“கோர்பச்சேவ், கதவைத் திறங்கள்; கோர்பச்சேவ், இந்தச் சுவரை இடித்துத் தள்ளுங்கள்” - அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன், அப்போது மேற்கு பெர்லின் என்று அழைக்கப்பட்ட நகரில் பேசியது, 12.06.1987.
“மிகச் சிறந்த, பெரிய, அழகிய நாளை (எதிர்காலம்) நமதே” ஃப்ளோரிடா மாநிலத்தின் ஆர்லாண்டோ நகரில் உள்ள வால்ட் டிஸ்னி கேளிக்கை நகரில் 1964 முதல் நாளது வரை பாடப்படும் நிகழ்ச்சியின் தொடக்கப் பாடல்.
“எதிர்காலம் என்பது, கடந்த காலத்தைப் போல இருக்காது” - ஓஹியோ கிராமப் பகுதி சிற்றுண்டி விடுதிச் சுவர் வாசகம்.
“கட்டுங்கள் அந்த (மெக்ஸிகோ) சுவரை” ட்ரம்ப் பிரச்சாரக் கூட்டங்களில் அடிக்கடி ஒலித்த கோஷம்.
உலகின் பல நாடுகளில் அரசியல் தலைவர்கள் “கடந்த 30 ஆண்டுகளிலே…” என்று பேச்சைத் தொடங்குவது ஏதோ தற்செயலானது அல்ல. கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்தது என்ன என்பதைப் புரிந்துகொண்டால்தான், அதே காலத்தில் இந்தியாவில் நடந்தது என்ன என்று புரிந்துகொள்வதுடன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று ஊகிக்கவும் உதவும். மூலதனம், தொழில்நுட்பம், சிந்தனை என்ற அனைத்துக்கும் அமெரிக்கா இப்போது மட்டுமல்ல - எதிர்காலத்திலும் உலக மையமாகத் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும்.
இரண்டு அமெரிக்கர்கள்1984-ல் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது நியூயார்க் ஆளுநராகப் பதவிவகித்த மரியோ குவோமோவ், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசினார். ரீகன் முன்னர் பேசியிருந்த மற்றொரு புகழ்பெற்ற உரையை மேற்கோள்காட்டி அவருடைய ஆட்சியை அற்புதமாக விமர்சித்தார். “இந்நாட்டில் சிலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையை எட்டியிருந்தாலும், மற்றவர்கள் மகிழ்ச்சி அடையாமல், தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பங்களைப் பற்றியும் எதிர்காலம் பற்றியும் கவலைப்படுகின்றனர்’’ என்ற ரீகன், ‘‘அவர்கள் ஏன் அப்படிக் கவலைப்படுகின்றனர் என்று எனக்குப் புரியவில்லை’’ என்று பேசியிருக்கிறார். ‘இந்த நாடு, மலை மீதிருக்கும் ஒளிரும் நகரத்தைப் போல’ என்று ஒப்புமை காட்டியிருக்கிறார்.
“ரீகன் சரியாகத்தான் பேசியிருக்கிறார். மலை மீது ஒளிரும் நகரத்தைப் போலத்தான் நாடு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்தப் புகழும் செல்வமும் எல்லோருக்கும் கிடைக்க வில்லை. அதிபர் தன்னுடைய வெள்ளை மாளிகை யின் வாயிற்படியிலிருந்தும், பண்ணை வீட்டின் தாழ்வாரத்திலிருந்தும் அமெரிக்காவைப் பார்க் கிறார். அங்கே அவர் பார்ப்பவர்கள் அனைவருமே வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். ஆனால், அந்த ஒளிரும் நகரத்தின் மற்றொரு புறத்தில், வேறு நிலையில் மக்கள் வாழ்கின்றனர். அங்கே வசிப்பவர்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இளைஞர்கள் கடன் வாங்கக்கூடத் தகுதியில்லாமல் இருக்கின்றனர். மாணவர்கள் தாங்கள் விரும்பிய உயர் கல்வியைப் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் குறித்துக் கனவு கண்ட பெற்றோர் அவையெல்லாம் கானல்நீராவதைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றனர்” என்றார் மரியோ.
