Tuesday, 28 March 2017
விவசாயிகள் போராட்டம்: தமிழக அரசு ஏற்பாடு
புதுடில்லி: வறட்சி நிவாரணம் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் 14 நாட்களாக தொடர் பேராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளை மறுநாள் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளனர்.உள்ளூர் விமானபோக்குவரத்தில் இந்தியா மூன்றாமிடம்
டில்லி: உள்ளூர் விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா மூன்றாமிடம் பெற்றுள்ளது.உள்ளூர் விமானச்சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருவதால் உலகளவில் இந்தியா 3ம் இடம் பெற்றுள்ளது. ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையம் வௌியிட்டுள்ள பட்டியலில் 2016ம் ஆண்டுக்கான சந்தையில் இந்தியா 100 மில்லியன் பயணிகளுடன் 3ம் இடமும், சீனா 490 மில்லியன் பயணிகளுடன் 2ம் இடமும், அமெரிக்கா 815 மில்லியன் பயணிகளுடன் முதலிடமும் பெற்றுள்ளது. ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3ம் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் தீ விபத்து: குடிசை வீடுகள் எரிந்து நாசம்
ஸ்ரீநகர்:காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள சினார் பக்கில் சூன்டேகுல் குடிசை பகுதியில் நேற்று(மார்ச்-27) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல வீடுகள் எரிந்து நாசமடைந்தன. தீயை அணைப்பதற்காக போராடிய இரு வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.காற்று வேகமாக வீசியதால் பல குடிசைகள் உள்பட சில பெரிய வீடுகளும் எரிந்து சாம்பலாயின. விபத்து குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.பறக்கும் படையாக பன்னீர் டீம்: பணம் கொடுக்க தடுமாறும் அமைச்சர்கள்
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிடுகிறேன்; வெற்றி பெறுவேன் என்று, சசிகலா அணியின் வேட்பாளர் தினகரன், தைரியமாக சொல்லி வந்தாலும், உள்ளுக்குள் கடும் உதறலில் இருப்பதாக கூறப்படுகிறது.போன் உத்தரவு:
ஒவ்வொரு முறை தேர்தல் பிரசாரத்துக்கு புறப்படுவதற்கு முன்னும், களத்தில் இருக்கும் அத்தனை அமைச்சர்களுக்கும் போன் போட்டு பேசுகிறார்.இன்றைக்கு எந்தப் பகுதிக்குச் சென்றீர்கள்? எவ்வளவு பேரை பார்த்தீர்கள்? எவ்வளவு பேருக்கும் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற விவரங்களையெல்லாம் கேட்கிறார். துவக்கத்தில் உற்சாகமாக பதில் அளித்த அமைச்சர்கள், சில நாட்களாக, தினகரன் கேட்கும் கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளிக்க முடியாமல் தடுமாறி வருவதாகக் கூறப்படுகிறது.
காரணம், அமைச்சர்கள் எங்கு பணம் கொடுக்கச் சென்றாலும், அந்தப் பகுதியில் முன் கூட்டியே, பன்னீர் தரப்பு ஆட்கள் குவிந்து விடுகின்றனர். பல இடங்களில் மக்களை வளைக்கவும் முடியாமல், பணம் கொடுக்கவும் முடியாமல் அமைச்சர்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து, அமைச்சர் ஒருவர் கூறியதாவது:பணம் கொடுத்தால், நிச்சய வெற்றி என்று தினகரன் நினைத்துக் கொண்டு இடைத்தேர்தல் களத்துக்கு வந்து விட்டார். பணம் வாங்குகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பணம் கொடுப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. பன்னீர்செல்வம் தரப்பினரும், நேற்று வரை நம்மோடு இருந்தவர்கள் தானே. கட்சியினர் அவ்வளவு பேரும், அவர்களிடமும் இன்றளவிலும் தொடர்பில் இருக்கின்றனர்.
பணம் கொடுக்க முயற்சி:
மக்களுக்கு பணம் கொடுக்க, என்னதான் ரகசியமாக திட்டம் போட்டு செயல்பட்டாலும், பன்னீர்செல்வம் தரப்பினர், குறிப்பிட்ட ஏரியாவுக்கு, நாம் போய் சேர்வதற்கு முன்பாகவே சென்று விடுகின்றனர். நாம் போகும் போது, நம்மை பணம் கொடுக்கவிடாமல் தடுக்க அவர்கள் தயாராக இருக்கின்றனர். பல இடங்களிலும் இப்படி ஆகி விட்டது. பறக்கும் படை போல பன்னீர்செல்வம் அணியினர் செயல்படுகின்றனர். மதுசூதனன் லோக்கல் வேட்பாளர் என்பதால், நம்மைக் காட்டிலும் தொகுதிக்குள் அவர்கள் பலமாக உள்ளனர். இந்த யதார்த்தத்தைச் சொன்னால், தினகரன் புரிந்து கொள்வதில்லை. கோபப்படுகிறார். பணத்தை செலவழிக்க, அமைச்சர்கள் தயங்குவது போல நினைக்கிறார். இதற்கெல்லாம் என்ன செய்வதென்றே புரியவில்லை.இவ்வாறு அந்த அமைச்சர் புலம்பித் தீர்த்தார்.
அ.தி.மு.க. அம்மா அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
சென்னை: அ.தி.மு.க. அம்மா அணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது. ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப். 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. அம்மா அணியின்தினகரன் போட்டியிடுகிறார். இதையடுத்து அந்த அணியின் தேர்தல் அறிக்கையை பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட முதல்வர் பழனிசாமி பெற்றுக்கொண்டார்.
அறிக்கை விவரம்:
* ஆர்.கே. நகரில் 10 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
* 57 ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்கப்படும்.
* வேலைவாய்ப்புக்கான ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
* அரசு மற்றும் வங்கி பணியாளர் தேர்வுகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும்.
* அரசு வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.
* கொடுங்கையூர் குப்பை கிடங்கு மாசு இல்லாமல் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* இத்தொகுதியில் அரசு, தனியார் வங்கி கிளைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தனர்.







