விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தை அடுத்த நவமால்மருதூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தப் பகுதியில் சுமார் 2.5 மீட்டர் அகலம் கொண்ட கழிவுநீர் வாய்க்கால் ஒன்று செல்கிறது. இதன் நடுவே செல்வதாகக் கூறப்படும் குடிநீர்க் குழாயில் கழிவுநீர் கலந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நீரைக் குடித்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரைத் தொடர்ந்து மற்றொருவர் எனச் சுமார் 20 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே பாதிக்கப்பட்டவர்கள்... கண்டமங்கலம், அரியூர், விழுப்புரம் அரசு மருத்துவமனைகள்; புதுவை ஜிப்மர் மருத்துவமனை, முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.கழிவுநீர் கலந்த குடிநீர்கழிவுநீர்த் தேக்கமான காகுப்பம் ஏரி... களமிறங்கிய கலெக்டர்! - ஜூ.வி ஆக்ஷன்
இதையடுத்து, கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் நடமாடும் மருத்துவக்குழுவினர் அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்று அந்த மக்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நவமால்மருதூர் கிராமத்தில் கடந்த வாரம் கோயில் திருவிழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக கடலூர் மாவட்டம், செல்லாங்குப்பத்தை சேர்ந்த ஷியாமளா (44) என்பவர் நவமால்மருதூர் கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறார். கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் குடிநீரை அவரும் குடித்ததால், உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அங்கு அவருக்கு சிகிச்சை பயனளிக்காமல் போகவே, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அங்கு அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, நேற்று காலை கண்டமங்கலம் ரயில் நிலையம் அருகே அவரின் உறவினர்கள், நவமால்மருதூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஷியாமளா உட்பட முண்டியம்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்றவர்களுக்கும் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்து நேற்று மாலை அதே பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஷியாமளாவிழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள்; கவனிக்குமா அரசு?!
இந்த நிலையில், இன்று காலை ஷியாமளா உயிரிழந்ததாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், "அவர் உயிரிழக்கவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கிறார்" என முண்டியம்பாக்கம் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் உறவினர்கள் சாலை மறியல் செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட அனிச்சம்பாளையத்தில் கட்டப்பட்டிருக்கும் மொத்த மீன் விற்பனை அங்காடியைத் திறந்துவைத்தார் அமைச்சர் பொன்முடி. அப்போது இந்த நவமால்மருதூர் சம்பவம் தொடர்பாக தலைமை இடத்திலிருந்து அவருக்கு போனில் அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து சற்றுத் தொலைவாகச் சென்று பேசியவர், திரும்பி வந்து மாவட்ட ஆட்சியர் பழனியிடம் பேசினார். அப்போது, "அந்த ஊராட்சியில் சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்யுங்கள்" எனக் கோபமாகக் கூறினாராம். அங்கிருந்த நேராக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற பொன்முடி, கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தி சிகிச்சை பெற்றுவருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மாவட்ட ஆட்சியர் பழனியிடம் பேசும் பொன்முடி
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "குடிதண்ணீர் குழாயில் ஓட்டை விழுந்து சாக்கடை நீர் கலந்ததாகச் சொல்கிறார்கள். அதை அருந்திய 20 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் உதவியோடு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 16 பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்ட நிலையில், ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையிலும், மீதி மூன்று பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அந்த மூன்று பேரில் ஒருவர் மட்டும் அபாயநிலையில் இருப்பதாகத் தெரிகிறது. அவர் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருக்கிறார். 'பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு நல்ல மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக்கொடுங்கள்' என முதலமைச்சர் எனக்கு ஆணையிட்டதன் அடிப்படையில், தற்போது அவர்களை நேரில் வந்து பார்த்தோம்.
மேலும், இந்தச் சூழலுக்கு காரணமாக இருந்த ஊராட்சி செயலாளரை மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்திருக்கிறார். அந்த ஊரிலுள்ள குடிநீர்க் குழாய்களும் புதுப்பிக்கப்பட்டு, விரைவாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இனி இது போன்று எந்த கிராமத்திலும் நடைபெறாமல் இருப்பதற்காக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களுடைய மாவட்டக் கழக திமுக சார்பில் தலா 10,000 ரூபாய் கொடுத்திருக்கிறோம். சிகிச்சையில் உள்ளோருக்கு உரிய சிகிச்சை அளித்திடும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அந்த கிராமத்திலும் சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றுவருகிறது. ஊராட்சி மன்றத் தலைவரையும் இணைந்து பணியாற்றும்படிச் சொல்லியிருக்கிறோம்" என்றார். செய்தியாளர்களைச் சந்தித்த பொன்முடி
மேலும், நவமால்மருதூர் கிராமத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படும் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீர்; தடுப்பு நடவடிக்கை என்ன?! - ஆய்வு மேற்கொண்ட ஆணையர்
http://dlvr.it/SvYQZk
Sunday 3 September 2023
Home »
» குடிநீரில் கலந்த கழிவுநீர்: `அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்யுங்க’ - கொதித்த பொன்முடி; நடந்தது என்ன?!