ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா தெலங்கானாவில் புதிய கட்சியை தொடங்கவிருப்பதாக நேற்று அறிவித்திருக்கிறார். மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி- விஜயலட்சுமி தம்பதியரின் ஐம்பதாவது திருமண நாளான நேற்று, தெலங்கானா மாநிலம் ஐதராபாத் லோட்டஸ் பாண்டிலுள்ள தனது இல்லத்தில் நல்கொண்டா மாவட்டக் கட்சி நிர்வாகிகளுடன் ஒய்.எஸ்.ஷர்மிளா ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,ஒய்.எஸ்.ஷர்மிளா
``தெலங்கானா பிரிவினைக்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திராவில் எனது தந்தை ராஜண்ணாவின் (ராஜசேகர் ரெட்டி) ராஜ்ஜியம் இருந்தது. தற்போது தெலங்கானாவில் ராஜண்ணா ராஜ்ஜியம் இல்லை. அங்கும் ராஜண்ணாவின் ராஜ்ஜியத்தைக் கொண்டு வருவேன்...கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன்'' என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஜெகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகவே தற்போது ஷர்மிளா புதிய கட்சி தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஷர்மிளாவின் இந்தப் புதிய கட்சி அறிவிப்புக்குப் பின்னால் வேறு சில ரகசியத் திட்டங்கள் இருக்கின்றன என்கின்றனர் ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் விமர்சகர்கள். அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பாக, ஆந்திர அரசியலில் இதுவரை ஷர்மிளாவின் பங்கு என்னவாக இருந்தது என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
இரண்டு முறை ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்குப் பிறகு, தன்னைத்தான் காங்கிரஸ் தலைமை முதல்வராகத் தேர்ந்தெடுக்கும் என மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தார், ராஜசேகர் ரெட்டியின் மகனும், 36 வயது இளைஞருமான ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால், ஏற்கெனவே, கட்சியைத் தாண்டி தனிப்பட்ட செல்வாக்குடன் வளர்ந்துவிட்ட ராஜசேகர் ரெட்டியை எதிர்கொள்ளச் சிரமப்பட்டதுபோல, அவர் மகனிடம் சிரமப்படக் கூடாது என முடிவெடுத்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. தொடர்ச்சியாக ஜெகனுக்கு முதல்வர் பதவியளிக்க மறுத்துவந்தது. காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை எதிர்த்து, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எனும் கட்சியைத் தொடங்கினார் ஜெகன். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் அலை, அலையாகக் குவிய ஆந்திராவின் செல்வாக்குமிக்க தலைவராக மிக விரைவில் உருவெடுத்தார்.ஜெகன் மோகன் ரெட்டி
தொடர்ச்சியாக, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கில், 2012-ல், சி.பி.ஐ அவரைக் கைதுசெய்தது. அப்போது ஜெகனுக்காக நியாயம் கேட்டு, அவரின் இளைய சகோதரி ஷர்மிளாதான், 47 நாள்கள் ஆந்திரா முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டார். ஜெகன் சிறையில் இருக்கும்போதே நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அந்தக் கட்சி வெல்ல ஷர்மிளாவும் முக்கியக் காரணமாக இருந்தார். தொடர்ந்து 2014-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 67 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெகன். அப்போதும் அண்ணனுக்குப் பக்கபலமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டார் ஷர்மிளா. தொடர்ந்து, 2019 தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆந்திராவின் முதல்வரானார் ஜெகன். இந்தத் தேர்தலிலும் ஷர்மிளாதான் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர். ஆனால், ஜெகன் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியே இருந்தார் ஷர்மிளா.
