ஜார்க்கண்ட் மாநிலம், குந்தியில் பழங்குடியினர் கௌரவ தின விழா கொண்டாட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த விழா காணொளிக் காட்சி மூலம் புதுவை கம்பன் கலையரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த விழா, புதுவை ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஏற்பாட்டில் நடந்தது. இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியுடன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ``நாட்டின் விடுதலைக்காக பழங்குடியின மக்கள் பேராடிய சான்றுகள் இருந்தாலும், அவர்கள் வெளியே தெரியவில்லை. பிரதமர் அவர்கள், பழங்குடியினரின் நலனில் அக்கறை கொண்டு, பகவான் மிர்சா முண்டா பிறந்தநாளை பழங்குடியினர் விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுத்திருக்கிறார். புதுவை மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்கு உரிய மரியாதை, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.தரையில் அமரவைக்கப்பட்ட பழங்குடியின மக்கள்
2016-ல் இருளர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் அனைத்து திட்டங்கள், வீட்டு மனைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், பல இடங்களில் வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
அவரை தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, "பழங்குடியின மக்களுக்கு பல திட்டங்களை பிரதமர் அறிவித்திருக்கிறார். அவர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் `நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற வாகனப் பிரசார இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். புதுவையில் பழங்குடியின மக்களுக்கு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பழங்குடியின மக்களுக்கு மருத்துவ வசதி, சாலை, பள்ளிகள் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதிகாரிகள் சில கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என தகவல்கள் அனுப்பியிருக்கின்றனர்.
முதலமைச்சரோடு இணைந்து புதுவை மாநில பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம். மக்கள் விவசாயம் செய்ய ஆங்கிலேயர்களை எதிர்த்து, முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் பழங்குடியின மக்கள். தெலங்கானாவில் 12 சதவிகிதம் பழங்குடியின மக்கள் இருக்கின்றனர். அவர்களில் ஆறு கிராமங்களை தத்தெடுத்து, பணிகளைச் செய்து வருகிறோம். இன்னும் அவர்களுக்கான வசதிகள் செய்துதரப்படாமல் இருக்கின்றன. பிரதமர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பழங்குடியின மக்களுக்கான பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். முத்ரா வங்கி திட்டத்தில் நான்கில் ஒருவருக்கு எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு கடன் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் கூறியிருக்கிறார். `அவர்களின் வங்கிக் கடனுக்கு சகோதரனாக நான் கியாரண்டி' எனத் தெரிவித்தார். பழங்குடியின மக்களைச் சமாதானப்படுத்தும் அதிகாரிகள், ஆட்சியர் வல்லவன்
பழங்குடியினர் தயாரிக்கும் கைவினைப் பொருள்கள் விற்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கும் பரிசுப் பொருள்களில் அதிக அளவில் பழங்குடியினர் தயாரிக்கும் பொருள்கள் இருக்கின்றன. பழங்குடியினர் வளர்ச்சிக்கு பிரதமரோடு இணைந்து புதுவை அரசும் செயல்படும்” என்று குறிப்பிட்டார்.
தரையில் அமரவைக்கப்பட்ட பழங்குடியினர்:
விழா அரங்கில் இருந்த இருக்கைகளில் பெருமளவு அதிகாரிகளே அமர்ந்திருந்ததால், விழாவுக்கு அழைத்துவரப்பட்டிருந்த பழங்குடியின மக்களுக்கு இருக்கைகள் இல்லை. அதனால், அவர்கள் தரையில் அமரவைக்கப்பட்டிருந்தனர். `ஏன் தரையில் அமர்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்ட செய்தியாளர்களிடம், ``விழாவுக்கு அழைத்து வந்தவர்கள்தான் தரையில் அமரும்படி கூறினார்கள்” என்றனர். அதைக் கேட்டு அதிர்ச்சியான பத்திரிகையாளர்கள், உடனே புகைப்படம் எடுத்தனர். அதையடுத்து அவசர அவசரமாக இருக்கைகளைக் கொண்டுவந்து அங்கு போட்ட அதிகாரிகள், பழங்குடியின மக்களை அவற்றில் அமரவைத்தனர்.
அப்போது அந்த மக்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய பழங்குடியினர் விடுதலை இயக்கத் தலைவர் ஏகாம்பரம், "பழங்குடியின மக்களுக்கு பல கிராமங்களில் பட்டா வழங்கவில்லை. ஆண்டுதோறும் விழா மட்டும் நடத்தப்படுகிறது. ஆனால், அவர்களுக்குத் தேவையான நலத்திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. இந்த விழாவுக்கு சுமார் ரூ.3 லட்சம் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த நிதியில் 4 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கலாம். பழங்குடியின அமைப்பைச் சேர்ந்தவர்களை, விழா மேடையில் அமரவைத்து கௌரவிக்கவில்லை. முத்ரா கடன் எந்தப் பழங்குடியினருக்கும் கொடுக்கவில்லை" எனக் குற்றம்சாட்டினார். அப்போது அங்கிருந்த பழங்குடியினப் பெண்களும், தங்கள் பகுதியில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். புதுச்சேரி: ``தெலங்கானாவில் என்னை யாரும் விரட்டவில்லை!” – ஆளுநர் தமிழிசை சீறுவதன் காரணம் என்ன?
அதையடுத்து அவர்களை தன்னிடம் வருமாறு அழைத்தார் ஆளுநர் தமிழிசை. ஆனால், அவர்கள் செல்ல மறுத்துவிட்டனர். அதையடுத்து ஏகாம்பரத்தை ஆளுநரிடம் வருமாறு துறைச் செயலர் கேசவன், ஆட்சியர் வல்லவன், துறை இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் அழைத்தனர். ஆனால், அவரும் செல்லவில்லை. அதையடுத்து ஆளுநர் தமிழிசை அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது பேசிய அந்த மக்கள், "மாநில அரசால் இயலாவிட்டால், மத்திய அரசு அளிக்கும் திட்டங்கள் அடிப்படையில் எங்களுக்கு உதவ வேண்டும்" என்றனர். அதற்கு, "கோரிக்கைகளை எழுதி, ஆட்சியரிடம் தாருங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்" என்று சமாதானப்படுத்தி அமரவைத்தார் ஆளுநர் தமிழிசை.
http://dlvr.it/Syv8FY
Thursday, 16 November 2023
Home »
» புதுச்சேரி: பழங்குடியின மக்களை தரையில் அமரவைத்த அதிகாரிகள்! - ஆளுநர் தமிழிசை விழாவில் நடந்தது என்ன?