சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, இந்தாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தினால், தமிழக அரசை மத்திய அரசு கலைத்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறினார். இதற்கு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக நலன் களுக்கு எதிராக செயல்படும்; கருத்து கூறும் சுப்பிரமணியன் சாமியை தமிழகத்திற்குள் விட மாட்டோம் என சொல்லி, சவால் விட்டுள்ளனர்.
இது குறித்து, சுப்பிரமணியன் சாமி கூறியதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என, வெத்து வேட்டு அரசியல் நடத்தி, பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் வெட்டிப் பேச்சைப் பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தமிழகத்தில் சட்ட ரீதியில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு இந்த பிரகஸ்பதிகள் எடுத்த நடவடிக்கை என்ன? ஏதோ இவர்கள் மட்டுமே தமிழர்கள் என்பது போலவும்; என்னைப் போன்றவர்கள் தமிழர்களே இல்லை என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த விழைகின்றனர்; அது தவறு. நான் மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த பச்சைத் தமிழன். நான் இவர்களோடு சேர்ந்து, நாகரிகமற்ற அரசியலை செய்யவில்லை என்றதும், என்னை எதிர்ப்பதையே இவர்கள் முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். என்னை தமிழகத்திற்குள்ளேயே விட மாட்டேன் என சொல்லும் சீமானும்; வேல்முருகனும், தமிழக எல்லையில் நின்று, செக்யூரிட்டி கார்டு வேலை பார்க்கிறார்களா என்ன?
நேரில் விவரித்தேன்:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது மட்டுமல்ல, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடிக்கு நேரிலேயே சென்று விவரித்தேன். அதன் பின்தான் அவசியம் உணர்ந்தது மத்திய அரசு. காட்சிப் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி உத்தரவிட்டதோடு, அதை, உச்ச நீதிமன்றத்திலும் தெரிவித்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியது. அதன் அடிப்படையில் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் என் வாதங்கள் தொடர்ந்தன. விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்தவர்கள், ஜல்லிக்கட்டை நடத்துவதில் உள்ள ஆபத்து மற்றும் மாடுகளுக்கு ஏற்படும் துன்பங்கள் குறித்தெல்லாம் பட்டியலிட்டு, ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை நிரந்தரமாக்க வேண்டும் என கோரினர்.
நுட்பமான பிரச்னை:
இந்த பிரச்னையை நுட்பமான உணர்வுள்ள பிரச்னையாகவே உச்ச நீதிமன்றம் பார்க்கிறது. அதனால், இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க, உச்ச நீதிமன்றம் தயாரில்லை. இருந்தாலும், இந்தாண்டு பொங்கலுக்குள், சாதகமான உத்தரவை பெற்று விட வேண்டும் என, தமிழக அரசு முயற்சித்தது. நானும் அப்படித்தான் முயற்சித்தேன். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவசர உத்தரவு போட தயாரில்லை. நிதானமாக முடிவெடுத்து, தீர்ப்பு சொல்ல முடிவெடுத்து விட்டார்கள். இந்த விஷயத்தில், தமிழன் என்ற நிலையில், எனக்கும் வருத்தம்தான். இருந்தாலும் என்ன செய்ய முடியும்? உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அதுதான் சட்டம். ஆனால், தமிழகத்தில், அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இறங்கி, தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தலாம் என, அறைகூவல் விடுக்கின்றனர். இது முழுக்க தவறு.
காவிரி பிரச்னையில் கர்நாடக அரசும்; முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளாவும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை என நாம் கொந்தளித்தோம். இப்போது, நாமும் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க மாட்டோம்; தடையை மீறுவோம் என்றால், அது நீதிமன்ற அவமதிப்பாகும். அப்படி மீறுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக அரசு மீதே, மத்திய அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க முடியும். இந்த அரசியல் சாசனப் பிரிவு 356ஐ பயன்படுத்தி, ஆட்சியை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை தமிழத்தில் கொண்டுவர முடியும். இதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன். அதற்குத்தான், ஜல்லிக்கட்டை வைத்து, லேட்டஸ்ட்டாக பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர், எனக்கு எதிராக கொந்தளிக்கின்றனர். அவர்கள் பேச்சையெல்லாம் ஒருநாளும் நான் பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில், உச்ச நீதிமன்றம், கட்டாயம் தமிழர்களின் உணர்வுகளை மதித்து தீர்ப்பளிக்கும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு; நம்பிக்கை. அதுவரை, எல்லோரும் சில காலம் பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.
இவ்வாறு சாமி கூறினார்.
English Summary:
Chennai: Tamil Nadu to hold the gravel, be sued in the Supreme Court, senior BJP leader Subramanian Sami, despite the orders of the highest court in the state this year, jallikkattu competition, and lead to dissolve the government of Tamil Nadu state, the president said that the government should implement.