புதுச்சேரி வில்லியனூர் தொகுதி தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் வில்லியனூர் மேலண்ட வீதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா கலந்துகொண்டார். அப்போது பேசிய புதுச்சேரி தி.மு.க அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எல்.ஏ சிவா, ``பல்வேறு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து புதுச்சேரியில் ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. குறிப்பாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை தேர்தலின்போது கொடுத்தார்கள். விழா மேடையில் எதிர்க்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ சிவா
அது குறித்து இதுவரை ஒருபடிகூட முன்னேறியது இல்லை. ஆனால், இன்றளவும் பொய் கூறி வருகின்றனர். மாநில அந்தஸ்துக்காக சட்டப்பேரவையில் தி.மு.க சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அரசு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதுச்சேரியிலும் மத்தியிலும் தற்போது உங்கள் ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதனால் அந்தத் தீர்மானத்தை உடனடியாக ஆளுநரிடம் கொடுத்து நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்த தீர்மானத்தை அனுப்பவில்லை.
எதையும் செய்யாமல் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றிவருகின்றீர்கள். உங்களது ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. இரட்டை இன்ஜின் போட்டு ஓட்டுவோம் எனக் கூறினீர்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. புதுச்சேரியில் இருக்கும் ஆளுநர் தமிழிசை, தமிழ்நாட்டு அரசுக்கு நிறைய யோசனைகளை கேலி, கிண்டல், நையாண்டி மூலமாகச் சொல்லிவருகிறார். தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிக்கு ரூ.1,000/- வழங்கப்படும் என தலைவர் அறிவித்தார். அது மிகப்பெரிய திட்டம். யாருக்கெல்லாம் கொடுக்கலாம் என ஆலோசித்துவருகின்றனர். தமிழிசை செளந்தரராஜன்
ஆனால், அதற்குள் ’புதுச்சேரியில் நாங்கள் ரூ.1,000/- உதவித் தொகையை அறிவித்து கொடுத்துவிட்டோம் என ஆளுநர் தமிழிசை கூறுகிறார். வெறும் ரூ.1.33 கோடியில் 13,000 பேருக்கு மட்டும் ரூ.1,000 கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு யாருக்கும் கொடுக்கவில்லை. ஆனால் ‘நாங்கள் புதுச்சேரியில் கொடுத்துவிட்டோம். தமிழகத்தில் நீங்கள் எப்போது அறிவித்தீர்களோ அப்போதிருந்து முன் தேதியிட்டு கொடுப்பீர்களா’ என கேட்கிறார் ஆளுநர் தமிழிசை. நான் அவரைப் பார்த்துக் கேட்கிறேன். புதுச்சேரியில் இதன் பிறகு புதியதாகச் சேர்க்கும் பயனாளிகளுக்கும் அறிவித்த தேதியிலிருந்து சேர்த்துக்கொடுப்பீர்களா?
அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் 7,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 40 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பொதுப்பணித்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.18,000/- ஊதியம் உயர்த்தப்பட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுபோல் பல பிரச்னைகள் இருக்கின்றன. அதையெல்லாம் சரிசெய்ய உங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை வைக்கவில்லை. கேபினெட்டில் முடிவுசெய்யவில்லை. ஆனால், `பெண் குழந்தைகளுக்காக ரூ.50,000 வழங்கப்படும்' என அறிவித்தீர்கள். 22 வருடங்கள் கழித்து அவர்களுக்கு எத்தனை லட்சம் வரும் என்பதைக்கூட உங்களால் சொல்ல முடியவில்லை. கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
`துறைமுகத்தில் கப்பல் வந்துவிட்டது, இனி எந்தப் பிரச்னையும் இல்லை' என ஆளுநர் கூறினார். ஒரு டன்னுக்கு ரூ.1 என வசூலித்து தனியாருக்கு ஒட்டுமொத்த துறைமுகத்தையும் தாரைவார்த்துக் கொடுத்திருக்கின்றனர். அதானி கப்பல்தான் வருகிறது. அதில் ஊழல் நடக்கிறது என ஊரே கூறுகிறது. இதற்குகூட ஆளுநர் பதில் கூறுவதில்லை. தமிழிசை அவர்கள் ஆளுநர் பதவியிலிருந்து அரசியல்வாதியாக மாறிவிட்டார். புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் என்று இதுவரை அவருக்கு மரியாதை கொடுத்திருந்தோம். ஆனால், நீங்கள் பக்காவாக ரோட்டில் இறங்கி அரசியல் பேசுகிறீர்கள்.
அதனால் நாங்களும் அவரை முழு அரசியல்வாதியாக நினைத்து கேள்விகளைக் கேட்கிறோம். அதற்கு பதில் கூறுங்கள். `புதுச்சேரி மாநிலத்தின் கடன் தள்ளுபடி செய்யப்படும்' எனக் கூறினீர்கள். இதுவரை எவ்வளவு கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறீர்கள். `ரேஷன் கடையைத் திறந்து அனைத்தும் கொடுப்போம்' எனக் கூறினீர்கள். ஆனால், ரேஷன் கடையே இல்லாத மாநிலமாக புதுச்சேரி இருக்கிறது. ஜிப்மருக்கு எதிராகப் போராட்டம் நடத்தும்போதெல்லாம் ஜிப்மருக்குச் சென்று ஆய்வுசெய்துவிட்டு, வெளியே வந்து எல்லாம் சரியாக இருக்கிறது, கட்டணம் ஏதும் வாங்கப்படுவதில்லை எனக் கூறுகிறீர்கள். இதுவரை ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ சீட்டை உயர்த்திக் கொடுத்திருக்கிறீர்களா? `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், ரூ.5 கோடி கைமாறியிருக்கிறது!' – சி.பி.ஐ விசாரணை கோரும் நாராயணசாமி
புதுச்சேரி மாநில மக்களின் வேலைவாய்ப்பு அங்கு பறிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தடுத்திருக்கிறீர்களா... `மருந்துகள் இல்லை. வெளியே சென்று வாங்கிக்கொள்ளுங்கள்' எனக் கூறுகிறார்கள். மருந்துகள் வாங்கிக் கொடுத்திருக்கிறீர்களா இதுவரை இல்லை. புதுச்சேரியில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.100 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக நான் கூறுகிறேன். ஊழல் நடக்கவில்லை என நீங்கள் கூறுங்கள். ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை நாங்கள் தருகிறோம். முழுக்க முழுக்க பொய் சொல்லக்கூடிய அரசாங்கம்தான் தற்போது புதுச்சேரியில் இருக்கிறது. பொய்களைச் சொல்லி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள்” என்றார்.
http://dlvr.it/SsS5S8
Thursday 20 July 2023
Home »
» `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.100 கோடி ஊழல்; தமிழிசை அரசியல்வாதியாகிவிட்டார்!’ - தாக்கும் திமுக