ட்ரம்ப் அப்போது பேசியது..பெர்லின் சுவர் குறித்து அதிபர் ரொனால்டு ரீகன் பேசியதற்கு சுமார் 3 மாதங்கள் கழித்து (02.09.1987), மனை வணிக விற்பனையாளராகக் கொடிகட்டிப் பறந்த 41 வயது டொனால்டு ட்ரம்ப், அரசியல் தொனியில் அன்றைய ஆட்சியை விமர்சித்தார். நியூயார்க் நகர நாளிதழ்களில் அமெரிக்க அரசியல் தலைவர்களின் முட்டாள்தனத்தை அம்பலப்படுத்தும் விளம்பரங்களை வெளியிட்டார். சி.என்.என். தொலைக்காட்சியின் லாரி கிங் என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு அது தொடர்பாகப் பேட்டியும் அளித்தார். அப்போது அவர் பேசியதையும் இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதையும் ஒப்பிட்டால், கடந்த 30 ஆண்டுகளில் அவருடைய ‘உலக நோக்கு’ மாறவேயில்லை என்பது புரிகிறது. அதே பாணி, அதே வார்த்தைகள்!
“நம்முடைய முட்டாள்தனத்தைப் பார்த்து மற்ற நாடுகள் சிரிக்கின்றன. இது மிகப்பெரிய நாடு. ஆனால், நம்முடைய தலைவர்கள் முட்டாள்கள். ஜப்பான், சவுதி அரேபியா போன்ற நாடுகளுடன் வெளிவர்த்தகப் பற்றுவரவில் ஆண்டுதோறும் 2,000 கோடி டாலர்களை நாம் இழந்துகொண்டிருக் கிறோம். அமெரிக்கா ஆதரிக்காவிட்டால் இந்த நாடுகளை மற்ற நாடுகள் இருக்கும் இடம் தெரியாமல் வரைபடத்திலிருந்தே அகற்றிவிடும். இப்படியே நீடித்தால் அமெரிக்கா இன்னும் இரண்டு ஆண்டுகளில் திவாலாகிவிடும். ராணுவரீதியில் அளிக்கும் பாதுகாப்புக்காக இந்த நாடுகளைப் பணம் கொடுக்கச் சொல்ல வேண்டும்” என்றார்.
வீடற்ற அமெரிக்கர்கள்அமெரிக்கா தன்னுடைய தொழில், வர்த்தகத்தைப் பிற நாடுகளின் இறக்குமதிகளி லிருந்து காப்பாற்ற ‘காப்பு வரி’ அதிகம் விதிக்க வேண்டுமா என்று லாரி கிங், ட்ரம்பிடம் கேட்டார். “சுதந்திர வர்த்தகம் என்று ஏதும் இல்லை; ஜப்பானிலும் சவுதி அரேபியாவிலும் அமெரிக்க நிறுவனங்கள் சென்று தொழில் தொடங்கி நடத்த முடியவில்லை. ஜப்பானோ இங்கே வந்து மன் ஹாட்டனில் எல்லாவற்றையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய விவசாயிகள் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள். வீடற்றவர்கள் அமெரிக்க நகர்களில் திரிகிறார்கள். உலகிலேயே பணக்கார நாடுகளுக்கு நாம் நிறையப் பணம் கொடுக்கிறோம், நம் நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறோம். ஏழைகள், நோயாளிகள், வீடற்ற வர்கள், விவசாயிகள், நம்மால் உதவியளிக்கப் படாதவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று அப்போதே பேசியிருக்கிறார் ட்ரம்ப்.
மூன்றில் ஒருவர் கடனாளிசராசரி அமெரிக்கருக்கு என்ன நேர்ந்தது என்று ட்ரம்ப் கூறியது ஒருபுறமிருக்கட்டும்.. ஜனநாயகக் கட்சியின் செனட்டரும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஹிலாரியின் ஆதரவாளரும், ட்ரம்பைக் கடுமையாக விமர்சிப் பவருமான எலிசபெத் வாரன் கூறியது கவனிக்கத் தக்கது. கடந்த 30 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரம் எப்படிக் குறைந்திருக்கிறது என்று ஆய்வுகளிலிருந்து அவர் மேற்கோள் காட்டுகிறார்.
“இப்போது கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போகும் சராசரி அமெரிக்கக் குடும்ப மானது, ஒரு தலைமுறைக்கு முன்னால் ஒரே யொருவர் சம்பாதித்துக் கொடுத்த குடும்பத்தை விட மோசமான நிலையில் இருக்கிறது. அமெரிக்கர் களில் மூன்றில் ஒருவர் கடன்காரராகி, கடன் வசூலிக்க வருகிறவருக்குப் பதில் சொல்லும் நிலையில் இருக்கிறார். 18 வயதை எட்டும்போது கல்லூரி மாணவர்களில் 70% பேர் கடன் சுமை யால் அழுத்தப்படுகின்றனர். 2015-ல் 8,20,000 அமெரிக்கக் குடும்பங்கள் தாங்கள் திவாலாகி விட்டதாக அறிவித்துள்ளன. வெளியிலிருந்து பார்க் கிறவர்களுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதைப் போலத் தெரியும். உள்ளிருப்பவர்களுக்கு மட்டும் ஏன் விடிய வில்லை? ஏன் அவர்கள் வருமானம் போதாமல், வாழ்க்கைச் செலவுகளைச் சந்திக்க முடியாமல் அழுத்தப்படுகிறார்கள்?” என்று கேட்கிறார்.
