நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் இறுதியில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டு, ஜனவரி மாதத்தில் அரசியல் கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ”ரஜினி அரசியலுக்கு வர விரும்பவில்லை என்பதையே தான் நான் தொடர்ந்து கூறி வருகிறேன். ஆனால், தனது ரசிகர்களிடம் இருந்து கிளம்பிய அழுத்தம் காரணமாகவே அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். ரஜினியின் உடல்நலத்தை அறிந்து கொள்ளாமல், அவரது உடல்நலன் குறித்த அக்கறை இல்லாமல் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று ஒரு பெரிய கட்சி உள்பட சில கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து கூறிவந்தன. 1996-ஆம் ஆண்டே ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கலாம். கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்திற்கு அவரை அழைத்தார். மூப்பனார் தனது கட்சிக்கே அவரை அழைத்தார். அப்போதே அரசியல் வேண்டாம் என உறுதியாக முடிவெடுத்தவர். ஆனால் 2014-ம் ஆண்டிற்கு முன்னாள் உள்ள காலக்கட்டத்தில் அரசியல் தலைவர்கள் சாதாரண நபர்களையோ அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதர்களையோ அவர்கள் மீது அழுத்தம் கொடுத்து அரசியலுக்கு வரவழைப்பது என்பது குறைவாக இருந்தது. ஆனால் 2014-க்கு பிறகு அந்த சூழ்நிலை மாறியது. அதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு நிர்பந்திக்கப்பட்டார். எனவே அவரிடம் ஒரு தள்ளாட்டம் இருந்தது. இப்போது ரஜினிகாந்த் எடுத்திருக்கும் இறுதி முடிவை பார்க்கும்போது, ரஜினிகாந்திற்கு அரசியலில் ஒருபோதும் விருப்பமில்லை என்பதே அன்றிலிருந்து இன்றுவரை உள்ள நிதர்சனம்’’ என்கிறார் அவர். மூத்த பத்திரிகையாளர் 'துக்ளக்' ரமேஷ், ‘’ரஜினிகாந்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அத்தனை வார்த்தைகளையும் நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். அவருடைய உணர்வுகளை நான் மதிக்கிறேன். ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் கடைசியாக நடத்திய ஆலோசனையில் இதுபோன்ற ஒரு பிரச்னையை விரிவாக விளக்கியிருந்தார். தான் புறப்பட்டு பிரச்சாரத்திற்கு வரும்போது தன்னால் மக்களுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதும், தன்னுடைய சிந்தனையில் மேலோங்கி இருப்பதாக இந்த ஆலோசனையில் குறிப்பிட்டிருந்தார். இதை எல்லாம் தாண்டிதான் அவர் அரசியலுக்கு வருவது என உறுதியாக முடிவெடுத்தார். ஆனால், இப்போதைய சூழலில் மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி செயல்பட முற்பட்டால் கடுமையான பாதிப்பை சந்திக்ககூடும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே, அவரது உடல்நல ஆரோக்கியம் என்பது முக்கியம் என்று பார்க்கிறேன். ரஜினிகாந்த் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை. இந்த சூழலில் தமிழ்நாட்டு அரசியலில் ரஜினிகாந்தின் பங்களிப்பு இல்லை என்ற துரதிர்ஷ்டவசமான நிலையை கொரோனா தோற்றுவித்து விட்டது. அதேசமயம் இரு பெரிய கட்சிகள் ரஜினிகாந்த் என்ன செய்யப் போகிறார் யாருடன் அணி சேரப் போகிறார் என்ற பதற்றத்தில் இருந்தன. ஆனால் அந்த கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய விடுதலை கிடைத்துள்ளது’’என்கிறார் அவர்.
http://dlvr.it/RpY4LN
Tuesday 29 December 2020
Home »
» ரஜினியின் முடிவு... "இரு பெரிய கட்சிகளுக்கு விடுதலை!" - மூத்த பத்திரிகையாளர்கள் பார்வை