குஜராத் மாநிலத்தில், 2002-ல் அப்போதைய முதலமைச்சர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நிகழ்ந்த கோத்ரா ரயில் சம்பவமும், அதன்பின் நடந்த கலவரமும் இந்திய வரலாற்றின் அழியா கறுப்பு பக்கங்களாக இருக்கிறது. இந்தக் கலவரத்தில் மட்டும், 700-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், 250-க்கும் மேற்பட்ட இந்துக்களும் உயிரிழந்தனர். அதிலும் குறிப்பாக, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஐந்து மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு, கலவரக்காரர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.பில்கிஸ் பானு வழக்கு
இந்த சம்பவத்தின்போது, அவரின் மூன்று வயது குழந்தை உட்பட அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இந்த சம்பவம் வெளியே தெரியவந்து, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 2008-ல் பில்கிஸ் பானுவுக்கு நீதி கிடைக்கும் வகையில், இந்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதோடு, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், அரசு வேலையும், பாதுகாப்பான வீடும் குஜராத் அரசு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், பில்கிஸ் பானுவுக்கு கிடைத்த நீதி கானல் நீராகும் வகையில், அந்த 11 குற்றவாளிகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட நன்னடத்தைப் பெயரில் 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு அந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்தது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமை வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளை, 14 ஆண்டுகளில் குஜராத் அரசு தாமாக முன்வந்து விடுதலை செய்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. பா.ஜ.க அரசுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.பில்கிஸ் பானு - Bilkis Bano
அதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்றத்தில் 11 குற்றவாளிகளின் விடுதலைக்கெதிராக மனுக்கள் குவிந்தன. குறிப்பாக, பில்கிஸ் பானு உட்பட இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு, அதன் பொதுச் செயலாளர் அன்னி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லால், சமூக ஆர்வலரும் பேராசிரியருமான ரூப் ரேகா வர்மா, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 குற்றவாளிகளையும் விடுவித்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் உத்தரவிட்டது. பின்னர், 11 நாள் விசாரணைக்குப் பிறகு அக்டோபர் 12 தேதியன்று தீர்ப்பை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.உச்ச நீதிமன்றம் - பில்கிஸ் பானு
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் 11 குற்றவாளிகளின் விடுதலைக்கெதிரான வழக்கில் இன்று தீர்ப்புக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றவாளிகளை முன்விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை எனக் கூறிய உச்ச நீதிமன்ற அமர்வு, 11 குற்றவாளிகளின் முன்விடுதலையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
தீர்ப்பை வாசித்த நீதிபதி பி.வி.நாகரத்னா, ``குற்றம் நடந்த இடத்தை விட, விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட இடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதன்படி, குற்றவாளிக்குத் தண்டனை விதித்த மாநிலத்தின் அரசே, அதில் மன்னிப்பு வழங்குவதற்கான பொருத்தமான அரசாக இருக்கும். மாறாக, குற்றம் நடந்த மாநிலத்தின் அரசு அல்ல.உச்ச நீதிமன்றம்
எனவே, நிவாரணத்துக்கான (தண்டனை குறைப்பு) விண்ணப்பங்களைப் பரிசீலிக்கவோ அல்லது அதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கவோ குஜராத் மாநில அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதற்கு முந்தைய தீர்ப்பில், இதில் மகாராஷ்டிராதான் பொருத்தமான அரசு என்று இந்த நீதிமன்றத்தில் குஜராத் அரசு அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், இந்த வாதம் நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு, குஜராத் அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை. அவர்கள், ஏன் தாக்கல் செய்யவில்லை என்பதை நாங்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம். அரசு மறுபரிசீலனை செய்ய மனு தாக்கல் செய்திருந்தால், அடுத்தடுத்த வழக்குகள் வந்திருக்காது. இந்த விவகாரத்தில், மகாராஷ்டிர அரசின் அதிகாரங்களைக் குஜராத் அரசு அபகரித்திருக்கிறது.
குஜராத் மாநிலம், குற்றவாளிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்டது. இந்த அச்சம்தான் விசாரணையை மாநிலத்துக்கு வெளியே மாற்ற இந்த நீதிமன்றம் வழிவகுத்தது. குஜராத் மாநிலம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பது, அதிகாரத்தை அபகரிப்பதற்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.குற்றவாளிகள்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பயன்படுத்தி, நிவாரணம் அளித்து, சட்ட விதிகளை மீறும் வகையில் அமைந்திருக்கிற வழக்கு இது. ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும். இங்கு இரக்கத்துக்கும், அனுதாபத்துக்கும் எந்தப் பங்கும் இல்லை. சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடிக்காமல் நீதி வழங்க முடியாது. நீதி என்பது குற்றவாளிகளின் உரிமைகளை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் உள்ளடக்கியது. எனவே, இந்த வழக்கில் 11 குற்றவாளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் சிறையில் சரணடைய வேண்டும். குற்றவாளிகளின் சுதந்திரம் பறிக்கப்படுவது என்பது நியாயமானதாகவே நாங்கள் கருதுகிறோம். குற்றம்சாட்டப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டவுடனே தங்களின் சுதந்திரத்தை அவர்கள் இழக்கின்றனர். மீண்டும், அவர்கள் நிவாரணம் பெற விரும்பினால் அதற்கு சிறையில் இருப்பது அவசியம்" என்று உத்தரவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
தேசத்தை உலுக்கிய பில்கிஸ் பானோ வழக்கில் 11 குற்றவாளிகளும் விடுதலை - எதிர்ப்பு வலுப்பது ஏன்?!
http://dlvr.it/T15qHj
Monday 8 January 2024
Home »
» Bilkis Bano: ”குஜராத் அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எடுத்துக்காட்டு!" - தீர்ப்பின் முழு விவரம்