சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த கோரி அலங்காநல்லுாரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் தீயாக பரவி வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த கோரி இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் களத்தில் இறங்கி போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் நேற்று(திங்கட்கிழமை) காலை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குவிந்தனர். வாடிவாசல் முன் திரண்ட அவர்கள் பீட்டாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். வாடிவாசலிலிருந்து காளைகள் வெளியேறாமல் கலையமாட்டோம் என உறுதியுடன் கூறினர்.
விடிய விடிய போராட்டம்:
அலங்காநல்லுாரில் இரவு முழுவதும் கலைந்து செல்லாமல் இளைஞர்கள் போராடினர். தண்ணீர், உணவு கிடைப்பதில் போலீசார் தடுத்தும் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்து வாடிப்பட்டியில் உள்ள கல்யாண மண்டபத்தில் அடைத்தனர்.
உள்ளிருப்பு போராட்டம்:
போலீசார் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்கு இளைஞர்கள் மறுத்துவிட்டனர். விடுவித்தாலும் அலங்காநல்லுாருக்கு தான் செல்வோம். ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராடுவோம் என உறுதியாக தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழகம் முழுவதும்:...
இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவல் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், இளைஞிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டம், பேரணி, சாலை மறியல், மவுன போராட்டம் என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட வாரியாக போராட்ட கள விபரம்:
சென்னை:
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை முதல் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முதல்வர் பன்னீர் செல்வம் நேரில் வர வேண்டும் அல்லது தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என உறுதியளித்து அறிக்கை வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் இரவிலும் போராட்டம் தொடரும் என கூறுகின்றனர்.
போராட்டத்தை கட்டுபடுத்த போலீசார் மெரினா பகுதியில் மின் விநியோகத்தை துண்டித்தனர். இருப்பினும், அவர்கள் செல்போன் டார்ச் லைட் வைத்து போராடி வருகின்றனர்.
திருநெல்வேலி: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும் என்று கோரி திருநெல்வேலியில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். வ.உ.சி. திடலில் போராட்டம் நடத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். மேலும் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் முன் இளைஞர்கள், பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
வேலூர்: ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும், அதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் தலைமை தபால் நிலையம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவசரமாக வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் குடியாத்தம் நகரில், பஸ் நிலையம் எதிரே இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
கோவை: வ.உ.சி. மைதானத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒண்டிபுதூர் சுங்கம் பகுதியில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் காளைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் பலர் கைதாகினர். கல்லறைத்தோட்டம் பகுதியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பரமத்தி வேலுார் பகுதிகளிலில் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவாறு பேனர்களை ஏந்தி பேரணி நடத்தினர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்: புதிய பேருந்து நிலையம் சிறுவர்,சிறுமியர் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி: கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுமட்டுமல்லாது, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடந்து வருகிறது.
நாளை கல்லுாரிகள் புறக்கணிப்பு:
ஜல்லிக்கட்டை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை கல்லுாரிகளை புறக்கணிக்க கோரி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் தகவல்கள் பரவி வருகின்றன.
English Summary:
Chennai: hold jallikattu alankanalluar demanding the arrest of those involved in the struggle, as feedback has spread across the island youth.