கடந்த 13-ம் தேதி, டெல்லியில் நடைபெற்ற `சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு' புத்தகம் வெளியிட்டு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``மகாத்மா காந்தியின் அறிவுரைப்படிதான், சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினார்" என கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு நாடுமுழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், சாவர்க்கரின் கருணை மனுக்கள் தொடர்பான உண்மை வரலாற்றைத் தேடிச்செல்வது அவசியமாகிறது.ராஜ்நாத் சிங்
என்ன பேசினார் ராஜ்நாத் சிங்:
``சாவர்க்கர் இந்திய வரலாற்றின் அடையாளம். அவரைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவரை தாழ்த்திப் பார்ப்பது ஏற்புடையது அல்ல. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய சுதந்திரத்துக்காக போராடிய அவருக்கு பிரிட்டிஷ் ஆரசாங்கம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள் சாவர்க்கர் ஒரு ஃபாசிஸ்ட் என்று முத்திரை குத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல், சாவர்க்கர் பற்றி தொடர்ச்சியாக பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவர் சிறையில் இருந்து, தான் விடுவிக்கப்பட வேண்டும் என பலமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மன்னிப்புக் கடிதங்கள் எழுதினார் என்று குறிப்பிடப்பட்டுவருகிறது. ஆனால், மகாத்மா காந்தி அறிவுறுத்தலின்படிதான் அவர் மன்னிப்புக் கடிதங்கள் எழுதினார்." என பாஜக அரசின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சிகளின் கண்டனம்:
ஏ.ஐ.எம்.ஐ கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி ``பாஜகவினர் வரலாற்றை சிதைப்பதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். மகாத்மா காந்தியை நீக்கிவிட்டு சாவர்க்கரை தேசத்தின் தந்தையாக்கி விடுவார்கள்’’ என விமர்சனம் செய்திருக்கிறார்.அஸாதுதீன் ஒவைசி
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், `` சாவர்க்கர் செல்லுலார் சிறையில் இருந்தபோது, மகாத்மா காந்தி வர்தா சிறையில் இருந்தார். அந்த சமயத்தில் சாவர்க்கரை, காந்தி எப்படி தொடர்பு கொண்டார்?" என கேள்வி எழுப்பியவர், ``பாஜகவினர் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகின்றனர். சாவர்க்கர் சிறையில் இருந்தபடியே பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பினார். பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பி கருணை பெற்றபின்னரே சிறையில் இருந்து வெளியே வந்தார். 1925-ல் சிறையிலிருந்து வெளியில் வந்ததும் தேசப் பிரிவினைக் கோட்பாட்டை முதலில் பரிந்துரைத்தவர் சாவர்க்கர் தான்!" என காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல்
இதேபோல் இதர அரசியல் கட்சித்தலைவர்களும் காந்தியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும்படி, தொடர்ச்சியாக பல்வேறு பொய்களை பா.ஜ.க தலைவர்கள் பரப்புகின்றனர் என குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்தனர்.அமித்ஷா
இந்நிலையில் மூன்றுநாள் பயணமாக அந்தமான் சென்றிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ``சாவர்க்கரின் வாழ்க்கையை ஒருவர் எப்படி சந்தேகப்பட முடியும். தேசத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனைகளை அனுபவித்த சாவர்க்கர், சிறையில் மாட்டைப் போல் செக்கு இழுத்தார். அவரைப் பற்றிப் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும்" என பதிலுக்கு பதில் தெரிவித்திருக்கிறார்.
சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினாரா இல்லையா?
