மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குறித்த அறிவிப்பை அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தி 6.50 ஆக நிர்ணயித்திருக்கிறது ஆர்.பி.ஐ. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளில் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களே இதில் பாதிக்கப்படுவார்கள். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதமும் இதனூடே அதிகரிக்கப் போகிறது.
இதன் மூலம் மாதத் தவணை முறையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவுடன் உள்ள பல நடுத்தர மக்களின் நிலையே குலைந்துவிடும் அளவுக்கு இருக்கிறது. இந்த நிலையில், Moneycontrol-Liases Foras House Purchase Affordability Index இந்தியாவின் முக்கிய நகரங்களின் சராசரி மாத வாடகையைக் கணக்கில் கொண்டு ஒரு சொந்த வீடு வாங்க எத்தனை மாத வாடகை தேவைப்படுகிறது என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
32 நகரங்கள் கொண்ட பட்டியலில் வீட்டு வாடகையை முதன்மையாக கொண்டும், சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக் கூடிய அடிப்படை வசதிகள், பயண தொலைவுகள் முதலியவற்றை கருத்தில்கொண்டும் இந்த பகுப்பாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் most affordable city in India என்ற பட்டியலில் பெங்களூரு மட்டும் தனித்து இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தூர், ராஜ்கோட், வதோதரா, கொல்கத்தா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.
ஏனெனில் பெங்களூருவில் 330 மாதங்களுக்கான வாடகையை வைத்து ஒரு வீட்டை வாங்க முடியும். அதாவது மாதத்தவணை முறையில் வீடு வாங்கினால் இருபத்தி ஏழரை வருஷம் எடுக்கும். இதேபோல ஐதராபாத்திற்கு 472 மாதங்கள், சென்னைக்கு 511 மாதங்கள், கோவைக்கு 498, டெல்லிக்கு 449, கொச்சிக்கு 401, கொல்கத்தாவுக்கு 358, திருவனந்தபுரத்திற்கு 494 என பட்டியல் நீள்கிறது.
இதனடிப்படையில் கணக்கிட்டால் சென்னையில் ஒரு வீடு வாங்க கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு வாடகை கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். தோராயமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான வீட்டுக்கான கடனை அடைக்க மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாயாவது கட்ட நேரிடும். இந்த EMI கட்டணம் வட்டி விகிதங்களுக்கு ஏற்பவும் மாறுபடும்.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பகுப்பாய்வு செய்யப்பட்ட இந்த 32 நகரங்களிலேயே ஆந்திராவின் விசாகப்பட்டினம்தான் மிகவும் கட்டுப்படியே ஆகாத நகரமாக இருக்கின்றன. ஏனெனில் வைசாகில் ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 606 மாதங்களுக்கு வாடகை கட்ட வேண்டி வரும். அதாவது வாழ்க்கையின் பாதி நாட்களான 50 வருஷத்தை செலவிட வேண்டும்.
இப்படியாக புவனேஷ்வர், ராஞ்சி, பாட்னா, கவுகாத்தி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களின் கணக்கீடுகள் நீள்கின்றன. இதன் மூலம் சொந்த வீடு வாங்க வேண்டும் என எண்ணுவோர் சராசரியாக வாழ்நாளில் ஈட்டக்கூடிய வருமானத்தை வாடகையாகவோ, மாதத் தவணையாகவோ கட்ட வேண்டிய சூழலுக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
http://dlvr.it/Sj8XfP
Thursday 9 February 2023
Home »
» சொந்த வீடு கனவில் இருப்பவரா நீங்கள்? ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி அறிவிப்பு! முழுவிவரம்