புதுடில்லி:ஜப்பான் நாட்டிற்கு மூன்று நாள் பயணம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினார். இப்பயணத்தில் புல்லட் ரயில், விவசாயம் உள்ளிட்ட 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மன்னர் அகிடோவுடன் சந்திப்பு
மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, நேற்று இரவு தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக கடந்த வியாழக்கிழமை ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். தலைநகர் டோக்கியோவில் இரு நாடுகளின் முக்கிய வர்த்தக பிரமுகர்களையும் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து ஜப்பான் மன்னர் அகிடோவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இந்தியா-ஜப்பான் இடையே நீண்டகால உறவு, ஆசியாவின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர்.
10 முக்கிய ஒப்பந்தங்கள்
பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயையும் மோடி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சிவில் அணுசக்தி, விவசாயம் உள்பட 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதைத்தொடர்ந்து நேற்று கோபே சென்ற மோடி பிரதமர் ஷின்சோ அபேயுடன் புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார். மேலும், அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே உரையாற்றினார். இந்நிலையில், தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட அவர் டில்லி வந்தடைந்தார்.