இந்த 3 தொகுதிகளிலும் போட்டியிட அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பாளர்களுக்கு, கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து படிவம் பி வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதில் இடது கையின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பி. படிவத்தில் ஜெயலலிதாவின் கை ரேகை பதியப்பட்டது பெரும் சர்ச்சையை தமிழக அரசியல் சூழலில் எழுந்தது. அதற்கு, ஜெயலலிதா கையெழுத்து இடுவதற்கு பதிலாக கைநாட்டு வைக்க அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. அதெப்படி மின்னல் வேகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மட்டும் அனுமதி தரமுடியும் என்றும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், 3 தொகுதி தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, அவசர கதியில் அதிமுக பொதுச்செயலாளரிடமிருந்து பி படிவம் பெறப்படவில்லை என்றும், பி படிவம் கடந்த 25ம் தேதி அனுப்பப்பட்டு, 27ம் தேதி பெறப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.