Tuesday, 28 March 2017
ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., : அத்வானி
ஜெய்பூர்: தனக்கு ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான் என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.ராஜஸ்தானில், பிரம்மா குமாரிஸ் இயக்கம் துவங்கி 80 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரம்மா குமாரிஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது:
நான், கராச்சியில் தான் பிறந்தேன். ஆனால், ஒழுக்கம், நடத்தை, கல்வி ஆகியவற்றை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான், எனக்கு கற்றுத் தந்தது. நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்தது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான். தவறான காரியங்களை எப்போதும் முன்னெடுக்கக் கூடாது என்றும் ஆர்.எஸ்.எஸ்., மூலம்தான் கற்றுக் கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருவிதாங்கூர் நாணயங்கள் விற்பனை?
திருவனந்தபுரம் : கேரளாவில், திருவிதாங்கூர் மன்னர் கால நாணயங்கள் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வருவதாக புகார் எழுந்துள்ளது.கேரளாவில், திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள், தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இத்துறை சார்பில் பழங்கால நாணய கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக எடுத்துச் செல்லப்படும் நாணயங்கள் விற்கப்படுவதாகவும், அதற்கு பதில் போலி நாணயங்கள் வைக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து, கேரள பண்பாட்டுத்துறை அமைச்சர், ராமச்சந்திரன், துறை செயலர் ராணி ஜார்ஜ் ஆகியோருக்கு நாணய ஆராய்ச்சியாளர், பீனா சரசன் மனு அனுப்பினார். ராணி ஜார்ஜ் கூறுகையில், ''வெளிச் சந்தையில் விற்கப்படுபவை, தொல்பொருள் துறையிடம் உள்ள நாணயங்கள் என கூற முடியாது. துறை வசம் உள்ள நாணயங்களை படத்துடன் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.
பேனா, படகு, திராட்சை: தீபாவிற்கு எந்த சின்னம்
சென்னை: ஜெ., அண்ணன் மகள் தீபா, பேனா, படகு, திராட்சை கொத்து ஆகிய மூன்று சின்னங்களில், ஒன்றை ஒதுக்கும்படி கேட்டுள்ளார்.ஆர்.கே.நகர் தொகுதியில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார். தேர்தல் கமிஷனிடம், 'தனக்கு பேனா, படகு, திராட்சை கொத்து ஆகிய மூன்றில், ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்க வேண்டும்' என, கேட்டுள்ளார். அவருக்கான சின்னம் என்ன என்பது இன்று தெரிந்து விடும்.
தண்டையார்பேட்டை அருணாசலேஸ்வரர் தெருவில், அவர் இன்று(மார்ச்,27) மாலை பிரசாரம் துவக்குகிறார். தொடர்ந்து, 14 நாட்கள், இரவு நேர பொதுக்கூட்டங்களில் ப
ங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா
திருப்பதி: கொசுக்கள் வளர்த்தால், அபராதம், சிறை தண்டனை விதிக்கும் வகையிலான மசோதாவுக்கு, ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஆந்திரவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை, அதிநவீன கட்டமைப்புடன் அம்மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது.
புதிய நடவடிக்கை :
இந்நிலையில், கொசுக்கள் குறித்து ஆய்வு நடத்திய, அம்மாநில அதிகாரிகள் குழு, அவற்றை ஒழிக்க புதிய நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியாவதற்கு, சுற்றுப்புற சீர்கேடு மற்றும் மக்களின் அலட்சிய போக்கும் காரணமாக அமைகிறது. அதனால் வீடுகள், கடைகள், உணவகங்கள், நெடுஞ்சாலையில் உள்ள தள்ளுவண்டிகள் இவற்றின் அருகில் கொசு உற்பத்தியாகும் விதமாக, கழிவுநீர், குப்பை கூளங்கள் உள்ளிட்டவை தேங்கும்படி செய்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதற்கும் மேலும் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியானால், தினசரி, 100 ரூபாய் அப்பகுதி மக்களிடம் அபராதமாக வசூலிக்கப்படும். காலி மனைகள், கட்டுமானம் நடந்து வரும் பகுதிகள், உணவகங்கள், விடுதிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள் அருகே, கொசு உற்பத்தியாகும் வகையில், சுற்றுச்சூழல் இருந்தால், சம்பந்தப்பட்டோருக்கு, முதலில் அபராதம் விதிக்கப்படும்.
விஷ காய்ச்சல் :
அதற்கு பின்னும், அதேநிலை தொடர்ந்தால், ஒரு மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும். இது தொடர்பான புதிய மசோதாவுக்கு, ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில், இது தொடர்பான மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் டெங்கு, மலேரியா உள்ளிட்ட விஷ காய்ச்சல் முற்றிலும் பரவாமல் தடுக்க முடியும் என, ஆந்திர அரசு கருதுகிறது.
பார்லி.,யில் ஜி.எஸ்.டி., துணை மசோதாக்கள் இன்று தாக்கல்
புதுடில்லி: ஜி.எஸ்.டி., துணை மசோதாக்கள் பார்லி.,யில் இன்று(மார்ச், 27) தாக்கல் செய்யப்படவுள்ளன.நடப்பு கூட்டத்தொடரிலேயே ஜி.எஸ்.டி., மசோதாவை பார்லி.,யின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் பார்லி.,யில், ஜி.எஸ்.டி., துணை மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., மசோதா நடைமுறைக்கு வரும் என நிதியமைச்சர் அரு
ண் ஜெட்லி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆத்தூர் அருகே விபத்து; 3 பேர் பலி
ஆத்தூர்: ஆத்தூர் அருகே கூடமலை ஒத்தாலக்காடு அருகே மினி சரக்கு ஆட்டோ, சாலையோரம் நின்ற டிராக்டரில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.கெங்கவல்லி ஊரை சேர்ந்த சிலர், மினி சரக்கு ஆட்டோவில் கொல்லிமலையிலுள்ள கோவிலுக்கு சென்று திரும்புகையில், எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற டிராக்டரில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில், பெரியண்ணன் (45), அய்யாவு (60), கோவிந்தன் (60) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெ
ரியவந்துள்ளது.






