சி.டி.ஆர்.நிர்மல்குமார்
சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஐடி பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க
“உண்மையைச் சொல்லியிருக்கிறார். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. நீட் தேர்வு விவகாரம் தொடங்கி அவர்கள் சொன்ன எல்லா விஷயங்களிலும் உருப்படியாக எதையாவது செய்திருக்கிறார்களா... கச்சத்தீவைத் தாரை வார்த்த தி.மு.க-வுக்கு, மத்தியில் வி.பி சிங் அரசு அமைந்தபோது அதை மீட்கும் வாய்ப்பு கிடைத்தது. 1997-ல் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமையைப் பெற்றுக் கொடுக்கவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த இரண்டு வாய்ப்புகளையும் உள்நோக்கத்துடன் பயன்படுத்தத் தவறியது தி.மு.க. இப்போது அதனால் பெரும் இன்னலைத் தமிழக மீனவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் படகுகள், வலைகளைப் பறித்துவைத்துக்கொண்டு அட்டூழியம் செய்கிறது இலங்கை கடற்படை. இந்த நிலையில் தி.மு.க-வின் பெரும் புள்ளிகள் பலரும் இலங்கையில் பெரும் முதலீடுகளைச் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘அதனாலோ என்னவோ... மத்திய அரசுக்கு வெறுமனே கடிதம் மட்டும் எழுதிவிட்டு, எந்த அழுத்தமும் கொடுக்காமலிருக்கிறார் முதல்வர்’ என்ற விமர்சனங்கள் இருக்கின்றன. தங்களின் சுயநலத்துக்காக மீனவர்களைப் பலிகடாவாக்கும் தி.மு.க-வை மீனவச் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது!”ஜி.மனோகரன்
ஜி.மனோகரன், மாநில மீனவரணித் துணைச் செயலாளர், தி.மு.க
“பொய் பேசிக்கொண்டிருக்கிறார் ஜெயக்குமார். கச்சத்தீவு விவகாரம் கலைஞரையும் தாண்டி நடந்த ஒன்று. அன்று தொட்டு இன்றுவரை கச்சத்தீவை மீட்க தி.மு.க போராடுவது உலகறிந்தது. அதில் கட்டுக்கதைகளைக் கிளப்பிவிட்டு, அரசியல் ஆதாயம் அடைய ஆசைப்படுகிறது அ.தி.மு.க. கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் இலங்கையால் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மிகவும் தாமதமாகவே மீட்கப்பட்டார்கள். அதேநேரத்தில், பிடிபட்ட படகுகளை மீட்க அ.தி.மு.க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்படி மீட்க முடியாத, சேதமடைந்த படகுகளுக்கு 5 லட்ச ரூபாய் வரை நிவாரணத் தொகை வழங்கி, மீனவர்களின் துயர் துடைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதுமட்டுமல்ல, கழக ஆட்சி அமைந்த பிறகு, பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகை 6 லட்சமாகவும், சிறையில் சிக்கித்தவிக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தினசரி நிவாரணத் தொகை ரூ.350-ஆகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. தி.மு.க ஆட்சியில், மீனவர்களின் நலன் காக்கப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருப்பது வரலாற்று உண்மை. ஒரு மாநில முதல்வராக ஒன்றிய அரசுக்கு அழுத்தங்களை உருவாக்கியிருக்கிறார் முதல்வர். ஆனால், மத்திய பா.ஜ.க அரசுடன் கள்ளக்கூட்டு வைத்திருக்கும் அ.தி.மு.க., ஒரு முறைகூட மத்திய அரசைக் கேள்வி கேட்கவில்லை. தங்களின் பத்தாண்டுக்கால ஆட்சியில் மீனவர் நலனுக்காக எதையுமே செய்யாமல் பொய்யான கட்டுக்கதைகளைப் பேசிவருகிறது அ.தி.மு.க!”
http://dlvr.it/TBkNjw
Saturday 10 August 2024
Home »
» “மீனவர்களைக் காக்க தமிழக அரசு எதுவும் செய்யவில்லை” என்ற ஜெயக்குமாரின் விமர்சனம்? - ஒன் பை டூ