்சித்தலைவி அம்மா என பன்னீர்செல்வம் அணி, கட்சிக்கு பெயர் சூட்டிக் கொண்டதோடு, இரட்டை மின் விளக்கு சின்னத்தைக் கோரிப் பெற்றது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் கிடைக்கும் என்று, டில்லி வழக்கறிஞர்கள், சல்மான் குர்ஷித் மற்றும் வீரப்ப மொய்லி ஆகியோர் சொன்னதை நம்பி, நம்பிக்கையுடன் காத்திருந்த சசிகலா தரப்பு, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதும் கடும் அப்செட் ஆகி உள்ளது.
மோடி தான் காரணம்:
இதையடுத்து, இப்படி இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு காரணம், பா.ஜ.,வும்; மோடியும்தான் என்று சொல்லி கூவத் துவங்கி உள்ளனர். இந்த பிரச்னையை துவக்கத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருப்பவர் அ.தி.மு.க.,வின் சிறுபான்மை பிரிவு செயலராக இருக்கும் அன்வர் ராஜா எம்.பி., ஜெயலலிதா இறந்ததும், பன்னீர்செல்வம் முதல்வர் ஆக்கப்பட்டதில் இருந்தே, அ.தி.மு.க., விஷயத்தில், பிரதமர் மோடியும், பா.ஜ.,வும் மூக்கை நுழைத்து வருகிறது என்று சொல்லி வருகிறார்.
அன்வர் ராஜாவிற்கு அவசர அழைப்பு:
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதும், டில்லியில் இருந்த அன்வர் ராஜாவை, அவசர அவசரமாக தமிழகம் வரவழைத்த, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், ஆர்.கே.நகர் தொகுதி சசிகலா அணி வேட்பாளருமான டி.டி.வி.தினகரன், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கான காரணம், பிரதமர் மோடியும், பா.ஜ.,வும்தான் என்று பேசுங்கள். தேவையானால், ஜெயா டி.வி.,யை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, ஏற்கனவே பா.ஜ.,வையும், மோடியையும் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும், அன்வர் ராஜா, இப்படி தலைமையே கேட்டுக் கொண்டதும், உற்சாகமாகி விட்டார்.
ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., : அத்வானி
ஜெய்பூர்: தனக்கு ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான் என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.ராஜஸ்தானில், பிரம்மா குமாரிஸ் இயக்கம் துவங்கி 80 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரம்மா குமாரிஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது:
நான், கராச்சியில் தான் பிறந்தேன். ஆனால், ஒழுக்கம், நடத்தை, கல்வி ஆகியவற்றை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான், எனக்கு கற்றுத் தந்தது. நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்தது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான். தவறான காரியங்களை எப்போதும் முன்னெடுக்கக் கூடாது என்றும் ஆர்.எஸ்.எஸ்., மூலம்தான் கற்றுக் கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருவிதாங்கூர் நாணயங்கள் விற்பனை?
திருவனந்தபுரம் : கேரளாவில், திருவிதாங்கூர் மன்னர் கால நாணயங்கள் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வருவதாக புகார் எழுந்துள்ளது.கேரளாவில், திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள், தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இத்துறை சார்பில் பழங்கால நாணய கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக எடுத்துச் செல்லப்படும் நாணயங்கள் விற்கப்படுவதாகவும், அதற்கு பதில் போலி நாணயங்கள் வைக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து, கேரள பண்பாட்டுத்துறை அமைச்சர், ராமச்சந்திரன், துறை செயலர் ராணி ஜார்ஜ் ஆகியோருக்கு நாணய ஆராய்ச்சியாளர், பீனா சரசன் மனு அனுப்பினார். ராணி ஜார்ஜ் கூறுகையில், ''வெளிச் சந்தையில் விற்கப்படுபவை, தொல்பொருள் துறையிடம் உள்ள நாணயங்கள் என கூற முடியாது. துறை வசம் உள்ள நாணயங்களை படத்துடன் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.







