சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய பின்னர் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேசம் நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் மழையின் வேகம் சற்று குறைந்திருந்தது.தென்மேற்கில் இருந்து வீசும் காற்றால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி வங்கதேசம் நோக்கி சென்றதால், இங்குள்ள ஈரப்பதத்தையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இழுத்து சென்றுவிட்டது. இதனால் வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தில் பெரிய மழைக்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனிடையே தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 1 மணி நேரம் மழை கொட்டியது.





