பழ.செல்வகுமார், மாநில துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க
“பா.ஜ.க அரசின் காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரித்திருக்கிறார் முதல்வர். மாநிலங்களிலிருந்து வசூலிக்கப்படும் நிதியை, எப்படி மீண்டும் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது தொடர்பான நிதி ஆணையத்தின் பரிந்துரைகளைப் புறந்தள்ளிவிட்டு, இந்த ஆண்டும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பல சிறப்புத் திட்டங்களையும், கூடுதல் நிதியையும் வாரி வழங்கியிருக்கிறது ஒன்றிய அரசு. கூடவே, அரசுத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்குச் சொற்பமான நிதியை ஒதுக்கி வஞ்சித்திருக்கிறது. தமிழ்நாட்டில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியைக்கூட அறிவிக்கவில்லை. அதேபோல புதிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கல்வி நிதியை ஒதுக்காமல் அடாவடி செய்கிறது மோடி அரசு. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க தமிழ்நாடு கேட்ட நிதியைக்கூட இன்னமும் தரவில்லை. `தமிழக மக்களின் வரிப்பணம் மட்டும் வேண்டும்... ஆனால், திரும்பத் தர மாட்டோம்’ என்பது காலனியாதிக்க மனநிலை. தங்கள் வெறுப்பு அரசியலால் சாதிக்க முடியாததை, இப்படியான நெருக்கடிகள் மூலமாகச் சாதிக்கத் துடிக்கிறார்கள். இவர்களின் பகல் கனவுகளைத் தகர்த்து, மறுக்கப்படும் மாநில உரிமைகள் அனைத்தையும் சட்டப் போராட்டத்தின் மூலம் பெற்றே தீரும் நமது திராவிட மாடல் அரசு!” பழ.செல்வகுமார், ஏ.பி.முருகானந்தம்
ஏ.பி.முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க
“முதல்வரின் கருத்தில் உண்மை இல்லை. மத்திய பா.ஜ.க அரசு, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரிதான் பார்க்கிறது. எதிர்க்கட்சியினர்தான் அரசியலுக்காக இல்லாத கதைகளையெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் தமிழக கிராமப்புறப் பகுதியில் மட்டும் 6.8 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. `தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் 58 லட்சம் கழிவறைகள், `முத்ரா’ திட்டத்தின்கீழ் 2.67 லட்சம் கோடி ரூபாய் உத்தரவாதமில்லாத கடன் எனப் பல திட்டங்கள் கிடைத்திருக்கின்றன. தற்போது வரை நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, தமிழகத்துக்கு 6.99 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு 37,965 கோடி, அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு ரூ.11,116 கோடி, வீட்டு வசதித் திட்டத்துக்கு 4,739 கோடி என மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத திட்டங்களே கிடையாது. இவை தவிர, விவசாயிகள் உதவித்தொகை, வீடுதோறும் குடிநீர் இணைப்பு, வந்தே பாரத் ரயில்கள், மக்கள் மருந்தகம் போன்ற பல திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. இதையெல்லாம் மறைத்துவிட்டு, தமிழகத்துக்கு ஒரு ரூபாய்கூட மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் புறந்தள்ள வேண்டும்.”
http://dlvr.it/TDCWdt
Saturday 14 September 2024
Home »
» `சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் நிதியை மத்திய அரசு நிறுத்திவைக்கிறது' என்ற முதல்வரின் விமர்சனம்?