இந்தநிலையில், ஜெகனுக்கும் அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிவந்தன. ஆனால், ``நான் எப்போதும் என் அண்ணனுடன்தான் இருப்பேன். ஜெகன் வேறு, நான் வேறல்ல'' என பதிலளித்துவந்தார் ஷர்மிளா. ஆனால், முதன்முறையாக, ``கட்சி தொடங்குவது குறித்து நான் ஜெகனுடன் எதுவும் பேசவில்லை. அண்ணன் - தங்கை உறவு இன்னும் தொடர்கிறது. ஆனால், அரசியலில் என்னுடைய வழி எனக்கானது'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர், ரவிச்சந்திர ரெட்டியிடம் பேசினோம்.ரவிச்சந்திர ரெட்டி
``ஷர்மிளா கட்சி தொடங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஜெகனுக்கு இதில் துளியளவும் விருப்பமில்லை. சந்திரசேர ராவுடன் ஜெகன் மிகவும் இணக்கமாக இருக்கிறார். அவருக்குத் தொந்தரவு தரும் எந்த நடவடிக்கையையும் ஜெகன் விரும்பவில்லை. அதனால்தான், தெலங்கானாவில் கட்சி நடவடிக்கைகளை அவர் வேகப்படுத்தாமல் இருந்தார். இந்தநிலையில்தான், ஷர்மிளா தெலங்கானாவில் புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் இதில், ஜெகனுக்கு துளியளவும் விருப்பமில்லை. இது முழுக்க முழுக்க ஷர்மிளாவின் தனிப்பட்ட முடிவு'' என்கிறார் அவர். ஆனால் ஷர்மிளாவின் இந்தப் புதிய அரசியல் பயணத்துக்குப் பின்னால், வேறு சில விஷயங்கள் இருக்கின்றன என்கிறார், ஆந்திராவின் முன்னணி அரசியல் விமர்சகர் மகேஷ் காத்தி.
Also Read: நீதிபதியை எதிர்க்கும் ஜெகன்... சுற்றிவளைக்கும் வழக்குகள் காரணமா?
``ஜெகனுக்கும் ஷர்மிளாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்தால் அவர் ஆந்திராவில்தான் கட்சி தொடங்க வேண்டும். எதற்காக தெலங்கானாவில் தொடங்குகிறார்? இது முழுக்க ஜெகனின் ஒப்புதலுடன் நடைபெறும் ஒரு விஷயம்தான். ஆனால், இந்தத் திட்டத்துக்குப் பின்னால் இருப்பது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். காரணம், தெலங்கானாவில் வாழும் பெரும்பாலான ரெட்டி சமூகத்தினர் சந்திரசேகர ராவின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். அதன் காரணமாக, பலர் பா.ஜ.க-வில் சேர்ந்துவருகின்றனர். ஷர்மிளா தெலங்கானாவில் கட்சி ஆரம்பித்தால் பா.ஜ.க-வில் இருக்கும் ரெட்டிகள்கூட ஷர்மிளாவின் பக்கம் வந்துவிடுவார்கள். தெலங்கானாவில் வளர்ந்துவரும் பா.ஜ.க-வை முடக்குவதற்காகவே இப்படியொரு திட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார் சந்திரசேகர் ராவ்.மகேஷ் காத்தி
ஷர்மிளாவுக்கு, ரெட்டி சமூகத்தவர்கள் மட்டுமல்லாமல் கே.சி.ஆரின் மீது அதிருப்தியில் இருக்கும் பட்டியலின மற்றும் கிறிஸ்தவ மைனாரிட்டிகளின் ஆதரவும் கிடைக்கும். ஆரம்பத்தில், கே.சி.ஆரை எதிர்ப்பதுபோல ஷர்மிளா அரசியல் செய்வார். காலப்போக்கில் கே.சி.ஆருடன் கூட்டணிவைக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. தெலங்கானாவில் பா.ஜ.க வலிமையடையக் கூடாது என்பது மட்டுமே மூவரின் திட்டம்'' என்கிறார் அவர்.
அதேவேளையில், ஷர்மிளாவின் புதிய கட்சி விவகாரத்துக்குப் பின்னால் இருப்பதே பா.ஜ.க-தான் என்கிற தகவல்களும் சொல்லப்படுகின்றன. ``பா.ஜ.க-வின் 'பி' டீமாகத்தான் தெலங்கானாவில், ஷர்மிளாவின் கட்சி செயல்படப்போகிறது. ஜெகனின் மீதுள்ள வழக்கு விசாரணையே, பா.ஜ.க-வுடனான அவரின் இந்த அனுசரனைக்குக் காரணம். அது போகப் போகத் தெரிந்துவிடும்'' என்கிறார்கள்.
தெலுங்கு திரைப்படங்களைக் காட்டிலும் வேகமும் விறுவிறுப்புமாகச் சென்றுகொண்டிருக்கிறது ஆந்திர- தெலங்கானா அரசியல். 2023 தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்தத் தேர்தலின் முடிவுகள் வந்தால் யாருக்கு யார் பி டீம் என்பதெல்லாம் தெளிவாகத் தெரிந்துவிடும்.
http://dlvr.it/RsQ4PW
Wednesday 10 February 2021
Home »
» தெலங்கானாவில் ஜெகன் தங்கை ஷர்மிளாவின் புதிய கட்சி... ஸ்கெட்ச் கே.சி.ஆருக்கா பா.ஜ.க-வுக்கா?