இந்தியாவில் நடந்துமுடிந்த 2024 பொதுத் தேர்தலில், பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. பிரதமராக நரேந்திர மோடியே தொடர்கிறார்... இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு நெருக்கடி ஏற்படும் வகையிலான பல விஷயங்கள் நடந்தேறின. அதில் எதிர்க்கட்சிகள் கையிலெடுத்த மிக முக்கிய விவகாரங்களுள் ஒன்று, `ஹிண்டன்பர்க்' அறிக்கை எனச் சொன்னால், நிச்சயம் மிகையல்ல...
கடந்த 2023-ம் ஆண்டு, இந்திய அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது `ஹிண்டன்பர்க்' அறிக்கை. அதானி குழுமம் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமெரிக்க ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு ஜனவரி மாத சமயத்தில் அறிக்கை வெளியிட்டது. பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி குழுமப் பங்குகள் கடுமையாகச் சரிந்து பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பை இழந்தன. அதானி குழுமத்துக்குப் பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்கியிருப்பதாலும், பொதுத்துறை நிறுவனங்கள் பல அதானி குழுமப் பங்குகளில் முதலீடு செய்திருப்பதாலும் அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாகவும் விஸ்வரூபம் எடுத்தது. அதானி - ஹிண்டன்பர்க் - Hindenberg
குஜராத் முதல்வராக மோடி இருந்த காலத்திலிருந்தே கௌதம் அதானிக்கும் மோடிக்கும் நெருங்கிய நட்பு இருந்து வந்தது. மோடியின் மூலம் தொழில்ரீதியான ஆதாயங்களை கௌதம் அதானி அடைந்திருப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையாண்டன.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டுமென கோரிக்கை வைத்தன. தொடர்ச்சியாக இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியும், அவ்வப்போது போராட்டங்களும் நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது. இடையில் செபி குறித்தும் ஹிண்டன்பர்க் நிறுவனம் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தது.
இந்த நிலையில், மீண்டும் `ஹிண்டன்பர்க்' என்ற வார்த்தை இந்திய அரசியலில் தற்போது மையம் கொண்டிருக்கிறது. ஹிண்டன்பர்க் அண்மையில் வெளியிட்டிருக்கும் கட்டுரை ஒன்றுதான், பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதில் பல அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை அந்த நிறுவனம் முன்வைத்திருப்பது, பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனம் ஒன்றில், செபியின் தலைவர் மாதபி பூரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக, ஹிண்டன்பர்க் நேற்றைய தினம் (10-08-2024) வெளியிட்டிருந்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறது.ஹிண்டன்பர்க்
மேலும், ``அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய கடல்சார் பங்குதாரர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை எடுக்க செபி விரும்பவில்லை... அதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச், கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி பயன்படுத்திய அதே நிதியைப் பயன்படுத்துவதில் உடந்தையாக இருப்பது, காரணமாக இருக்கலாம். செபியின் தலைவர் மாதபி பூரி புச், அதானி நிறுவனத்தின் தெளிவற்ற கடல்சார் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருந்தது, தெரியவந்திருக்கிறது. அதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இன்றுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை." என ஹிண்டர்பர்க் குறிப்பிட்டிருக்கிறது.
ஹிண்டன்பர்க் இத்தகைய தகவலை வெளியிட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கின்றன. `அதானி மெகா ஊழலின் முழு வீச்சையும் விசாரிக்க, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாக, காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ், ``2022-ல் மாதபி பச் செபியின் தலைவராகப் பொறுப்பேற்றவுடன், கௌதம் அதானியைச் சந்தித்துப் பேசியிருப்பது பல சந்தேகங்களைக் கிளப்புகிறது. அந்த நேரத்தில், அதானி பரிவர்த்தனைகளை செபி விசாரித்ததாகக் கூறப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் ” தெரிவித்திருக்கிறார்.
அதேபோல திரிணாமுல் காங்கிரஸ், "செபி தலைவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் அவரும், அவருடைய கணவரும் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் இன்டர்போலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறது.மாதபி
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் குறித்து, மாதபியும் அவரின் கணவரும், ``கடந்த பல ஆண்டுகளாக எங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும், செபியிடம் வழங்கியிருக்கிறோம். நாங்கள் தனிப்பட்ட குடிமக்களாக இருந்த காலகட்டம் உட்பட அனைத்து நிதி ஆவணங்களையும், வெளிப்படுத்துவதில் எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை. முழுமையான வெளிப்படைத்தன்மையின் நலன் கருதி, உரிய நேரத்தில் விரிவான அறிக்கையை வெளியிடுவோம். செபி அமலாக்க நடவடிக்கை எடுத்து, ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கியிருக்கும் ஹிண்டன்பர்க் ரிசர்ச், தற்போது இத்தகைய முயற்சியில் இறங்கியிருப்பது, துரதிஷ்டவசமானது” என்று தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர். அதானி விவகாரம்: செபிக்கு ஹிண்டன்பர்க் அளித்த காட்டமான பதில்... புதிதாக சிக்கிய இந்தியத் தொழிலதிபர்!
http://dlvr.it/TBmKCm
Sunday 11 August 2024
Home »
» Hindenberg: `SEBI தலைவர், அதானி தொடர்புடைய நிறுவனங்களில் பங்கு வைத்திருந்தார்..! - ஹிண்டன்பர்க்