கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8, 10 மற்றும் 14-ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக நடந்தது. வாக்குகள் கடந்த 16-ம் தேதி எண்ணப்பட்டன. அதில் ஆளும் சி.பி.எம் அதிக இடங்களில் வென்று எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. கேரள தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 சீட்டுகளில், சி.பி.எம் 53 சீட்டுகளை வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது. பா.ஜ.க 35 சீட்டுகளையும், காங்கிரஸ் 10 சீட்டுகளையும் பிடித்தன. கேரள உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவு இளம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். முதலில் சி.பி.எம் கட்சி கல்லூரி மாணவிகள் உள்ளிட்டவர்களை களம் இறக்கியது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இளம் வேட்பாளர்களை அதிக அளவில் களம் இறக்கின. நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்டவைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகள் சேர்மன் பதவிக்காக கவுன்சிலர்களைத் தேர்வு செய்து வருகின்றன.ஆர்யா ராஜேந்திரன்
அதன்படி திருவனந்தபுரம் மாநகராட்சி சேர்மனாக 21 வயதான ஆர்யா ராஜேந்திரனை சி.பி.எம் மாவட்டக்குழு தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் ஆர்யா ராஜேந்திரன். எஸ்.எஃப்.ஐ மாநிலகுழு உறுப்பினராகவும், சி.பி.எம் கட்சியின் சிறுவர்கள் அமைப்பான பாலசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளார். முடவன்முகல் வார்டு கவுன்சிலரான இவரது தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். தாய் ஸ்ரீலதா எல்.ஐ.சி ஏஜெண்டாகவும் உள்ளார்.
Also Read: கேரள உள்ளாட்சித் தேர்தல் : `தங்கக் கடத்தல்’ தகதகக்கவில்லை... எப்படி வென்றது இடது ஜனநாயக முன்னணி?
இதுகுறித்து ஆர்யா ராஜேந்திரன் கூறுகையில்,``மேயர் பொறுப்பு குறித்து எனக்கு இன்னும் முறைப்படி அறிவிப்பு வரவில்லை. படிப்புடன் சேர்ந்து கவுன்சிலர் பணியையும் சிறப்பாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்பது எனது எனது ஆசை. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எனது தந்தை கேசவரோடு சி.பி.எம் கிளை உறுப்பினராக இருக்கிறார். அதனால் நான் கட்சியில் பொறுப்பெடுத்து வேலை செய்வதற்கு தந்தை உறுதுணையாக இருந்தார்.திருவனந்தபுரம் மேயர் - ஆர்யா ராஜேந்திரன்
கல்லூரியில் இப்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் நேரத்தில் மூன்று தேர்வுகள் நடந்தன. அவற்றை எழுதியிருக்கிறேன். படிப்பைத் தொடர்வதுடன், மக்கள் பணியும் செய்வேன். திருவனந்தபுரம் மாநகராட்சியில் குப்பைகளைக் கையாளுவது, ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டுவருவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்" என்றார்.
http://dlvr.it/RpL5bD
Friday 25 December 2020
Home »
» `நாட்டின் இளம்வயது மேயர்!’ - திருவனந்தபுரம் மாநகராட்சியில் பதவியேற்கும் 21 வயதுக் கல்லூரி மாணவி