தமிழகம் முழுவதும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என கணக்கிடப்படும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, தற்போதைய பொறுப்புகளில் இருந்து மாற்றி, முக்கியத்துவம் இல்லாமல் செய்ய, பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா உத்தரவிட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த மாதம் வரையில் உளவுத் துறை ஐ.ஜி.,யாக இருந்தவர் சத்தியமூர்த்தி. அவர், சசிகலா தரப்புக்கு ஆலோசகராக மாறிவிட்டத் தகவல் அறிந்ததும், அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் கோபமடைந்தார். அரசு கட்டமைப்புகளைப் பயன்படுத்தி சேகரிக்கப்படும் ரகசியத் தகவல் அனைத்தும், போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலாவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அங்கிருந்து கேட்கப்படும் விவரங்கள் அனைத்தையும் சேகரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் சத்தியமூர்த்தி என குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையில், பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே ஈகோ யுத்தம் உச்சகட்டத்தை அடைய, மோதல் வலுத்தது. இதற்கிடையில், தமிழக போலீஸ் உளவுத் துறை ஐ.ஜி.,யாக இருந்த சத்திய மூர்த்தியை அழைத்து கடிந்து கொண்டார். ஆட்சி மேலிடத்தின் மீது அதிருப்தி அடைந்த சத்தியமூர்த்தி, நீண்ட விடுப்பில் சென்றார்.இதனால், உளவுத்துறையில் செயல்பாடுகள் முழுமையாக முடங்கின.
விடுப்பில் சென்ற அவர், போயஸ் தோட்டத்துக்காக, அந்த பகுதியிலேயே இருந்து ரகசியமாக பணியாற்றும் தகவல் முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்தது. அந்த சமயத்தில் தான், 134 எம்.எல்.ஏ.,க்களை, சென்னை அருகில் உள்ள கூவத்தூரில் அ.தி.மு.க., தரப்பு அடைத்து வைத்தது. அவர்கள் மீது,கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சத்தியமூர்த்தி, சீருடை அணியாமல், சாதாரண சட்டைப் பேண்ட்டில், போயஸ் தோட்டம் பகுதியில் உலவியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வம், சத்தியமூர்த்தி மீது ஆளுநகரிடம் புகார் தெரிவித்து விட்டு, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை அழைத்துப் பேசி, உள்துறை செயலர் மூலம், அவரை உளவுத் துறை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றினர். அந்தப் பொறுப்புக்கு, போலீஸ் நலப் பிரிவு, ஐ.ஜி., டேவிட்சன் தேவ ஆசிர்வாதத்தை நியமித்தார்.
இதனால், அவர் ஒரே நாளில் பன்னீர்செல்வம் ஆதரவாளராக முத்திரைக் குத்தப்பட்டார். இந்த நிலையில், சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்று, முதல்வர் பொறுப்பில் அமர்ந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட, இடைப்பாடி பழனிச்சாமிக்கு, பெங்களூர் சிறையில் உள்ள, அ.தி.மு.க.,வின் நியமன பொதுச் செயலர் சசிகலாவிடம் இருந்து ஒரு உத்தரவு வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த உத்தரவில், பன்னீர் ஆதரவாளர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதத்தை, உடனடியாக, ஐ.ஜி., உளவுப் பிரிவில் இருந்து மாற்ற வேண்டும். பின், நம்முடைய ஆதரவாளராக இருக்கும் சென்னை காவல் படையின் நுண்ணரிவுப் பிரிவு கூடுதல் ஆணையராக இருக்கும் தாமரைக்கண்ணனை நியமிக்க வேண்டும் என சொல்லப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்தே, அவர், உடனடியாக டேவிட்சன் உளவுப் பிரிவு பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, பழையபடியே, காவலர் நலப் பிரிவு ஐ.ஜி.,யாக தூக்கி அடிக்கப்பட்டுள்ளார். இரண்டு வாரங்கள் மட்டுமே, உளவுப் பிரிவு ஐ.ஜி.,யாக இருந்தவரை மாற்றியது, காவல் துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இவருக்கு அடுத்தபடியாக, தமிழகத் தலைமைச் செயலராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதனும், பன்னீர்செல்வம் காலத்தில் நியமிக்கப்பட்டவர் என்பதால், அவரையும் மாற்றுமாறு, சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால், கிரிஜா வைத்தியநாதன், பன்னீர்செல்வம், முதல்வராக இருந்த போது, தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டிருந்தாலும், அவரை, மத்திய அரசே பரிந்துரைத்துள்ளது என்பதால், அவரை பொறுப்பில் இருந்து மாற்றி, நேரடியாக, பிரதமர் மோடியின் எரிச்சலுக்கு ஆளாக வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதாகவும் தகவல்.இருந்தாலும், பெங்களூருவில் இருந்து தொடர் நெருக்கடிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வருவதால், கிரிஜா வைத்தியநாதனும், தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து எந்த நேரமும் மாற்றப்படலாம் என்கிறது, கோட்டை வட்டாரம்.
அப்படி, கிரிஜா மாற்றப்பட்டால், அந்தப் பொறுப்பிற்கு, சசிகலா தரப்பிற்கு வேண்டப்பட்டவரான, நிதித்துறை செயலர் சண்முகம் நியமிக்கப்படலாம் எனவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.