நல்லவேளை - ஜஸ்ட் மிஸ் என்று சொல்லத் தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் நான் என்னுடைய லைசென்ஸைப் புதுப்பித்தேன் (Renewal). இந்த ப்ராசஸ் மிகவும் எளிதாகவே இருந்தது. டிரைவிங் ஸ்கூல் மூலம் போனால், இன்னும் எளிதாக இருக்கும். புகைப்படம் எடுக்க மட்டும் ஆர்டிஓ அலுவலகம் போனால் போதும்.
டிரைவிங் லைசென்ஸ் சம்பந்தமாகப் புதுப்புதுச் சட்டங்களை இறக்கிக் கொண்டிருக்கிறது அரசு. ஓட்டுநர் உரிமம் எடுக்க ஆர்டிஓ அலுவலகம் செல்லத் தேவையில்லை; அரசு அங்கீகாரம் பெற்ற டிரைவிங் ஸ்கூல்கள் மூலமே லைசென்ஸ் விண்ணப்பிக்கலாம்; வாங்கிக் கொள்ளலாம் என்றொரு சட்டம் வரவேற்கத்தக்கதாகவே இருந்தது. அதாவது - ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் நடத்தப்படும் பயிற்சியில் நீங்கள் பாஸ் ஆனால், ஒரு சான்றிதழ் தருவார்கள். அந்த சர்ட்டிஃபிகேட்டை பரிவாஹன் ஆப்பில் ஏற்றி, ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம் எனும் சட்டம் கொண்டு வந்தார்கள். இது மக்களுக்கு எளிதுதான்; ஆனால், இதற்கு டிரைவிங் பயிற்சிப் பள்ளிகளுக்கு 1 முதல் 2 ஏக்கர் வரை நிலம் சொந்தமாக இருக்க வேண்டும் எனும் விதிமுறை டிரைவிங் ஸ்கூல் ஓனர்களுக்குக் கொஞ்சம் கதிகலங்கவே செய்கிறது. Driving School
இப்போது, டிரைவிங் லைசென்ஸ் சம்பந்தமாக இன்னும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது அரசு. அதாவது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் அவசியம். அப்படியிருந்தால் மட்டுமே லைசென்ஸ் கிடைக்கும். அதுவும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். இது புதிதாக எடுப்பவர்களுக்கு மட்டுமில்லை; டிரைவிங் லைசென்ஸைப் புதுப்பிப்பவர்களுக்கும் இந்தப் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் பொருந்தும். அதைத்தான் நான் ஜஸ்ட் மிஸ் என்று சொன்னேன். பரிவாஹன் வலைதளத்தில் இதற்கென Form 1A என்கிற விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, சப்மிட் செய்ய வேண்டும். 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு Form 1.
எதற்கு இந்தப் புதுப் புதுச் சட்டங்கள்? அண்மையில் சில பகுதிகளில் புதிய ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நபர்கள், போலியான சான்றிதழைப் பதிவேற்றம் செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தப் போலி ஆவணங்கள் பதிவேற்றம் செய்வதைத் தடுக்கும் பொருட்டுதான் இந்தப் புதுச் சட்டம் என்கிறார்கள். RTO
அதன்படி, ஓட்டுநர் உரிமம் கோரி ஒருவர் விண்ணப்பிக்க சாரதி மென்பொருள் வழியாகப் பதிவேற்றம் செய்யும்போது, அவர்கள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவரிடம் பெறப்பட்ட முறையான மருத்துவச் சான்றுகளை மட்டும்தான் பதிவேற்றம் செய்ய முடியும்படி சில அப்டேட்களைச் செய்திருக்கிறது அரசு. அப்படியென்றால், மருத்துவர்களுக்கும் இதில் கொஞ்சம் வேலை இருக்கிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள், தங்கள் பெயர்களை மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து, அந்தப் பதிவு எண்ணை சாரதி மென்பொருளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த மருத்துவர்களின் லிஸ்ட் சாரதி ஆன்லைன் போர்ட்டலில் வெளியிடப்படும். இப்படிப் பதிவு செய்த மருத்துவர்களிடம் சான்றிதழ் வாங்கினால் மட்டும்தான், உங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைக்கும்.
நீங்கள் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பம் செய்திருப்பீர்கள்தானே! அந்த விண்ணப்பப் பதிவு எண்ணை, மருத்துவரிடம் சமர்ப்பித்து, அவரிடம் ஒரு பாடி செக்அப் செய்து கொள்ள வேண்டும். அவராகப் பார்த்து, ‛வண்டி ஓட்டுவதற்கு உங்க பாடி ஓகே’ எனும் ரீதியில் உங்களுக்குச் சான்றிதழ் வழங்கிப் பதிவேற்றம் செய்தால்தான் உங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைக்கும்! mParivahanஎல்லாம் ஓகேதான்! ஆர்டிஓ ஆபீஸ்ல லஞ்சம் குறைஞ்சுடும்; போக்குவரத்து அதிகாரிகள் போய், மருத்துவர்களிடம் லஞ்சம் பரவாமல் இருக்க வேண்டுமே!
http://dlvr.it/T89CgC
Wednesday 12 June 2024
Home »
» Driving License: 40 வயசுக்கு மேல ஆச்சா? லைசென்ஸ் எடுக்க/புதுப்பிக்க இனி இம்புட்டு வேலை பார்க்கணும்!