
ஒரு சாதாரண கான்ஸ்டபிள், அவர், தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக கருத்துச் சொல்லி, போராடிக் கொண்டிருக்கிறார். லேட்டஸ்ட்டாக, பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருவது போல, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது; அதை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். இதனால், சசிகலாவுக்கு பொதுமக்கள் மத்தியில் எவ்வளவு கெட்டப் பெயர் தெரியுமா? இவரைக் கூட ஒன்றும் செய்ய முடியாமல், நாம் என்ன ஆட்சி-அதிகாரத்தில் இருக்கிறோம் என, அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலர், தினகரன், தேனி மாவட்டம், ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த கான்ஸ்டபிள் வேல்முருகனுக்கு எதிராக கொந்தளிக்க, அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது, தமிழக காவல்துறை.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் வேல்முருகன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர பற்றாளர். 2014ல், ஜெயலலிதா, குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீருடையிலேயே மொட்டை அடித்துக் கொண்டார். அப்போதே, ஒரு கிரிமினலுக்காக காவலர் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டு, அதை வெளிப்படையாக தெரிவிக்கலாமா என பலரும் கேள்வி எழுப்பினர். உயர் அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மட்டும் மேற்கொண்டு விட்டு, அமைதியாகி விட்டனர்.
இந்நிலையில் கடந்த டிச., 5ல், ஜெயலலிதா இறந்து விட, அதுமுதல், சசிகலாவை கடுமையாக விமர்சிப்பதிலும், திட்டி பேசுவதிலும், அதீத ஆர்வம் காட்டினார் வேல்முருகன். தேனி, நேரு சிலை அருகில் சில நாட்களுக்கு முன் வந்த வேல்முருகன், சசிகலாதான், ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்து போனதற்கு காரணம் என பேசினார். இதையடுத்து, உயர் அதிகாரிகள் அவரை, ஓடைப்பட்டியில் இருந்து, தேனி ஆயுதப் படை பிரிவுக்கு டிரான்ஸ்பர் செய்தனர். அதன் பின்பும், வேல்முருகன் அமைதியாகவில்லை. மீண்டும் மீண்டும் சசிகலாவை கடுமையாக விமர்சிக்க, உயரதிகாரிகள், அவரை எச்சரித்தனர். இதற்கிடையில், அவரை சஸ்பெண்ட் செய்தனர்.
அதன் பின்னும், வேல்முருகன், தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், தனக்கு நியாயம் கேட்டும்; ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை அமைக்கக் கேட்டும், பென்னிகுக் சிலை முன்பாக, சீருடையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, அவரை போலீசார் வலுக்கட்டயமாக கைது செய்தனர்; பின், விடுவித்தனர்.
இதனால், வேல்முருகன் மீது கடும் அதிருப்தி அடைந்த, அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன், போலீஸ் டி.ஜி.பி.,யிடம், வேல்முருகன் மீது புகார் சொல்லி, நடவடிக்கைக்குக் கோரினார். பின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் கொந்தளிக்க, வேல்முருகனை போலீசார் நீக்கி அறிவித்துள்ளனர்.
பணி நீக்க உத்தரவு, வேல்முருகன் இல்ல வாசலில், போலீசாரால் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.