இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 8 அதிகாரிகள் உளவாளிகளாகச் செயல்பட்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த மெஹ்மூத் அக்தர் என்பவர் இந்தியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டார். டெல்லி சாணக்யபுரி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், தூதரக உறவு காரணமாக விடுவிக்கப்பட்டார்.
இதன்காரணமாக அவர் உள்பட பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய 6 பேர் கடந்த புதன்கிழமை வெளியேறினர். மேலும், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து இந்தியத் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த சுர்ஜீத் சிங் என்ற அதிகாரியை பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அந்நாட்டு அரசு வெளியேற்றியது.
மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 8 அலுவலர்கள் இந்திய உளவு அமைப்பான ’ரா’ மற்றும் புலனாய்வுத் துறைக்காக உளவு பார்த்ததாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியானது. வியன்னா ஒப்பந்தத்தை மீறி இந்தியா செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தான், இந்திய தூதரக அதிகாரிகள் 8 பேரின் புகைப்படங்களை, அவர்களின் பெயர்களோடு அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன. குறிப்பாக, வர்த்தகப் பிரிவு செயலாளராக பதவி வகித்த ராஜேஷ் குமார் அக்னிகோத்ரி, ‘ரா’ அமைப்பின் இஸ்லாமாபாத் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாக பாகிஸ்தானின் டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல்களை பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்தியா, பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், தூதரக அதிகாரிகளின் பெயரை வெளியிட்டது கடும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார். இந்தநிலையில், இஸ்லாமாபாத்தில் பணியாற்றும் 8 தூதர்களை, அவர்களின் பாதுகாப்பு கருதி திரும்பப்பெற இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.