அதற்கு அவரே விடையும் அளிக்கிறார். “இதற்கெல்லாம் காரணம், அரசின் கொள்கைகள் மாறியதுதான். நடுத்தரக் குடும்பங்களை வலுப் படுத்திய நாடு என்ற நிலையிலிருந்து விலகி, பெரும் பணக்காரர்களை ஆதரிக்கும் நாடாக மாறிவிட்டோம். 1935 முதல் 1980 வரையில் புதிதாக உருவான செல்வத்தின் 70%, வாழ்க்கையின் அடிநிலையில் இருந்த 90% மக்களுக்குச் சென்றது. உயர் நிலையில் இருந்த 10% பணக்காரர்களுக்கு எஞ்சிய 30% செல்வம் கிடைத்தது. 1980 முதல் 2016 வரையில் புதிதாக உருவான செல்வம் முழுவதையும் உயர் நிலையில் இருந்த 10% பணக்காரர்களே தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். எஞ்சிய 90% மக்களுக்கு கிட்டத்தட்ட எதுவுமே கிடைக்கவில்லை.
சராசரி மக்களுக்கு அழுத்தம்சராசரி அமெரிக்கர்களின் வாழ்க்கை, கடந்த 30 ஆண்டுகளில் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. வருவாயில் 13%-ஐ மட்டுமே உணவுக்குச் செலவிடுகிறார்கள். 46% உடைக்கு, 48% ஐ-போன் உள்ளிட்ட சாதனங்களுக்குச் செலவிடுகின்றனர். நிரந்தரச் செலவுகள் பல மடங்கு உயர்ந்துவிட்டன. அமெரிக்கர்கள் போக்குவரத்துக்கு ஏற்கெனவே செலவிட்டதைவிட மேலும் 11% செலவிடுகின்றனர், குடியிருப்புக்கு 57%, சுகாதாரக் காப்பீட்டுக்கு 104%, கல்லூரிக் கல்விக்கு 275%, குழந்தைகள் நலனுக்கு 953% அதிகம் செலவழிக்கின்றனர்.
இதே 30 ஆண்டுகளில் அரசியல் செலவுகள் மாறியிருப்பதும் குறிப்பிடத் தக்கதாக இருக்கிறது. 1980-களில் அமெரிக்க அரசியல்வாதிகளுக்காக மற்றவர்கள் செலவிடுவது 20 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2002-ல் அதுவே 180 கோடி டாலர்களாக உயர்ந்தது. 2012-ல் 330 கோடி டாலர்கள் செலவிடப்பட்டது. விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டால் இந்த மதிப்பானது, அரசியல்வாதிகளுக்காகத் தொழிலதிபர்கள் செலவிடுவது 7 மடங்கு உயர்ந்திருக்கிறது!
ஒபாமாவை நம்பிய அமெரிக்கர்கள்‘நம்மால் முடியும்’ என்று பராக் ஒபாமா எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியபோது, நிச்சயம் இவர் நம்மை இந்தச் சரிவிலிருந்து மீட்டுவிடுவார் என்றே சராசரி அமெரிக்கர்கள் நம்பினார்கள். அமைப்பை மாற்றாமலேயே இப்போதைய பொருளாதார அமைப்பில் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில ஒட்டு வேலைகளைச் செய்து செப்பனிடப் பார்த்தார் ஒபாமா. கடந்த ஆண்டு முழுக்க சாண்டர்ஸின் ஆதரவாளர்களையும், கறுப்பர்களின் உயிர்களும் மதிப்பு மிக்கது என்ற கோரிக்கையின் ஆதரவாளர்களையும் சமாதானப்படுத்துவதிலேயே கழிந்தது. பொறுமையாக இருங்கள், மாற்றம் மெதுவாகத்தான் வரும் என்றார் ஒபாமா.
30 ஆண்டுகளுக்கு முன்னால் பேசிய அதே வார்த்தைகளை, அதே வசவுகளை, அதே அரை உண்மைகளை ட்ரம்ப் இந்தத் தேர்தல் பிரச் சாரத்தின்போதும் பேசினார். 30 ஆண்டுகளுக்கு முன்னால் ட்ரம்ப் பேசியதை யாரும் சீந்தவில்லை; இப்போது காது கொடுத்துக் கேட்டிருக்கின்றனர். காரணம், அமெரிக்காவின் ‘எதிர்காலம்’ முன்னர் இருந்ததைப் போல இல்லை!