மும்பை: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 'ஐ.என்.எஸ்., - சென்னை' எனப்படும், நவீன ஏவுகணை எதிர்ப்பு வசதியுடன் கூடிய போர்க் கப்பலை, ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர், நேற்று, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், மஸாகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால், 'ஐ.என்.எஸ்., - சென்னை' போர்க் கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது.ஏவுகணை எதிர்ப்பு வசதியுடன் கூடிய இந்த கப்பல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது பிரம்மாண்ட போர்க் கப்பல். இந்த கப்பலை, மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியின் போது, ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர், நாட்டுக்கு அர்ப்பணித்தார். முதற்கட்ட சோதனைகளுக்கு பின், இந்த கப்பல், மேற்கு பிராந்திய கப்பல் பிரிவு பணிக்கு பயன்படுத்தப்படும்.நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மனோகர் பரீக்கர் பேசியதாவது: ராணுவ அமைச்சராக பதவியேற்றதும், ராணுவ வீரர்களை சந்தித்தேன். அப்போது, 'துப்பாக்கியுடன் யாரையாவது நீங்கள் பார்த்தால், ஹலோ சொல்ல வந்ததாக நினைக்க வேண்டாம். உங்களை அந்த நபர் சுடுவதற்கு முன், நீங்கள் அந்த நபரை சுட்டு வீழ்த்த வேண்டும்' என்றேன். முந்தைய, காங்., அரசோ, பயங்கரவாதிகள் சுடுவதற்கு முன், ராணுவ வீரர்கள் சுடக்கூடாது என, உத்தரவு பிறப்பித்திருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
'பிருத்வி - 2' சோதனை வெற்றி : உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'பிருத்வி - 2' ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திபூர் கடற்பகுதியில், நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை, 350 கி.மீ., பாய்ந்து சென்று, இலக்கை துல்லியமாக தாக்கக் கூடியது. 500 - 1,000 கிலோ வெடி பொருளை ஏந்திச் செல்லும். டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகள், இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தினர்.
இந்திய கடல் "காவலன்' கம்பீரமான "ஐ.என்.எஸ்., சென்னை' போர்க்கப்பல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சென்னை நகரை பெருமைப்படுத்தும் விதமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடற்படை கப்பலுக்கு சென்னையின் பெயர் வைப்பது இதுவே முதன்முறை.
இந்திய கடல் எல்லையை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் விதமாக உள்நாட்டிலேயே மூன்று பெரிய ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதன் படி ஏற்கனவே 2 போர்க்கப்பல்கள் கப்பல்படையில் சேர்க்கப்பட்ட நிலையில் மூன்றாவது பெரிய போர்க்கப்பலான "ஐ.என்.எஸ்., சென்னை' நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இக்கப்பல் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மேற்கு கடற்கரையோர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.
என்ன சிறப்பு :
* மூன்று ஏவுகணை தாங்கி கப்பல்களில், முதல் கப்பல் ஐ.என்.எஸ்., கோல்கட்டா. இது 2014 ஆகஸ்ட் 16ல் கப்பல்படையில் சேர்க்கப்பட்டது. 2வது போர்க்கப்பல் "ஐ.என்.எஸ்., கொச்சி'. இது 2015 செப்., 30ல் கப்பல்படையில் சேர்க்கப்பட்டது.
* தற்போதைய "ஐ.என்.எஸ்., சென்னை' போர்க்கப்பல், எதிரிகளின் ஏவுகணைகளை வானிலேயே வழிமறித்து தாக்கும்.
* 40 கடற்படை அதிகாரிகள், 350 வீரர்கள் பணிபுரியலாம்.
* இந்த கப்பலில் நிறுத்தப்பட்டுள்ள "சூப்பர்சானிக் பிரம்மோஸ்' ஏவுகணைகள் மூலம் தரையிலிருந்து மற்றொரு தரை இலக்குகளை தாக்கலாம். 76 எம்.எம்.கொண்ட சூப்பர் ரேபிட் கன், ஏ.கே., 360 ரக நவீன துப்பாக்கிகள் இக்கப்பலில் உள்ளன.
* இஸ்ரேல் தயாரிப்பான "பராக் 8' என்ற தரையிலிருந்து ஆகாயம் சென்று தாக்கும் ஏவுகணையும் நிறுத்தப்பட்டுள்ளது. இது எதிரிகளின் போர் விமானம் அல்லது ஏவுகணையை 70 கி.மீ., து?ரம் வரை சென்று தாக்கும்.
* கப்பலின் மேல்தளத்தில் இரண்டு "சேதக்' ரக அதிநவீன ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதிநவீன ரேடார்களும் பொருத்தப்பட்டுள்ளன.
* மும்பையில் உள்ள மாஜாகான் டக் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் இதனை கட்டமைத்தது. 2006 பிப்ரவரியில் இதற்கான பணி தொடங்கப்பட்டது.
நீளம் : 164 மீட்டர்
அகலம் : 17 மீட்டர்
தாங்கும் எடை : 7500 டன்
வேகம் : மணிக்கு 55 கி.மீ.,
English Summary:
Locally produced, "INS., - Chennai is called, with the convenience of modern anti-missile warship, Defence Minister Manohar parikkar, yesterday, dedicated to the country.





