ஜல்லிக்கட்டுக்கான தடையை விலக்கக்கோரி போராட்டங்கள் உச்சம் பெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி நீதிமன்றம் சென்ற பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும், அந்த அமைப்பின் ஆதி அந்தங்கள் குறித்தும், அந்த அமைப்போடு தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல்களும் அழுத்தமாக எழுந்திருக்கின்றன.
People for the Ethical Treatment of Animals (PETA) அமைப்பு, 1980ல் அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் தொடங்கப்பட்டது. விலங்குகள் மீதான வதையை தடுத்து சுதந்திரமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காகவே இந்த அமைப்பை தொடங்குவதாக தெரிவித்தார்கள்.
பெரும்பாலான நாடுகளில் இந்த அமைப்புக்கு கிளைகள் உண்டு. அந்தந்த நாடுகளில் பிரபலமாக இருக்கும் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், பிரபலங்களை தங்கள் அமைப்பின் தூதர்களாக நியமித்து, நிர்வாண போட்டோக்கள் எடுத்து விளம்பரம் செய்வது இந்த அமைப்பின் பிரசார யுத்திகளில் ஒன்று. இதுமாதிரியான விளம்பரங்களால் பீட்டா எளிதில் பிரபலமானது.
வெளிப்படையாகப் பார்க்கும்போது, நல்ல கொள்கைகளைக் கொண்ட அமைப்பாகத் தெரியும் பீட்டா, உண்மையில் விபரீதமான பல செயல்களுக்கு துணைபோவதாக விலங்குகள் நல ஆர்வலர்களே குற்றம் சாட்டுகிறார்கள்.
“அமெரிக்கர்களின் வாழ்க்கை முறை மிகவும் அழுத்தமானது. தனிமையை விரும்புபவர்கள். தனிமையால் உருவாகும் மன உளைச்சலைத் தடுப்பதற்காக வளர்ப்புப் பிராணிகள் கலாச்சாரம் அங்கே உருவானது. பல ஆயிரம் கோடி வணிகம் அதற்குள் இருக்கிறது. அப்படி வளர்த்து கைவிடப்படும் வளர்ப்புப் பிராணிகளுக்கு ஆதரவு தரும் அமைப்பாகத் தான் பீட்டாவை உருவாக்கினார்கள். ஆனால் அப்படி கைவிடப்படும் பிராணிகளுக்கு ஆதரவு தர ஒரு சிறு அறை கூட பீட்டாவிடம் இல்லை என்று சர்வதேச பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ளன. தெருக்களில் சுற்றும் பிராணிகளை 15 நாட்கள் வரை கூண்டுக்குள் வைத்து பராமரிப்பார்கள். அதுவரை யாரும் வந்து அந்த பிராணிக்கு பொறுப்பேற்கவில்லை என்றால் அவற்றை கொன்று புதைத்து விடுவார்கள். இதற்கென ஏராளமான நன்கொடைகளை கார்பரேட் நிறுவனங்களிடம் பெறுகிறார்கள். தங்கள் வலிமையைப் பயன்படுத்தி தங்களுக்குச் சாதகமாக சட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கால்நடைகள் சமூகச் சொத்து. காங்கேயம் மாடு, ஓங்கோல் மாடு என பகுதிக்கொரு ரகம் இருக்கும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கால்நடைகள் கம்பெனிகளின் சொத்து. ஒரு ரகத்தை ஒரு கம்பெனி சொந்தம் கொண்டாடும். ஒவ்வொரு கம்பெனியும் 50 ஆயிரம், 1 லட்சம் என ஏராளம் மாடுகள் வளர்ப்பார்கள். இறைச்சி, பால் வணிகமெல்லாம் அவர்கள் கையில்தான் இருக்கும். அந்த கம்பெனிகள் தங்கள் வணிகமுறைக்கு இந்தியாவை மாற்ற முயற்சிக்கின்றன. இதற்கு துணைபோகிறது பீட்டா.
