கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்படும் கே.ஆர்.நாராயணன் பிலிம் இன்ஸ்டியூட் சேர்மனாக உள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன். பிலிம் இன்ஸ்டியூட்டில் இயக்குநராக இருந்த சங்கர் மோகன் தனது வீட்டுக் கழிவறையை பட்டியலின பெண் ஊழியரை வெறுங்கைகளால் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது.
மேலும் பிலிம் இன்ஸ்ட்டியூட் மாணவர்கள் மத்தியிலும் சாதிய பாகுபாடு பார்ப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து துப்புரவு பணியாளர்களும், பிலிம் இன்ஸ்ட்டியூட் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அடூர் கோபால கிருஷ்ணன், "பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் இயக்குநர் உள்ளிட்டவர்களுக்கு வீடு, கார் ஆகியவை அரசு வழங்கியுள்ளது. அந்த வீட்டை ஒவ்வொரு நாளும் சுத்தம்.செய்ய வேண்டியது துப்புரவு பணியாளராக நியமிக்கப்பட்டவரின் பணியாகும். ஆனால், அவர் வாரத்துக்கு ஒருமுறைதான் என்று வீடும், முற்றமும் சுத்தம் செய்துவந்துள்ளார். அதிலும், இயக்குநரின் வீட்டை சுத்தம் செய்யும்படி நான் கூறியதாக அந்த ஊழியர் பொய் சொல்லியுள்ளார்" என தெரிவித்திருந்தார்.சினிமா இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன்
மேலும் போராட்டம் குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அடூர் கோபாலகிருஷ்ணன், "துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதற்காக நன்றாக உடை அணிந்து, மேக்கப் போட்டுக்கொண்டு சினிமா நடிகைகளைப்போல வந்து பேட்டி கொடுக்கிறார்கள். அவர்களுக்கு யாரோ பயிற்சி அளித்திருக்கிறார்கள்" என கூறியிருந்தார். இயக்குநர் சங்கர் மோகன் பக்கம் தவறு இல்லை என அடூர் கோபால கிருஷ்ண கூறி வந்தார். இந்த நிலையில் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து கே.ஆர்.நாராயணன் பிலிம் இன்ஸ்ட்டியூட் இயக்குநர் பதவியில் இருந்து சங்கர் மோகன் கடந்த வாரத்தில் ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து பிலிம் இன்ஸ்ட்டியூட் மாணவர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் ஆர்.பிந்து, "14 அம்ச கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர். இயக்குநரை நீக்க வேண்டும் என்பது மாணவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இயக்குநர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய இயக்குநரைத் தேர்வுசெய்ய கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோரிக்கைகளாக நிறைவேற்றப்படும்" என்றார்.உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து
கே.ஆர்.நாராயணன் பிலிம் இன்ஸ்ட்டியூட் இயக்குநர் சங்கர் மோகன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அதன் சேர்மனாக இருக்கும் அடூர் கோபால கிருஷ்ணன் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்கள் அவரிடம் பேசி சமாதானம் செய்திருக்கிறார்கள். இருப்பினும் அவர் ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாகவும், இன்று தனது முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
http://dlvr.it/Shj9kN
http://dlvr.it/Shj9kN