கேரள மாநிலத்தை ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த, சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர், கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, `விநாயகர், புஷ்பக விமானம் என்பதெல்லாம் கட்டுக்கதை’ எனவும் `மூடநம்பிக்கை நம் வளர்ச்சியைப் பின்னுக்குக் கொண்டுசென்றுவிடும். செயற்கை நுண்ணறிவு காலத்தில் இவையெல்லாம் கட்டுக்கதை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்’ எனவும் கூறியிருந்தார்.
விநாயகர் குறித்து சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாயர் சர்வோஸ் சொசைட்டி என்ற என்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் திருவனந்தபுரத்தில் நாம ஜப யாத்திரை நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, சட்டத்துக்குப் புறம்பாகக் கூட்டம் சேர்த்ததாக என்.எஸ்.எஸ் துணைத்தலைவர் சங்கீத்குமார் உள்ளிட்டவர்கள்மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. இதையடுத்து, என்.எஸ்.எஸ் அமைப்புடன் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, சம்ஷீரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை வலுப்படுத்தவிருப்பதாக என்.எஸ்.எஸ் அமைப்பு அறிவித்திருக்கிறது. என்.எஸ்.எஸ் அமைப்பின் போராட்டத்துக்கு பா.ஜ.க ஆதரவு அளித்திருக்கிறது. காங்கிரஸும் சர்ச்சைக் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.கேரள மாநில சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர்
இது பற்றி கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், "கலவரம் ஏற்படுத்த முயன்றதாக சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் மீதுதான் வழக்கு பதிவுசெய்திருக்க வேண்டும். அரசு பிடிவாதமான மனநிலையில் செயல்படுகிறது. மனப்பூர்வமாக வேண்டும் என்றே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்படுகிறது. குற்றச்சாட்டுக்கு ஆளான ஏ.என்.சம்ஷீரின் விளக்கத்தை கேரளம் கேட்கவில்லை. அவர் மன்னிப்புக் கேட்பது மட்டுமல்லாது அவர்மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் பினராயி விஜயனின் மனநிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு" எனக் கூறினார்.
இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் எம்.பி சசிதரூர் முன்பு ஒரு முறை விநாயகர் குறித்து பேசிய கருத்தும் இப்போது விவாதத்தில் இணைந்திருக்கிறது. அதற்கு சசிதரூர் இப்போது விளக்கம் அளித்திருக்கிறார். "பல வருடங்களுக்கு முன்பு விநாயகர் குறித்து நான் பேசியதை இப்போது விவாதமாக்க வேண்டாம். 2014-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரிக்கு எடுத்துக்காட்டாக விநாயகரை குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்கு நான் அப்போது பதில் அளித்தேன். அதன் பின்னர் பிரதமர் மோடி அந்த மேற்கோளை கூறுவது இல்லை.சசிதரூர்
மத நம்பிக்கை குறித்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம். உலகத்தில் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை அளித்தவர் சுஷ்ருஸர். மூக்கில் ஆபரேஷன் செய்வது பற்றி சுஷ்ருஸர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஆபரேஷனுக்குப் பயன்படுத்திய கருவிகளும் நமக்குக் கிடைத்திருக்கின்றன" என சசிதரூர் தெரிவித்திருக்கிறார். என்.எஸ்.எஸ் நாமஜப யாத்திரை
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில கருத்துகளை சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் கூறியிருக்கிறார். நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஏ.என்.சம்ஷீர், "விஞ்ஞானம் குறித்து பிரசாரம் செய்வதை மத நம்பிக்கையைப் புறக்கணித்துப் பேசுவதாகக் கருதமுடியாது. மத நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக தெருவில் இறங்கிப் போராடி அடிவாங்கியவர்கள்தான் கம்யூனிஸ்டுகள். அன்று அவர்கள் வாங்கிய அடியால்தான் நம்பிக்கை பாதுகாக்கப்பட்டது. இன்று நம்பிக்கையைப் பாதுகாப்பதாகக் கூறி இறங்கியிருப்பவர்களை அன்று காணவில்லையே" என்றார். ஆனாலும் விவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விவாதத்தைக் கொழுந்துவிட்டு எரியச்செய்யும் நடவடிக்கையில் சி.பி.எம் இறங்கியிருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.
http://dlvr.it/StB36h
Friday 4 August 2023
Home »
» விநாயகர், புஷ்பக விமானம் குறித்து கேரள சபாநாயகரின் சர்ச்சைக் கருத்து- எழுந்த எதிர்ப்பும் விளக்கமும்!