மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா நீடித்து இருக்கிறது. இக்கூட்டணி கட்சிகள் இணைந்து முதல் முறையாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் சாவித்ரிபாய் புலேவுக்கு எதிராக பேசிய ஆளுநகர் கோஷாரி, சந்திரகாந்த் பாட்டீலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் கர்நாடகா எல்லை பிரச்னையை முன்வைத்தும் இன்று மும்பையில் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் மூன்று கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி மகாவிகாஸ் அகாடியின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இருந்தது. இப்பேரணி ஜெஜெ மருத்துவமனையில் தொடங்கி சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் முடிவடைந்தது.
இப்போராட்டத்திற்கு எதிராக பாஜக போட்டி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பாபாசாஹேப் அம்பேத்கர் பிறந்த இடம் தொடர்பாக சர்ச்சைக்குறிய வகையில் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் பேசியதாகவும், அக்கட்சியின் மற்றொரு தலைவர் சுஷ்மா அந்தாரே இந்து கடவுள்களை அவமதித்ததாகவும் கூறியும், அதற்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரியும் பாஜக போட்டி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
காலை 11 மணிக்கு தாதர், தானே மற்றும் காந்திவலி ரயில் நிலையங்களுக்கு எதிரில் பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து மும்பை பாஜக தலைவர் அசிஷ் ஷெலார் கூறுகையில், ``பாபாசாஹேப் அம்பேத்கர் மத்திய பிரதேசத்தில் பிறந்தார். ஆனால் அவர் மகாராஷ்டிராவில் பிறந்தார் என்று சஞ்சய் ராவுத் கூறி சர்ச்சையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இதற்கு உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார். சிவசேனா தலைமையிலான போராட்ட பேரணிக்கு போலீஸார் அனுமதி கொடுத்திருந்தனர்.
`சர்ச்சைக்குறிய வகையில் பேசவேண்டாம்' என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதன் பாதுகாப்புக்கு 2,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எதிர்க்கட்சிகள் சார்பாக மகாவிகாஷ் அகாடியின் தலைவர்கள் உத்தவ் தாக்கரே, அஜித்பவார், சஞ்சய் ராவத், பாலாசாஹேப் தோரட், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரின் மகள் சுப்ரியா சுலே உட்பட திரளான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர். இதில் பேசிய உத்தவ் தாக்கரே, `துரோகிகளுக்கு பதில் சொல்ல காவிப்புயல் கிளம்பிவிட்டது' என்று தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரேயுடன் அவரின் மனைவி ரேஷ்மி தாக்கரேயும் பங்கேற்றார். இப்போராட்டத்தில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாஹேப் தோரட், ``மகாராஷ்டிராவிற்கு வரவேண்டிய திட்டங்களை குஜராத்திற்கு கொடுத்து பாஜக தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் மகாராஷ்டிரா மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கின்றனர். இதற்கு மகாராஷ்டிரா மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.
http://dlvr.it/SfYHgN
Sunday 18 December 2022
Home »
» மும்பை: ஆளுநருக்கு எதிரான பேரணி... உத்தவ் தாக்கரே பங்கேற்பு - போட்டிப் போராட்டம் நடத்திய பாஜக