நெல்லை மாவட்டம், பருத்திப்பாடு பஞ்சாயத்துக்கு உட்பட்டது ஆணைபுரம் கிராமம். விவசாயம் மற்றும் கூலி வேலை செய்யும் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், 500-க்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இந்த கிராமத்துக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, 15 நாள்கள் முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
எப்போதாவது கிடைக்கும் குடிநீரும் போதுமான அளவில் கிடைப்பதில்லை என ஆணைகுளம் கிராம மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். குடிநீருக்காக பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை இருப்பதாகத் தெரிவிக்கும் கிராமத்தினர், இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கிறார்கள்.
அதிகாரிகளை நேரில் சந்தித்து பலமுறை வலியுறுத்தியும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், இன்று தங்கள் கிராமத்தின் நடுவில் ஊருக்குப் பொதுவான இடத்தில் உள்ள ஆலமரத்தில் காலிக் குடங்களை தூக்கில் தொங்கவிடுவதுபோல கட்டித் தொங்க வைத்தனர். சாலையோரத்தில் இருந்த சாலையில் பல வண்ணங்களில் காலிக் குடங்கள் தொங்கவிடப்பட்டு இருந்ததால், அந்த வழியாகச் சென்றவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தபடி பயணித்தனர்.
பொதுமக்களின் இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், அரசு அதிகாரிகள் ஒருவரும் எட்டிக்கூட பார்க்கவில்லை என கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இது குறித்து பேசிய கிராமத்து பெண்கள், "எங்கள் கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் 15 அல்லது 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கிறது.
குடிநீர் கோரி ஆட்சியரிடமும் யூனியன் அலுவலகத்திலும் அதிகாரிகளை நேரில் சந்தித்து பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த அதிகாரியும் எங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் சில வாரங்களுக்கு முன்பு கிராம மக்கள் அனைவரும் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நாங்கள் போராட்டம் நடத்தியபோது நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீஸார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆணைபுரம் கிராமத்துக்கு சீரான குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டத்தைக் கைவிட்டோம்.
ஆனாலும் இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. நாங்கள் எத்தனையோ முறை அதிகாரிகளிடம் மன்றாடிப் பார்த்துவிட்டோம். ஆனால் எங்களின் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. அதனால்தான் எங்களின் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக காலிக் குடங்களை மரத்தில் கயிறு கட்டி தொங்கவிட்டோம்.
எங்கள் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் இன்று வரை குடிதண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் நாங்கள்படும் சிரமம் சொல்லி முடியாது. எப்போதாவது வரக்கூடிய தண்ணீரும் 10 முதல் 15 குடங்கள் மட்டுமே கிடைக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் எங்கள் ஊரில் இருந்த ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் கிடைத்து வந்தது.
தற்போது அதுவும் பழுது ஏற்பட்டு விட்டதால் அதை சரிசெய்யவும் அதிகாரிகள் முன்வரவில்லை. அதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இரண்டு மாதங்கள் ஆகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
அதிகாரிகளிடம் பல்முறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாததால் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இனியாவது எங்களின் அடிப்படை வசதி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்" என்றார்கள். `கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ஐ கேளுங்க!' - குடிநீர் பிரச்னையில் அமைச்சரைக் கைநீட்டும் அருப்புக்கோட்டை ஆணையர்
http://dlvr.it/SvwP1X
Monday, 11 September 2023
Home »
» நெல்லை: குடிநீர் கிடைப்பதில் சிக்கல்; காலிக் குடங்களை மரத்தில் தொங்கவிட்ட கிராம மக்கள்!