எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சியில் அவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
1954 ம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி.
எம்ஜிஆரின் மீது இருந்த பற்றால், 1972ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து பணியாற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு, 1973 ம் ஆண்டு சிலுவம்பாளையம் கிளைக்கழகச் செயலாளர் பதவி கிடைத்தது.
1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அணியில் இருந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
1996 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப்பிறகு, 1998 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார். 2011ம் ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அந்த ஆட்சிக்காலத்தில்தான், முதன்முறையாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
2016 ஆம் ஆண்டும் 4ஆவது முறையாக எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரானார்.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
2021ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தார்.
2021ஆம் ஆண்டு தேர்தலில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 65 இடங்களைப் பெற்ற நிலையில், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார் எடப்பாடி பழனிசாமி.
இன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
http://dlvr.it/STjmBH
Monday 11 July 2022
Home »
» கிளைக்கழகச் செயலாளர் டூ பொதுச் செயலாளர் - அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கடந்துவந்த பாதை!