சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்த, நான்கு சட்டசபை தொகுதிகளில், பதிவான ஓட்டுக்கள் எண்ணும்பணி துவங்கியது. இதில், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக முன்னிலையில் உள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர நாராயணசாமி முன்னிலையில் உள்ளார்.
நெல்லித்தோப்பில் 3 சுற்றுக்களாக ஓட்டுக்கள் எண்ணும் பணி துவங்கியது. அரவக்குறிச்சியில் 18, திருப்பரங்குன்றத்தில் 21 சுற்றுக்களாகவும், தஞ்சாவூரில் 20 சுற்றுக்களாகவும் ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. இங்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது.
முன்னதாக, அரக்குறிச்சி தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தில் போதிய இடவசதி இல்லாததை கண்டித்து மையம் முன் பா.ஜ. மற்றும் தே.மு.தி.க.வினர்கள் முற்றுகையிட்டனர். மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. இந்த அறையை அதிகாரிகள் திறக்க முற்பட்ட போது, சுயேட்சை வேட்பாளருக்கு காயம் ஏற்பட்டது. தி.மு.க., வேட்பாளர் சரவணன், உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கண்காணிப்பு கேமரா :
ஒவ்வொரு தொகுதியிலும், 225 பணியாளர்கள், ஓட்டு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மேஜையில், ஒரு மைக்ரோ பார்வையாளர் இருப்பார். மேற்பார்வையாளர், உதவியாளர், மைக்ரோ பார்வையாளர், ஓட்டு எண்ணும் பணியாளர், தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள நபர், தேர்தல் நடத்தும் அதிகாரி, வேட்பாளர்கள், முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஓட்டு எண்ணிக்கை, வீடியோவில் பதிவு செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மேஜை ஒவ்வொன்றிலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். காலை, 9:00 மணியில் இருந்து, முடிவுகள் வெளிவரத் துவங்கும்.
மொபைல் போனுக்கு தடை :
ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள், மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவை அறிவிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட தொகுதி பார்வையாளரிடம் இருந்து, ஒப்புதல் பெற வேண்டும். அத்துடன், வட மாநிலங்களில், நான்கு லோக்சபா தொகுதிகளுக்கும், ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், 19ல் நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளும், இன்று காலை, 8:00 மணிக்கு எண்ணப்படுகின்றன.