மீண்டுமொரு ஆய்வறிக்கையை வெளியிட்டு, இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது ஹிண்டன்பர்க் நிறுவனம். கடந்த முறை அதானி நிறுவனத்தை மட்டும் குறிவைத்துக் குற்றம்சாட்டிய ஹிண்டன்பெர்க், இந்த முறை இந்தியப் பங்குச் சந்தையின் அஸ்திவாரமாக இருக்கும் செபி அமைப்பின் (இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம்) தலைவர் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது!
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியத் தொழிலதிபர் கெளதம் அதானி பங்குச் சந்தையில் முறைகேடு செய்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, பெர்முடா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் முறைகேடாக சில நிறுவனங்களில் பங்குகளை வைத்திருந்ததாகவும், இந்தியப் பங்குச் சந்தையில் அதானி குழுமப் பங்குகளின் விலையை மறைமுகமாக உயர்த்தி முறைகேடு செய்ததாகவும் முதல் அறிக்கை குற்றம்சாட்டியிருந்தது ஹிண்டன்பர்க்.அதானி - adani
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தீவிரமாகக் கையிலெடுத்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் போர்க்கொடி தூக்கின. நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தன. ஆனால், மோடி அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளைச் செபி அமைப்பு விசாரிக்கத் தொடங்கியது. அந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், செபி-ன் தலைவர் மாதபி புச் மீதே குற்றஞ்சுமத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது ஹிண்டன்பர்க்.
தற்போதைய அறிக்கையில், `அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளில் செபி அமைப்பு சரியான நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், செபி தலைவர் மாதபி புச்சுக்கும், அதானி குழுமத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பிருக்கலாம் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தோம். எங்கள் கணிப்பு சரியானதே.
வினோத் அதானி பெர்முடா, மொரிஷியஸிலுள்ள மர்மமான நிறுவனங்களில் முறைகேடாக முதலீடு செய்திருக்கிறார் என முன்னரே குற்றம்சாட்டியிருந்தோம். அதே மர்மமான நிறுவனங்களில், செபி தலைவர் மாதபி புச், அவரின் கணவர் தவால் புச் ஆகியோரும் கணக்கில் வராத முதலீடுகளை மேற்கொண்டிருக்கின்றனர்' எனக் குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக மின்னஞ்சல்கள் உள்பட சில ஆதாரங்களையும் தனது ஆய்வறிக்கையில் இணைத்திருக்கிறது ஹிண்டன்பர்க் நிறுவனம்.
இந்த நிலையில், `இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு' என மறுத்திருக்கிறது அதானி குழுமம். மாதபி, தவால் தம்பதியினரும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அதில், ``எங்கள் வாழ்க்கையும் முதலீடுகளும் திறந்த புத்தகம் போன்றது. செபியின் முழு நேர உறுப்பினனாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது, 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், நாங்கள் சில முதலீடுகளைச் செய்தோம். ஆனால், அந்த முதலீடுகளுக்கு அதானி குழுமத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை'' என்று கூறியிருக்கின்றனர்.
மேலும், தவாலின் பள்ளிக் கால நண்பர் அனில் அஹூஜா நிறுவனத்தில்தான் முதலீடு செய்ததாகவும் தங்களது மறுப்பு அறிக்கையில் புச் தம்பதி பதிவு செய்திருந்தனர். இதைப் பிடித்துக்கொண்ட ஹிண்டன்பர்க் நிறுவனம், தற்போது மேலும் சில விஷயங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறது.ஹிண்டன்பர்க்
அதில், `தவாலின் நண்பர் அனில் அஹூஜாவின் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக மாதபி ஒப்புக்கொண்டிருப்பதே, நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபணமாக்குகிறது. அனில் அஹூஜா அந்தச் சமயத்தில், அதானி குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார்' என்று குறிப்பிட்டிருக்கிறது ஹிண்டன்பர்க்.
பா.ஜ.க தலைவர் ரவி சங்கர் பிரசாத்தோ, ``ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்குக் காங்கிரஸுக்கும் தொடர்பிருக்கிறது. காங்கிரஸின் மோடி வெறுப்பு, தற்போது இந்திய வெறுப்பாக மாறியிருக்கிறது. இந்தியப் பங்குச் சந்தையைச் சீர்குலைத்து, இந்தியாவுக்கு வரும் முதலீடுகளை இவர்கள் தடுக்க நினைக்கின்றனர்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். செபி தலைவர் மாதபி பூரி புச்
`ஹிண்டன்பர்க்கின் முதல் அறிக்கை தொடர்பாக விசாரித்து வருகிறது செபி. அந்த விவகாரத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதில் சொல்ல முடியாமல், இப்போது செபிமீது பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கிறது' என பா.ஜ.க-வினர் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளோ, ``இந்த விவகாரத்தில் சாமானியர்களின் கோடிக்கணக்கான பணம் சம்பந்தப்பட்டிருக்கிறது. அதனால், உடனடியாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். செபி தலைவர் மாதபி புச் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். இந்த விவகாரத்தில், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை'' என்கின்றன. ஆனால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட பா.ஜ.க அரசு மறுத்துவிட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ``நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு ஏன் அஞ்சுகிறது... இந்த விவகாரத்தில் எதையும் மறைக்கப் பார்க்கிறதா?'' எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார். ``எதிர்க்கட்சிகளின் இந்தக் கோரிக்கைகள் பா.ஜ.க-வுக்குப் பிரச்னையோ இல்லையோ... நிச்சயம் செபி தலைவர் மாதபி புச்சுக்கு தலைவலிதான்.'' என்கிறார்கள் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/TBs4r2
Tuesday 13 August 2024
Home »
» Hindenburg-ன் எக்ஸ் பதிவு... `தலைவலி மேல் தலைவலி’ - சிக்கலில் SEBI தலைவர் மாதபி புச்?!