புதுடில்லி : ஊடகங்கள் பரபரப்புக்காக செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.நேர் மாறாக...
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: புதிய டிவி சேனல் துவங்குவது குறித்து என்னிடம் பேச வருபவர்களிடம் உண்மை செய்திகளை வெளியிடுமாறும், பரபரப்புக்காக செய்தி வெளியிட வேண்டாம் என்றும் நான் எப்போதும் கூறி வந்துள்ளேன். ஆனால், பொதுவாக அதற்கு மாறாகத்தான் நடக்கிறது. செய்திகளுடன் தங்களது கருத்துகளையும் சேர்த்து வெளியிடுவதை ஊடகங்கள் வழக்கமாக வைத்துள்ளன. இது முறையல்ல.
கருத்து திணிப்பு கூடாது:
செய்தி செய்தியாக இருக்க வேண்டும். அதில் கருத்து திணிப்பு கூடாது. ஆனால் பார்வையாளர்கள் மீது தங்கள் கருத்துகளை திணிக்கவே ஊடகங்கள் விரும்புகின்றன. பரபரப்பை ஏற்படுத்தி, உணர்வுகளை கொந்தளிக்கச் செய்வது போல் செய்தி வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