1911-ம் ஆண்டு அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் மொத்தமாக 6 மன்னிப்புக் கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதியிருக்கிறார் என வரலாற்று ஆய்வாளர்கள் பலர் ஆவணங்களுடன் கூறுகின்றனர்.சாவர்க்கர்
குறிப்பாக, வழக்கறிஞரும் எழுத்தாளருமான ஏஜி நூரானி, ``1911 ஜூலையில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட 6 மாதத்திற்குள் சாவர்க்கர் தனது முதல் மன்னிப்புக் கடிதத்தை சமர்ப்பித்தார். 1913 நவம்பரில் சாவர்க்கர் தனது இரண்டாவது மன்னிப்புக்கடிதத்தை சமர்ப்பித்தார். 1914, 1918 ஆகிய ஆண்டுகளில் சாவர்க்கர் எழுதியதாக கூறப்படும் மன்னிப்புக்கடிதம் பற்றி 1920-ம் ஆண்டு சட்டமன்றத்தில் உள்துறை உறுப்பினர் சர் வில்லியம் வின்சென்ட் குறிப்பிட்டிருக்கிறார்” என பதிவு செய்துள்ளார். மேலும், ``மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து 1914-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி புறப்பட்டு 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதியே இந்தியாவிற்கு வருகை தந்தார். அவரது வருகைக்கு முன்பே சாவர்க்கர் இருமுறை கருணை மனுக்களை எழுதி இருக்கிறார்" என ஒரு ஆங்கில நாளேட்டுக்கு எழுதிய கட்டுரையில் விவரித்திருக்கிறார்.சாவர்க்கர்
அதேபோல, சாவர்க்கர் பற்றி ஆய்வுகள் செய்து வரும் நிரஞ்சன் தக்லே என்பவர், `` 1911 ஜூலை 11-ம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன்பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், 1924-ல் சாவர்க்கர் தனது ஆறுவது மன்னிப்புக் கடிதத்தை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதியிருக்கிறார்" என ஒரு சர்வதேச ஆங்கில ஊடகத்தின் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.காந்தி கொலை வழக்கில் சாவர்க்கர்
அதேபோல் இன்னொரு கடிதத்தில், ``பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கைகள், அரசியலமைப்பு முறைகள் தனக்கு நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது. இப்போது வன்முறையின் பாதையை கைவிட்டுவிட்டேன் என சாவர்க்கர் கடிதம் எழுதியதாகவும் அதன் விளைவாக 1919 மே 30, 31 ஆகிய இருதேதிகளில் அவருடைய மனைவி, தம்பிகளைப் பார்க்க அந்தமான் சிறையில் இருந்த சாவர்கருக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும்" நிரஞ்சன் தக்லே கூறியிருக்கிறார்.
மேலும், சாவர்க்கர், To : The home member of the government of India என்று அச்சிடப்பட்டிருக்கும் ஒரு கடிதத்தில் ``சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள். அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால், நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்கு சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்ட வில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கே சென்று நிற்பேன்!" என பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.சாவர்க்கர்
சாவர்க்கர் தனது ஐந்தாவது கடித்ததில் ``தன் மீது கருணை காட்டுமாறும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட மாட்டேன் என்றும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், சாவர்க்கர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்" எனவும் கூறப்படுகிறது.சாவர்க்கர்
இதன் விளைவாகவே, சாவர்க்கர் அந்தமான் செல்லுலார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, 1921 மே மாதம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார் என கூறப்படுகிறது. மேலும், 1924-ம் ஆண்டு சாவர்க்கர் எழுதிய ஆறாவது கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், ``எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக்கூடாது; ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது, அடுத்த 5 வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில், 1924 ஜனவரி 6-ம் தேதி சாவர்க்கர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
காந்தி சொல்லித்தான் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினாரா?
உண்மையில் சாவர்க்கர் சிறைக்குச் சென்றது 1911-ம் ஆண்டு. ஆனால் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தது 1915-ம் ஆண்டு. அதாவது, காந்தி இந்தியா திரும்பும் முன்னரே, சாவர்க்கர் 1911, 1913, 1914 ஆகிய ஆண்டுகளில் தனது 3 மன்னிப்புக் கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதி அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.மகாத்மா காந்தி
காந்தி சேவாகிராம் ஆசிரமத்தில் உள்ள பதிவுகளின்படி, 1920-ல் சாவர்க்கரின் இளைய சகோதரர் நாராயணன் சாவர்க்கர், தங்கள் சகோதரர்களின் விடுதலைக்கு உதவுமாறு மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார். 1920 ஜனவரி 25-ம் தேதி அதற்கு பதிலளித்து கடிதம் போட்ட காந்தி, ``உங்கள் சகோதரர் செய்த குற்றம் முற்றிலும் அரசியல் சார்ந்தது என்ற உண்மையை தெளிவுபடுத்தி, வழக்கின் உண்மைகளை முன்வைத்து ஒரு மனுவை உருவாக்குமாறும்" அறிவுறுத்தினார். மேலும், ``முன்பு நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியது போல், நான் எனது வழியில் இந்த விசயத்தில் நகர்கிறேன் ” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.காந்தி சாவர்க்கரின் சகோதருக்கு எழுதிய பதில் கடிதம்
இதில் எந்த இடத்திலும் சாவர்க்கரை கருணை மனு அல்லது மன்னிப்புக்கடிதம் எழுதும்படி காந்தி அறிவுறுத்தவில்லை. சாவர்க்கரின் இளைய சகோதரர் உதவிகேட்டு தனக்கு அனுப்பிய கடிதத்துக்கு பதில் எழுதிய காந்தி, ஒரு மனுவை தாக்கல் செய்யுமாறு சகோதரர்களிடம் காந்தி அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கு முன்பாகவே பலமுறை சாவர்க்கர் பலமுறை பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்புக்கடிதம் எழுதியிருக்கிறார். எனவே, காந்தி சொல்லித்தான் சாவர்க்கர் கருணை மனுவை எழுதியதாக ராஜ்நாத் சிங் கூறியிருப்பதில் உண்மை இல்லை என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
http://dlvr.it/S9mzB9