இயற்கையை மேய்ந்துதான் நம் மாடுகள் வளரும். மேயப் போகும் இடத்தில் கோயில் மாடுகள், பொலிகாளைகளோடு தானாக இணைந்து பிரசவிக்கும். இவற்றின் வீரியம் குறையாமல் இருக்கத்தான் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற விளையாட்டுகளை நடத்துவார்கள். பொலிகாளைகள், கோயில் காளைகள் இருக்கும் வரை நம் நாட்டு மாட்டினங்களை அழிக்கவே முடியாது. அவைதான் மாடுகளுக்கு விதை.
உரம், பூச்சிக்கொல்லிகள் வழியாக நம் விவசாயத்தை அழித்து பாரம்பரிய விதைகளை ஒழித்து, பாதி சந்தையை ஆட்கொண்டுவிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் அடுத்து கண் வைத்திருப்பது நம் கால்நடைகள் மேல். அதற்கு மூன்று விதமான காரணங்கள் உண்டு. ஒன்று, இந்தியாவின் பிரமாண்டமான பால் சந்தையைக் கைப்பற்றுவது. இரண்டாவது காரணம், இறைச்சி.
உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னிலை வகிப்பது இந்தியாதான். 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. மாட்டிறைச்சி வர்த்தகத்தில் இருப்பது மொத்தம் 8 நிறுவனங்கள்.
இந்திய நாட்டு மாடுகள், இயற்கையாக விளையும் செடி, கொடிகளை மேய்ந்து வளர்வதால் அவற்றிற்கு ஏக வரவேற்பு. ஜல்லிக்கட்டு போன்ற கேளிக்கைகளை அழித்துவிட்டால் மக்கள் தங்கள் மாடுகளை அடிமாட்டுக்கு விற்றுவிடுவார்கள். மூன்றாவது, கலப்பின மாட்டு ரகங்களை இந்தியாவுக்குள் கொட்டுவது. ஜெர்ஸி உள்ளிட்ட பல கலப்பினங்கள் ஏற்கனவே இந்தியாவை ஆக்கிரமித்து விட்டன. இந்தக் கலப்பின மாடுகளில் பெரும் காசு பார்க்கின்றன அந்நிய நிறுவனங்கள்.
நாட்டு மாடுகளை குறி வைக்கும் பீட்டா
இந்த மூன்று துறைகளைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் அஜெண்டாவை பீட்டா இந்தியாவில் செயல்படுத்துவதாக குற்றச்சாட்டு உண்டு. நானும் பீட்டாவோடு தொடர்பில் இருந்தவள்தான். அவர்களின் நோக்கம் புரிந்தபிறகு வெளியே வந்துவிட்டேன். முரண்பாடுகளின் மொத்த உருவாக மாறிவிட்டது பீட்டா. நாய்கள் இணை சேர்வது அதன் பிறப்புரிமை. ஆனால், பீட்டா குடும்பக் கட்டுப்பாடு செய்ய வலியுறுத்துகிறது. ஆகப் பெரிய வன்முறை இது. இதில் உள்ளூர் விலங்குகள் நல அமைப்புகளும் பெரும் காசு பார்க்கின்றன. முன்பு வீட்டுக்கு வீடு கோழி வளர்ப்பார்கள். பிராய்லர் கோழியைக் கொண்டு வந்து நாட்டுக்கோழி இனங்களை அழித்தார்கள். இன்று பிராய்லர் கோழி விற்பனையில் இருப்பது உலக அளவில் இரண்டே கம்பெனிகள்தான். நாம் சாப்பிடும் ஒவ்வொரு கோழித்துண்டில் இருந்தும் அந்த நிறுவனங்களுக்குப் பணம் போகிறது. விதையை கம்பெனிகளிடம் எப்படி வாங்குகிறோமோ, அதைப்போல வெளிநாட்டில் விந்தணுக்களை வாங்கித்தான் நம் கலப்பின மாடுகளைக் கன்று போட வைக்கமுடியும். அதற்காகத்தான் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஜல்லிக்கட்டை தடை செய்வதற்குப் பின்னால் இருப்பது நிச்சயம் கார்பரேட் நிறுவனங்கள் தான். பீட்டா போன்ற அமைப்புகள் அதற்கு துணை நிற்கின்றன’’ என்கிறார் தேசிய கால்நடை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், விலங்குகள் நல ஆர்வலருமான ஹௌகர் அஜீஸ்.
சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் கார்த்திகேய சிவ சேனாதிபதியும் பீட்டா மீதான குற்றச்சாட்டுகளை வழிமொழிகிறார்.
பீட்டா முகத்திரையை கிழிக்கும் சமூக ஆர்வலர்
“ஜல்லிக்கட்டைத் தடுப்பதில் சர்வதேச அளவிலான சதி இருக்கிறது என்று நெடுங்காலமாக குற்றம் சாட்டி வருகிறோம். அது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடக்கும் தை 3ம் தேதியன்று டென்மார்க்கில் இருந்து 100 வெளிநாட்டு காளைகள் சென்னையில் வந்து இறங்கியிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்திய உணவுச் சந்தையைக் கைப்பற்றும் சதி அரசுகள் மற்றும் நீதிமன்றத்தின் உதவியோடு கிட்டதட்ட நிறைவு பெறும் நிலைக்கு வந்திருக்கிறது. . இந்த சதியில் இருந்து மீண்டு நம் வேளாண் பாரம்பரியத்தையும் நாட்டு மாடுகளையும் காப்பாற்ற வேண்டும் என்றால் விவசாயிகள் அரசியல் மறந்து, மதம் இனம் மறந்து கரம் கோர்த்து நிற்க வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டுக் காளைகளை விவசாயிகள் மாற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வீரியமிக்க நாட்டு மாடுகள் கிடைக்கும். ஒரு காளை மற்றும் பசுவின் மூலம் பிறக்கும் கன்றுகள் மூன்று ஆண்டுகளில் இனப்பெருக்கம் செய்ய தயாராகி விடும். அவற்றை மீண்டும் தாய் அல்லது தந்தை மாடுகளுடனே இனப்பெருக்கம் செய்ய விட்டால் காலப்போக்கில் இனம் சிறுத்து அருகிப்போய் விடும். அதனால் வெவ்வேறு மாடுகளோடு கலக்கச் செய்ய வேண்டும். அதற்கு இந்தப் பகிர்வு மிகவும் முக்கியம்.
நாட்டு மாட்டு வளர்ப்பை ஒரு தவம் போல செய்ய வேண்டிய காலக்கட்டம் இது. நாட்டு மாடு வளர்ப்பது என்பது ஒரு தேச சேவை. ஊருக்கு ஊர் மாடு வளர்ப்போர் சங்கங்களை உருவாக்க வேண்டும். மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் பாதுகாப்பதற்கான செயல்பாடுகளையும் இந்த சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும். நாட்டு மாடு பிறப்பைப் பெருநிகழ்வாகக் கொண்டாட வேண்டும்.
பீட்டா - முரண்பாடுகளின் முகத்திரை!
நாட்டு மாடுகளை, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள் மிக சாதாரண விவசாயிகள். ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு உணவுக்கு மட்டுமே 250 ரூபாய் 300 ரூபாய் வரை செலவாகும். பலர் மாடுகளை தங்களை குழந்தைகளை விட மேலாக நேசம் காட்டி வளர்க்கிறார்கள். வெறும் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு மட்டுமின்றி பேரிச்சை, பாதாம் பருப்பெல்லாம் கொடுக்கிறார்கள். அன்றாடம் தங்கள் உழைப்பில் பெரும்பகுதியை மாடுகளுக்கு செலவிடுகிறார்கள். தங்கள் உணவை தவிர்த்து விட்டு மாட்டை பராமரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டை ஆதரித்து குரல் கொடுப்பவர்கள், உள்நாடு, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எல்லாம் நாட்டு மாடு, ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும். இதற்கென சர்வதேச அளவில் ஒரு நிதி ஆதார அமைப்பை உருவாக்க வேண்டும். நாட்டு மாடுகளை ஒழிக்க சர்வதேச கார்பரேட் நிறுவனங்கள் களமிறங்கியுள்ள நிலையில் இப்படியான ஒரு நிதி ஆதார அமைப்பு கட்டாயம் தேவை.
