மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள மால்வான் என்ற இடத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 35 அடி உயர சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து விழுந்தது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடிதான் கடந்த டிசம்பர் மாதம் திறந்து வைத்தார். இச்சிலை உடைந்து விழுந்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார். அதே சமயம் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இப்போராட்டம் மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவில் நடந்தது. இதில் தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவார், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே உட்பட மூன்று கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதில் உத்தவ் தாக்கரே பேசும் போதும், புதிய பாராளுமன்ற கட்டடம், அயோத்தி ராமர் கோயிலில் மழை காரணமாக தண்ணீர் கசிவு ஏற்பட்டதை சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததுடன் ஒப்பிட்டு தரம் குறைவாக கட்டியிருப்பதாக குற்றம் சாட்டினார். உத்தவ் தாக்கரே மேலும் பேசுகையில், ``சிலை உடைந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்கையில் அவரது ஆவணத்தை கவனித்தீர்களா? 8 மாதத்திற்கு முன்பு திறந்து வைத்த சிலை உடைந்து விழுந்ததற்கு என்ன மன்னிப்பு வேண்டியிருக்கிறது. சிலை கட்டுவதில் நடந்த ஊழலுக்காக மன்னிப்பு கேட்டாரா? சத்ரபதி சிவாஜியை அவமதித்தவர்களை மகாவிகாஷ் அகாடி (எதிர்க்கட்சி கூட்டணி) ஒன்றிணைந்து தோற்கடிக்கவேண்டும். சத்ரபதி சிவாஜி மன்னர் மட்டும் கிடையாது... அவர் இன்றைக்கு எங்களுக்கு கடவுள்.
நாங்கள் சிலை உடைந்ததை அரசியலாக்குவதாக பா.ஜ.க கூறுகிறது. சிலை உடைந்த தவறை மன்னிக்க முடியாது. நாட்டின் நுழைவு வாயிலாக கருதப்படும் கேட்வே ஆஃப் இந்தியாவில் நின்று கொண்டு சொல்கிறோம். இந்த சட்டவிரோத அரசு வெளியேற வேண்டும். நாங்கள் மாநிலத்தின் பெருமைக்காக போராடுகிறோம். மகாயுதி அரசு வெளியேறவேண்டும் என்று சொல்வதற்காக இங்கு வந்திருக்கிறோம். சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்தது ஊழலுக்கு எடுத்துக்காட்டாகும். சத்ரபதி சிவாஜியின் ஆதரவாளர்களை இது அவமதிக்கும் செயலாகும்'' என்றார்.
இதில் பேசிய நானா பட்டோலே, ``சிவாஜிக்கு துரோகம் செய்யக்கூடிய இந்த அரசை கொண்டு வந்ததற்காக சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது போன்று இனி நடக்காது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்றார். முன்னதாக எதிர்க்கட்சி தலைவர்கள் ஹுதாத்மா சோக்கில் இருந்து கேட்வே ஆஃப் இந்தியாவிற்கு பேரணியாக வந்தனர். எதிர்க்கட்சிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை அரசியலாக்குகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சத்ரபதி சிவாஜியை அவமதித்தனர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி செங்கோட்டையில் இருந்து ஒரு முறை கூட சத்ரபதி சிவாஜியின் பெயரை உச்சரிக்கவில்லை. இதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்குமா? பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்குகின்றன'' என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ''சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்தது, அரசியல் பிரச்னை கிடையாது. நடந்தது துரதிஷ்டவசமானது. ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. கர்நாடகாவில் இரண்டு ஜே.சி.பி மெஷின் கொண்டு வரப்பட்டு சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்டு அடியோடு அகற்றப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் இங்கு போராடிக்கொண்டிருக்கின்றன. மகாராஷ்டிரா மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். தேர்தலில் மக்கள் அவர்களை காலணியால் அடிப்பார்கள்" என்று தெரிவித்தார்.வேலூர்: இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ-க்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் - எஸ்.பி நடவடிக்கையும், பின்னணியும்!
http://dlvr.it/TCfVCF
Sunday 1 September 2024
Home »
» சிவாஜி சிலை உடைந்த விவகாரம்: `பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டதில், ஆணவம் தெரிகிறது!' - உத்தவ் தாக்கு