அனைவருக்கும் பசுமை வணக்கம்!
இந்தியாவின் பிரபல மசாலா நிறுவனங்களின் சிலவற்றின் மசாலாக்களில் உயிருக்கு ஆபத்தான ‘எத்தீலின் ஆக்சைடு’ இருப்பதாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள், இந்திய மசாலா பொருள்கள் குறித்த விசாரணையிலும் இறங்கியுள்ளன.
மேலோட்டமாக வாசித்தால், ‘பயிர்களுக்கு விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி விஷம், மசாலா பொருள்களில் கலந்துவிட்டது’ என்பது போன்ற தோற்றம் ஏற்படும். உண்மையில் நடந்தது வேறு.
மசாலாக்கள் நீண்ட நாள்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக, எத்திலீன் ஆக்சைடு ரசாயனத்தை இந்த நிறுவனங்கள் சேர்த்துள்ளன. அதாவது, மத்திய அரசின் வழிகாட்டலை மீறி, அளவுக்கு அதிகமாக ரசாயனத்தை கலந்துள்ளன, லாப நோக்கோடு!
எத்திலீன் ஆக்சைடு எனும் ரசாயனமானது, புற்றுநோயை உண்டாக்கும் ‘கார்சினோஜன்’ வகையைச் சேர்ந்தது என்று புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் மருத்துவ நிறுவனங்கள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. ‘இதை உட்கொண்டால் அதீத உடல் உபாதைகள், மார்பகப் புற்றுநோய்கூட வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன’ என்றும் அவை எச்சரிக்கின்றன.
இந்தக் காரணங்களால்தான், இந்திய மசாலா விற்பனைக்கு ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் தடை விதித்துள்ளன. அவையெல்லாம் மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட அரசுகள். நம் மத்திய அரசோ... நிறுவனங்களின் நலனில் அல்லவா எப்போதுமே அக்கறை கொண்டதாக இருக்கிறது. ஆம், அதே ரசாயனம் சேர்க்கப்பட்ட மசாலாக்கள் இன்னும் இங்கே விற்பனை செய்யப்படும்போது, இப்படித்தானே சொல்ல முடியும்!
இதற்கிடையே, ‘மூலிகை மற்றும் மசாலா பொருள்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவை, 10 மடங்கு வரை அதிகரித்துக்கொள்ள எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், அனுமதித்திருக்கிறது’ என்றொரு செய்தி, திடீரென காட்டுத்தீயாகப் பரவ, பதற்றம் பற்றிக் கொண்டது.
இதையடுத்து, ‘‘அதெல்லாம் கிடையாது. அரசின் வழிகாட்டல், சர்வதேச அளவீடுகளை வைத்து, அவ்வப்போது ஒவ்வோர் உணவுப் பொருளுக்கும், பூச்சிக்கொல்லி எச்சம் குறிப்பிட்ட அளவில் இருக்கலாம் என்று முடிவு செய்வோம். இது வழக்கமானதுதான். அச்சப்பட எதுவுமில்லை’’ என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆனால், என்ன உண்மை என்பது இயற்கைக்கே வெளிச்சம்.
மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தீங்கு ஏற்படும் என்றுதான் ‘பூச்சிக்கொல்லி நஞ்சு’க்கு எதிராக முழக்கங்கள் கேட்கின்றன. இயற்கை வழி வேளாண்மை உலகம் முழுக்கவே முன்மொழியப்படுகிறது.
நஞ்சில்லா உணவுக்கான சந்தை வாய்ப்பு, உலக அளவில் பெருகி வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல், பூச்சிக்கொல்லி விஷத்துக்கு தொடர்ந்து வக்காலத்து வாங்குவது, நல்ல அரசுக்கு அழகல்ல!
-ஆசிரியர்
http://dlvr.it/T6gNLh
Friday 10 May 2024
Home »
» பூச்சிக்கொல்லி மசாலா... நல்ல அரசுக்கு அழகல்ல!