நடிகர் விஷால், தனது `விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனத்துக்காக சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனின் `கோபுரம் ஃபிலிம்ஸ்' நிறுவனத்திடம் பெற்ற 21.29 கோடி ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்தும்வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளையும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஆனால் அதை மீறி, `வீரமே வாகை சூடும்' என்ற படத்தை வெளியிட்டதாக, விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.வீரமே வாகை சூடும்
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உறுதிசெய்த இரு நீதிபதிகள் அமர்வு, ``தொகையைச் செலுத்தாவிட்டால், தனி நீதிபதி முன்பிருக்கும் வழக்கில் தீர்ப்பு வரும்வரை, விஷால் தயாரிக்கும் படங்களைத் திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது" எனத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்த நிலையில், அவரது நான்கு வங்கிக் கணக்குகளின் 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான கணக்கு விவரங்களையும், விஷாலுக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள் மற்றும் ஆவணங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன உள்ளிட்ட விவரங்களுடன் செப்டம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு, விஷால் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.விஷால்
அதைத் தொடர்ந்து அன்றைய தினம் (செப்டம்பர் 19) இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால், நடிகர் விஷால் இன்று (செப்டம்பர் 22) நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி இன்று விஷால் நேரில் ஆஜரான நிலையில், ``நீதிமன்றம் உத்தரவிட்டபடி ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால், விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் எடுக்கக் கூடாது?" என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ``நீதிமன்றத்தைவிட பெரிய ஆள் என எண்ண வேண்டாம்" என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ``நீதிமன்றத்தில் அனைவரும் எப்படி கருதப்படுகின்றனரோ, அவ்வாறுதான் நீங்களும் கருதப்படுவீர்கள்" என விஷால் தரப்பிடம் அறிவுறுத்தினார். நீதிபதி பி.டி.ஆஷா
தொடர்ந்து பேசியவர், ``நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால், வழக்கறிஞர் மூலம் உத்தரவைப் பெற்றுவிடலாம் என ஒவ்வொரு மனுதாரரும் நினைக்கத் தொடங்கிவிடுவார்கள்" என்றார்.
அதையடுத்து விஷால் தரப்பில், ``வங்கியிலிருந்து ஆவணங்களைப் பெற தாமதம் ஆகிவிட்டது. அதனால் நீதிமன்றம் கேட்ட ஆவணங்கள் நேற்று ஆன்லைன் வாயிலாகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, ``நேற்று ஆன்லைனில் தாக்கல் செய்தது உறுதியாகாவிட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என எச்சரித்தார்.
விஷால் தரப்பில், ``விஷாலிடம் 3 கார்கள், 1 பைக் ஆகியவை இருக்கின்றன. இரண்டு வங்கிக் கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. விஷாலுக்குச் சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 75 வயதான தந்தையின் கிரானைட் தொழிலில் ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தின் காரணமாக அவரது வீட்டுக்கடனையும் விஷால்தான் செலுத்திக்கொண்டிருக்கிறார். அவருக்கென இருக்கும் ஒரு வீடும் அடமானத்தில் இருக்கிறது" எனக் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ``அண்ணா நகரில் இருக்கும் வீடு, விஷாலின் சொத்து விவரத்தில் சேர்க்கப்படவில்லை" என லைகா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.விஷால்
அப்போது நீதிபதி, "இவ்வளவு வருடங்களாக நடிக்கிறார். இன்னும் அவருக்கு லோன் இருப்பதாகக் கூறுகிறீர்களே?" எனக் கேள்வி எழுப்பியபோது, ``ஆம் வீட்டுக்கடன் இருக்கிறது. அண்ணா நகர் வீடு அவருடையது அல்ல, அவரின் தந்தையுடையது. அவரது கிரானைட் தொழில் நட்டம் காரணமாக, விஷால் அந்தக் கடனைச் செலுத்துகிறார்" என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அடுத்த 28 நாள்களுக்குப் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளவிருப்பதால், அடுத்த விசாரணையின்போது ஆஜராக விலக்கு அளிக்கவும் விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான விவரங்களைத் தாக்கல் செய்ய ஆறு நாள்கள் அவகாசமும் கேட்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வங்கிகளிலிருந்து கூடுதல் ஆவணங்களைப் பெறவும், நீதிமன்றம் கேட்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த விவரங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியும், விஷால் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 25-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்."முடிஞ்சா கோயிலைத் தொட்டு பாருங்க.. நான் வந்து நிப்பேன்.." - நடிகர் விஷால் பேச்சு
http://dlvr.it/SwVVmb
Saturday 23 September 2023
Home »
» ``நீதிமன்றத்தைவிட தான் `பெரிய ஆள்' என நினைக்க வேண்டாம்!" - நடிகர் விஷாலைக் கண்டித்த நீதிமன்றம்