டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். கொரோனா விதிமீறல் காரணமாக, அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் 12-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடுங்குளிரிலும் எல்லைகளிலேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற 5 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. இவை தவிர, பல்வேறு மாநில விவசாய சங்கங்களும் நாளை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளித்திருப்பதால் செவ்வாய்கிழமை போராட்டம் மிக தீவிரமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஒருபுறம் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆறு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கொண்டு வரும் பணியில் பஞ்சாப் மாநில விவசாயிகள் இறங்கி இருக்கிறார்கள் இந்நிலையில், டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாடு வாழ் இந்தியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு கூடிய ஆயிரக்கணக்கானவர்கள், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் உடனடியாக கூட்டத்தைக் கலைத்தனர். ஏற்கெனவே லண்டனில் கொரோனா விதிமுறைகள் இருப்பதால், அனுமதி இல்லாமல் கூடியதாக பலர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரி ஒருவர், "ஆல்ட்விச் பகுதியில் மக்கள் கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடியவர்களும் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும்" என்றார். இது குறித்து தெரிவித்துள்ள தூதரக செய்தித்தொடர்பாளர் ஒருவர், "விவசாயிகள் பிரச்னை தொடர்பாக இந்திய அரசு பேச்சுவார்த்தையில் உள்ளது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், இது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை" என்றார். இதனிடையே, டெல்லியில் போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருவது கவனிக்கத்தக்கது.
http://dlvr.it/Rn8qZP
Monday 7 December 2020
Home »
» இந்திய விவசாயிகளுக்காக லண்டனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்: கொரோனா விதிமீறலால் நடவடிக்கை!