மத்திய அரசின் உதவியோடு சர்வதேச நிறுவனங்கள் மேற்கொள்ளும் நம் பாரம்பரியத்திற்கு எதிரான சதியை தமிழக அரசு நேர்மையாக கையாள வேண்டும். 1998களில் தான் பீட்டா போன்ற சர்வதேச அமைப்புகள் தமிழகத்தில் காலூன்றின. அப்போது தொடங்கி 2014 வரையிலான காலக்கட்டத்தில் 60 சதவீதம் பாரம்பரிய காளைகள் அழிந்து விட்டன. உதாரணத்துக்கு, மதுரை வட்டாரத்தின் பாரம்பரிய நாட்டு மாடுகளான புளிக்குளம் மாடுகளின் எண்ணிக்கை சுமார் 35 ஆயிரமாக குறைந்து விட்டது. இதில் காளைகளின் எண்ணிக்கை வெறும் 4000 தான்.
மாநில அரசு உடனடியாக நம் பாரம்பரிய நாட்டு மாடுகள் பற்றி ஒரு ஆய்வு செய்து மொத்தமுள்ள மாடுகளின் எண்ணிக்கையை கண்டறிய வேண்டும். நாட்டு மாடுகள் வளர்ப்போரை ஊக்கப்படுத்தும் வகையில் திட்டங்களை உருவாக்க வேண்டும். மாநில அரசு நிர்வகிக்கும் மாவட்ட கால்நடைப் பண்ணைகள் பெயரளவுக்குத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. போதிய நிதியை ஒதுக்கி அவற்றை மேம்படுத்த வேண்டும். நல்ல கால்நடைகளை உருவாக்கி மக்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். ஒவ்வொரு பாரம்பரிய ரகத்துக்கும் அந்தந்த பகுதியிலேயே பண்ணைகளை உருவாக்கி பராமரிக்க வேண்டும். 1970களில் ‛கீ வில்லேஜ் சென்டர்’ என்ற பெயரில் பாரம்பரிய கால்நடைகளை வளர்க்கும் திட்டங்கள் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டன. அதன்பிறகு, இத்திட்டத்தை ‛இன்டக்ரேட்டட் காட்டில் டெவலப்மெண்ட் புரோக்ராம்’ என்று பெயர் மாற்றி கலப்பின மாடுகளை கொண்டு வந்து இறக்கினார்கள்.
கலப்பின மாடுகளின் இறக்குமதியை தடுத்து, நாட்டு மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். மிக முக்கியமாக, மிருகநல ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்களின் பின்புலம் என்ன? எந்தெந்த வெளிநாட்டு அமைப்புகளோடு, நிறுவனங்களோடு அவர்கள் தொடர்பு வைத்திருக்கிறார்கள்? எங்கெங்கு இருந்தெல்லாம் அவர்கள் நிதி வாங்குகிறார்கள்? 1 ஏக்கர் பரப்பளவில் எப்படி அவர்களால் வீடு கட்ட முடிகிறது? அவர்களின் திறைமறைவுச் செயல்பாடுகள் என்னென்ன என்றெல்லாம் ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்தி அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்...” என்கிறார் கார்த்திகேய சிவசேனாதிபதி.
பீட்டா மறுப்பு:
ஆனால், பீட்டா தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள். “பால், தேன், பட்டு, கம்பளி உட்பட உயிரினங்களிடமிருந்து பெறும் எந்தப் பொருளையும் பயன்படுத்தக்கூடாது என்ற உன்னத நோக்கத்தோடு இயங்கி வருகிறது பீட்டா. இறைச்சி விற்பவர்கள், பால் விற்பவர்களிடம் எல்லாம் பணம் வாங்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. எங்கள் மீதான காழ்ப்புணர்வில் இப்படியான ஆதாரமற்ற குற்றச்சாட்டை சொல்கிறார்கள். அந்தந்த நாடுகளில் உள்ள சட்டத்திற்கு உள்பட்டு செயல்படுகிறோம். பீட்டா இணையதளத்தில் நன்கொடை தருபவர்கள் பற்றியும் எங்களுடைய செயல்பாடுகளைப் பற்றியும் வெளிப்படையாக தகவல்கள் இருக்கின்றன. எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை இல்லாதவை’’ என்கிறார்கள் அவர்கள்.