பிரபல மலையாள நடிகை ரேகா மோகன் மர்மமான முறையில் தனது வீட்டில் பிணமாக கிடந்தது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ரேகா மோகன். மலையாள சின்னத்திரை உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவரது கணவர் மலோசியாவில் வேலைபார்த்து வருகிறார். தனது மனைவியை 2 நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததையடுத்து இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருச்சூர் மாவட்டம் வைய்யூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுபோது ரேகா மோகன் சடலமாகக் கிடந்தார்.
பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பிவைத்தனர். ரேகா மோகன் சந்தேகத்திற்கு இடமான வகையில் பிணமாக காணப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகர் கலாபவன் மணி மரணம் ஏற்படுத்திய சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு சினிமா நட்சத்திரம் மர்மமான முறையில் மறைந்திருப்பது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.