இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இண்டஸ் ஓ எஸ் என்ற மொபைல் போன்களுக்கான இயங்குதள அமைப்பு, ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளத்தை விஞ்சி, நாட்டின் இரண்டாவது பிரபல ஸ்மார்ட்போன் இயங்குதளம் என்ற இடத்தை பெற்றுள்ளது.
இந்தியாவில் விற்கப்படும் 10 ஸ்மார்ட்போன்களில், ஒன்பது ஸ்மார்ட்போன்களில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இயங்குதளமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மற்ற சர்வதேச இயங்குதள வடிவமைப்பாளர்களால் இந்தியாவில் தங்களின் தளத்தை விரிவுபடுத்த முடியவில்லை.
சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாதான் உலக அளவில் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாகத் திகழ்கிறது.
2016-ஆம் ஆண்டில், ஸ்மார்ட்போன்களின் விற்பனை 100 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், நாட்டில் ஆங்கிலம் அறியாத 80 சதவீதக்கும் மேலான மக்கள் தொகை இருக்கும் போது, நாட்டின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள புதிய வாடிக்கையாளர்களை சென்றடைவது ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சவாலாகும்.
இச்சூழலில், இந்த இடைவெளியை குறைக்க நாட்டின் பல பகுதிகளிலும் மும்பையை சேர்ந்த இண்டஸ் ஓ எஸ் இயங்குதளம் வைத்துள்ளது.
'இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வசதிகள்':
இந்திய மக்கள் தொகையில் 90 % பேர் பேசும் 12 மொழிகளில், இந்த இயங்குதளம் அமைந்துள்ளதுதான் இது விற்பனையாவதற்கு மிகப் பெரிய அம்சமாக உள்ளது.
இண்டஸ் இயங்குதளம் அடிப்படை முதலே புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு இயங்குதளமில்லை என்றாலும், ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை வாடிக்கையாளர்களின் பிரத்யேக தேவைகளுக்காகவும், இந்திய கலாச்சாரத்திற்கேற்றார் போலவும் சற்றே மாற்றி அமைத்து இதன் வடிவமைப்பாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய இண்டஸ் ஓஎஸ் இயங்குதளத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான ராகேஷ் தேஷ்முக் கூறுகையில்,''குறிப்பாக இந்திய வாடிக்கையாளர்களுக்கென ஒரு பொருளை உருவாக்க நாங்கள் விரும்பினோம்'' என்று குறிப்பிட்டார்.
எளிமையாக பணம் செலுத்தும் முறை:
பல இந்திய மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இண்டஸ் ஓஎஸ், எளிமையான தட்டச்சு வசதியையும், பிராந்திய மொழிகளுக்கு இடையேயான மொழிபெயர்ப்பு ஆகிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இந்த தொழில்நுட்பத்தை இண்டஸ் நிறுவனம் காப்புரிமை செய்துள்ளது.
மற்ற இயங்குதள அமைப்புகளைக் காட்டிலும், ஆஃப் பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்வதற்கு கடன் அட்டை அல்லது இ-மெயில் முகவரி எதுவும் வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லை. அவர்கள் தங்களின் தொலைபேசி கட்டணங்கள் மூலம் இதனை செலுத்தலாம்.
இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் டெபிட் அல்லது கடன் அட்டைகளை வைத்திருப்பதில்லை. ஒரு சிறிய சதவீத அளவிலான மக்களே இ-மெயிலை பயன்படுத்துகின்றனர்.
இது குறித்து தேஷ்முக் கூறுகையில், ''சராசரியாக எங்களது வாடிக்கையாளர்கள் 25 செயலிகளைப் ( ஆப்) பயன்படுத்துகின்றார்கள். முதல் முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களையும் இது உள்ளடக்கும்'' என்று தெரிவித்தார்.
காத்திருக்கும் சவால்கள்:
தற்போது நாட்டில் ஆறு மில்லியன் ஸ்மார்ட்போன்களில் இண்டஸ் இயங்குதளம் உள்ளது. வரும் 2019-இல், மேலும் 100 மில்லியன் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களை தங்களின் வாடிக்கையாளர் பட்டியலில் சேர்க்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதே காலகட்டத்தில், இந்தோனீசியா, நேபாளம் மற்றும் மியான்மர் ஆகிய புதிய ஸ்மார்ட்போன் சந்தைகளில் வளர இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நிறுவப்பட்டதிலிருந்து தற்போதுவரை வாடிக்கையாளர்களை இண்டஸ் நிறுவனம் தொடர்ந்து பெற்றுள்ள போதிலும், எதிர்கால திட்டங்கள் இந்நிறுவனத்துக்கு சவாலாக அமையக்கூடும்.
ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய பரிணாமம் தேவை:
அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் ஏறக்குறைய 300 மில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு மாறக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில் மிகப் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் புரியாது.
இந்த சூழலில், இண்டஸ் போன்ற நிறுவனங்கள், ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் ஸ்மார்ட்போன்களில் உள்ள சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றைவிட தங்களுக்குப் புரியும் மொழியை வழங்கும் ஸ்மார்ட்போனையே பயன்பாட்டாளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகின்றனர்.
English Summary:
Designed in India, the Indus OS operating system for mobile phones, Apple's operating system IOS outnumbered , has gained its place as the country's second most popular smartphone platform.